பிஸ்பெனோல் ஏ (பிபிஏ) என்பது எபோக்சி சாயம், பசை, உணவு டின்களின் உள்பூச்சு, ரசீது காகிதங்கள் என்று பலதரப்பட்ட பொருள்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இரசாயனமாகும். உணவுக்களன் மற்றும் குழந்தைப் புட்டிகளின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் போலிகார்பனட் நெகிழியிலும் பிஸ்பெனோல் ஏ உள்ளது. இந்த பிபிஏ, நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும்.
கரு, குழந்தை மற்றும் சிறார்களின் ஆரோக்கியத்தில் பிஸ்பெனோல் ஏ எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியுள்ளது. பிஸ்பெனோல் ஏ பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கரு, சிசு, சிறார்களின் புரோஸ்டேட் சுரப்பியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பிஸ்பெனோல் ஏ பாதிப்புக்கு உள்ளாகும் சிறார்களின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது. சூழ்நிலைத் தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றுதல், அதீத மனப்பதற்றம், மிகை துறுதுறுப்பு ஆகியவையும் இதில் அடங்கும். இளம் பருவத்தில் ஒருவருக்கு மூளை வேகமாக வளரும். அப்பொழுது பிஸ்பெனோல் ஏ-க்களின் இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் இது போன்ற பாதிப்புகள் நிகழுகின்றன.
கூடுதலாக, பிஸ்பெனோல் ஏ நரம்பு மண்டல பாதிப்புகளோடும் தொடர்புபடுத்தப்படுகிறது. கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு அதி முக்கியமான நரம்பியக்கடத்திகள் இயக்கம் மற்றும் நரம்பிணைப்பு இளக்கத்திற்கு இது இடையூறு விளைவிக்கும். ஒருவர் நெடுநாட்களுக்கு பிஸ்பெனோல் ஏ பாதிப்பிற்கு ஆளாகும்பொழுது அவருக்கு நரம்பு வளர்ச்சிக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
இருதய நோய், 2-ஆம் வகை நீரிழிவு, இரத்தக்கொதிப்பு ஆகியவற்றிற்குப் பிஸ்பெனோல் ஏ வித்திடலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தைச் சீர்குலைக்கும் பிஸ்பெனோல் ஏ-வின் தன்மை வளர்சிதை மாற்றங்களுக்கு இட்டுச் சென்று, பிறகு இந்த நோய் பாதிப்புகளை அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு, இருதய நோய் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணிகளான இரத்தம் அழுத்தம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை பிஸ்பெனோல் ஏ பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியாவை மற்றும் இன்னும் சில நாடுகளில் பிஸ்பெனோல் ஏ-க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக, குழந்தைப் பால் புட்டிகள், சிறார் உணவு சம்பந்தப்பட்ட பொருள் மற்றும் அவர்கள் வாயில் வைக்கும் பொருட்களில் பிஸ்பெனோல் ஏ சேர்ப்பதை நிறைய நாடுகள் தடை செய்துள்ளன.
மலேசியாவில், உணவு ஒழுங்குமுறை 1985-இன் விதிமுறை 27A-இன் படி:
(1) பிஸ்பெனோல் ஏ உள்ள குழந்தைகளுக்கான பால் புட்டிகளை யாரும் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விளம்பரம் செய்யக்கூடாது.
(2) பிஸ்பெனோல் ஏ சேர்க்கப்படாத பட்சத்தில் “பிஸ்பெனோல் ஏ இல்லாதது” என்ற அடையாள முத்திரையை பால் புட்டிகளில் பொறிக்கலாம்.
குழந்தை பால் புட்டிகளில் பிஸ்பெனோல் ஏ சேர்ப்பதை ஐரோப்பிய ஒன்றியம் 2011-இல் தடை செய்தது. குழந்தைகளின் வளர்சிதை மாற்றம் பெரியவர்களை விட இன்னும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகுவதே இதற்குக் காரணமாகும். பிஸ்பெனோல் ஏ எந்த அளவு வரைக்கும் உணவுக்குள் சென்றால் பாதிப்பு இராது என்பதனையும் ஐரோப்பிய ஒன்றியம் வரையறுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்குச் சேதம் விளைவிக்கும் அதே வேளையில், நாளமில்லா சுரப்பிகளைச் சீர்குலைக்கும் என்பதால் பிஸ்பெனோல் ஏ, தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய ஒரு பிரச்சனையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
சீனாவில் போலிகார்பனட் பால் புட்டிகளில் பிஸ்பெனோல் ஏ பயன்படுத்துவதற்கு 2011-லிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உணவு சம்பந்தமான பொருள்களில் பிஸ்பெனோல் ஏ அளவு 600 μg/kg மேற்பட்டு போகக்கூடாது என்று சட்டம் உள்ளது.
குழந்தைகளின் பொருட்களில் BPA
அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN) மேற்கொண்ட ஓர் ஆய்வில் மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளில் சிறார் பொருள்களில் பிஸ்பெனோல் ஏ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
78% மாதிரிகளில் பிஸ்பெனோல் ஏ இருந்தது: 98 மாதிரிகளில் 76-இல் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான பிஸ்பெனோல் ஏ இருந்தது. வங்காளதேசம், பூட்டான், மலேசியா, ஸ்ரீ லங்கா, தான்சானியா, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் சேகரிக்கப்பட்ட குழந்தை பால் புட்டிகள் மற்றும் சிறார் உணவு தொடர்பான பொருள்களில் போலிகார்பனட், போலிபுரோப்பிலின், இவை இரண்டும் கலந்த கலவை அல்லது சிலிகோனால் தயாரிக்கப்பட்டவையாகும்.
சோதனை செய்யப்பட்ட மலேசிய மாதிரி உற்பத்திகளில் 9 போலிகார்பனட் புட்டிகளிலும் பிஸ்பெனோல் ஏ இருப்பது கண்டுடறியப்பட்டுள்ளது. மலேசிய மாதிரிகளில் 0.3-லிருந்து 5.8 பிபிபி பிஸ்பெனோல் ஏ இருந்ததாகக் அறியப்பட்டுள்ளது.
தவறான தகவல் தரும் அடையாள முத்திரைகள்: சோதனை செய்யப்பட்ட 23 மாதிரிகளில் 14-இல் (61%) “பிஸ்பெனோல் ஏ இல்லை” அல்லது “0% பிஸ்பெனோல் ஏ” என்று பொறிக்கப்பட்டுப் பயனீட்டாளர்களுக்கு தவறான தகவல்களைத் தந்துள்ளனர். ஏனெனில், சோதனை செய்து பார்த்தபொழுது அவற்றில் உண்மையில் பிஸ்பெனோல் ஏ இருந்தது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு குழந்தை பால் புட்டி (மினிட்ரி ரிகுலர் டெக் புட்டி) மலேசிய சந்தையில் வாங்கப்பட்டது. இதில் 2.6 பிபிபி பிஸ்பெனோல் ஏ இருந்தும் “பிஸ்பெனோல் ஏ” இல்லை என்ற முத்திரை இருந்ததன் காரணமாக மலேசிய சட்டத்தை அது மீறியுள்ளது. சில தேசங்களில் உள்ள சட்ட இடைவெளிகளின் காரணமாக பிஸ்பெனோல் ஏ கோரிக்கைகள் துல்லியமானதாக இல்லை. பயனீட்டாளர்கள் நச்சுத்தன்மையற்ற, பாதுகாப்பான பொருள்களை விரும்புகின்ற காரணத்தால் உற்பத்தியாளர்கள் இலாபத்தை நோக்காகக் கொண்டு வேண்டுமென்றே தவறான தகவல்களைக் கொடுக்கின்றனர்.
சட்ட மீறல்கள்
சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. தேசிய மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்கள் பயனீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளை ஆபத்தான பொருள்களிலிருந்து பாதுகாக்கின்றன. பொருள் தயாரிப்பு தரநிலைகளை உறுதி செய்துகொள்வதன் மூலம் சந்தை நாணயம் மற்றும் நம்பிக்கையைப் பாதுகாக்கிறது. தவறான தகவல்களைக் கொண்ட முத்திரைகள் மற்றும் விதிமுறை மீறல்கள் பயனீட்டாளர்களின் நம்பிக்கைக்கு எதிரான ஒன்று என்பதோடு ஆரோக்கியச் சீர்கேடுகளையும் உருவாக்கும்.
இதர மாதிரிகளின் சட்ட தகுதி நிலை: இந்தியாவில், அதன் சட்ட விதிமுறைகளை மீறி தயாரிக்கப்பட்ட இரு வகையான பால்புட்டிகள் பூட்டானில் சந்தைப்படுத்தப்பட்டது. இந்திய செயலக தரநிலை (2015)-இன் IS 14625:2015 பிரிவின்படி குழந்தை பால்புட்டிகளில் பிஸ்பெனோல் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட பொருள்களில் பிஸ்பெனோல் ஏ சேர்க்கப்படுவது என்பது அந்தந்த தேசத்துச் சட்டவிதிமுறைகளைப் பொருத்து வேறுபடுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட சற்று அதிகமான பிஸ்பெனோல் சேர்க்கப்பட்ட பொருள்கள் இன்னொரு தேசத்தின் அளவு விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருக்குமானால் அது சட்டத்தை மீறியதாக கருதப்படமாட்டாது. பிஸ்பெனோல் ஏ விதிமுறைகளின் கட்டுக்குள் வராத சில விளையாட்டு பொம்மைகள் மற்றும் தொழிற்துறை பொருள்களில் பிஸ்பெனோல் ஏ எவ்வளவு இருந்தாலும் அது சட்டப்பூர்வமானதே. பிஸ்பெனோல் ஏ தொடர்பாகக் குறிப்பிட்ட சட்ட விதிமுறைகள் எதையும் வகுக்காத நாடுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பிஸ்பெனோல் ஏ சேர்க்கப்பட்ட பொருள்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படலாம். இன்னும் துல்லியமான, உலகளாவிய விதிமுறைகள் தேவைப்படுகிறது என்பதனை இது உணர்த்துகிறது.
ஆக அடர்த்தியான பிஸ்பெனோல் ஏ
பிரித்தெடுக்க முடிந்த பிஸ்பெனோல் ஏ: குறிப்பிட்ட சூழலில் ஒரு பொருளிலிருந்து பிஸ்பெனோல் ஏ-வை பிரித்தெடுப்பதை இது குறிக்கிறது. இது வரை ஆக அதிகமாக, சீனாவில் 50,292 ng/L, அளவு பிஸ்பெனோல் ஏ பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பொருளில் எவ்வளவு அதிகமாகப் பிஸ்பெனோல் ஏ இருக்கிறது என்றும் அந்தப் பொருளை உபயோகிக்கும் அல்லது அது தொடர்புள்ள உணவுப் பொருளை உட்கொள்ளும் பட்சத்தில் அது கொண்டு வரும் ஆரோக்கிய பாதிப்புகளையும் குறிக்கிறது.
பிஸ்பெனோல் ஏ கசிவு: ஒரு பொருளிலிருந்து உணவு, பானம் போன்ற இன்னொரு நிலைக்குப் பெயரும் பிஸ்பெனோல் ஏ அளவை இது குறிக்கிறது. வங்காள தேசத்தில் பால் புட்டியில் 12 µg/kg பிஸ்பெனோல் ஏ கசிவு இருந்தது. இது போன்ற புட்டிகளில் குழந்தைகளுக்குப் பால் புகட்டும்பொழுது ஆரோக்கியத்திற்குச் சொல்லொணா கேடுகளை ஏற்படுத்திவிடும்..
பிஸ்பெனால்களை ஒரு குழுவாக தடை செய்யுங்கள்!
ஒரு பொருளில் பிஸ்பெனோல் ஏ சேர்க்கப்பட்டிருந்தும் அதன் அடையாள முத்திரையில் “பிஸ்பெனோல் ஏ இல்லை” என்று குறித்திருப்பது அதிர்ச்சியைத் தரும் விடயமாகும். இது அறியாமல் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் பெற்றோர்களும் ஆபத்தான பொருள்களை வாங்கிவிடுகின்றனர். நச்சுத்தன்மையுள்ள பயனீட்டாளர் பொருள்கள் தொடர்பான அடையாள முத்திரை தொடர்பாக நாம் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் உணவு தொடர்பான பொருள்களில் பிஸ்பெனோல் ஏ கலவை பற்றி அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
ஒட்டுமொத்த பிஸ்பெனோல் ஏ இரசாயனங்களும் தடை செய்வதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டியது அவசியம். இதன் மூலம் ஒரு இரசாயனத்திற்குப் பதிலாக இன்னொரு இரசாயனத்தைப் பயன்படுத்துவதை நாம் தடுக்க முடியும். நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் பிஸ்பெனோல் ஏ போன்ற இரசாயனங்களின் பாதிப்புக்கு நம் குழந்தைகள் ஆளாகாமல் பார்த்துக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
References:
A Call to Action: Free Children from BPA’s Toxic Legacy. (n.d.). IPEN. https://ipen.org/documents/call-action-free-children-bpas-toxic-legacy
Jeon, G. W. (n.d.). Bisphenol A leaching from polycarbonate baby bottles into baby food causes potential health issues. NCBI. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC9441614/
Toxic chemical found in Malaysian water bottles: Enforce ban on bottles containing BPA. Consumers Association Penang. (2022, February 22). https://consumer.org.my/toxic-chemical-found-in-malaysian-water-bottles-enforce-ban-on-bottles-containing-bpa/