பினாங்கு •பெர்ரி சேவை தொடர்பாக தெளிவான விபரங்களை அளிப்பீர்

ஜனவரி 2021 முதல் தேதியிலிருந்து •பெர்ரி சேவைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான தகவல்களை அதன் சேவையைப் பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு அரசாங்கம் முழுமையாக வெளிப்படுத்தாமல் இருப்பது வருத்தத்தை அளிப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

உதாரணத்திற்கு, •பெர்ரி சேவையைப் பயன்படுத்தும் பாதசாரிகள் தங்கள் பயணத்திற்கான நீர்ப்பேருந்து டிக்கட்டுகளை பட்டர்வெர்த்தின் சுல்தான் அப்துல் ஹாலிம் •பெர்ரி நிறுத்தத்தில் உள்ள பயணச்சீட்டு சாவடியில் வாங்கிய பிறகு அவர்கள் தரை தளத்தில் உள்ள நீர்ப்பேருந்து நிறுத்துமிடத்தைச் சென்றடைவதற்காக மிகவும் உயரமான படிகளை ஏற/இறங்க வேண்டியுள்ளது (இப்பொழுது அதன் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன)

•பெர்ரி நிறுத்தம் பினாங்கு சென்ட்ரல் மூன்றாவது தளத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.  ஆகையால் பாதசாரிகளின் கவலை நியாயமானதுதான்.  மூத்தக் குடிகள், உடல் ஊனமூற்றோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சுல்தான் அப்துல் ஹாலிம் •பெர்ரி நிறுத்தத்தில் இலவச இடைப்போக்குவரத்து வழங்கப்பட்டாலும் கூட, பயணிகள் அதிகம் கூடும் பரபரப்பான நேரங்களில் இந்த இடைப்போக்குவரத்து சேவை பற்றாமல் போய் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியாத நிலை உருவாகும்.

தற்போதைய பயணச்சீட்டு சாவடியைத் தற்போது உள்ள இடத்திலேயே தக்கவைத்துக்கொள்ள ஒரு திட்டம் இருந்தால், நீர்ப்பேருந்தைப் பிடிக்க நீண்ட பாதையில் செல்ல வேண்டியிருக்கும் என்ற பாதசாரிகளின் அச்சத்தை பினாங்கு துறைமுக ஆணையம் தீர்த்து வைக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

கெனாங்கான் 3 மற்றும் 6 ஆகிய இரண்டு கண்ணாடியிழை நீர்ப்பேருந்துகளும் முறையே 21 மற்றும் 19 ஆண்டுகள் பழமையானவை.  இவ்வளவு பழைய ஒரு நீர்ப்பேருந்தை வாங்க முடிவு செய்தது யார்,  என்ன விலைக்கு வாங்கினர் மற்றும் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. ஏனெனில் இவ்வளவு பழைய நீர்ப்பேருந்துகளின் பராமரிப்புக்கும், பழுது பார்க்கும் பணிகளுக்கும் இன்னும் அதிகமாக செலவு செய்ய வேண்டிருக்கும்.

நீர்ப்பேருந்துகள் கப்பல்களைக் கடந்துசெல்லும்பொழுது அதன் நிலைத்தன்மை எவ்வாறு இருக்கும் என்று பயணிகளிடையே ஒரு அச்சமும் நிலவி வருகிறது.  நீர்ப்பேருந்துகளை

அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக இதனை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.

நீர்ப்பேருந்துகள் தொடர்பான தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக வெளிப்படையான தகவல்களை போக்குவரத்து அமைச்சும் பினாங்கு துறை ஆணையமும் வழங்க வேண்டும் என நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

ஊடகங்கள் இதற்கு முன்பு வெளியிட்ட முரண்பாடான அறிவிப்புகள் போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சிடையே •பெர்ரி சேவை நிறுத்தம் தொடர்பாகக் குழப்பங்களை உருவாக்கியது வேடிக்கையாக இருந்தது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி
29.12.2020