பத்திரிகை செய்தி. 8.3.22
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட தேசிய வனச்சட்டம் ’84 மிகவும் வரவேற்க கூடிய ஒன்று என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.
மாற்றங்கள் செய்யப்பட்ட இந்த சட்டம் மிக விரைவாக நிறைவேற்றுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என இந்த இயக்கம் கேட்டுகொள்வதாக அதன் தலைவர் மீனாட்சி ராமன் கூறினார்.
இப்புதிய சட்டத்தை சட்டப்பூர்வமாக கொண்டுவந்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர். மேலும் இதனை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றி விரைவில் இந்த திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அது முறையாக செயல்படுத்தப்படும் என்றார்.
முன்மொழியப்பட்ட மிக முக்கியமான திருத்தங்களில் நிரந்தரமாக ஒதுக்கப்பட்ட காடுகளின் நிலையிலிருந்து நிலத்தை அகற்றுவது தொடர்பாக பழையதை மாற்றியமைக்கும் புதிய பிரிவு 11 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது புதிய திருத்தம் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு நிரந்தர காட்டை மேம்படுத்துவற்கு முன் மாநில ஆணையம் பொது விசாரணையை நடத்த வேண்டும். அதன் பின்னர் மாநிலத்தால் வரையப்படும் விதிகளின்படி பின்பற்றப்பட வேண்டும்.
இது தற்போது சிலாங்கூர் வனவியல் சட்டத்தில் மட்டுமே உள்ளது. நிரந்தர பாதுகாக்கப்பட்ட காட்டை மேம்படுத்துவதற்கு முன், பொது விசாரணைக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். வெளிப்படைத்தன்மையையும், மாநிலங்களின் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்கிறது மற்றும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமானதாக இந்த கூட்டம் அமைகிறது என்றார் மீனாட்சி.
இந்த வெளிப்படைத்தன்மை இல்லாமல், நிரந்தர காடுகளை அழிப்பது இரகசியமாக செய்யப்படுகிறது. இரண்டாவது நிபந்தனை என்னவென்றால், மாநில அரசாங்கம் நிரந்தர நிலத்தை மேம்படுத்த விரும்பினால், அதற்கு மாறாக வேறு நிலத்தின் அளவைக் கண்டறிந்து உருவாக்கி தர வேண்டும்.
தற்போதைய சட்டத்தை விட இது ஒரு பெரிய முன்னேற்றமாகும், இது ஒரு மாற்று பகுதியை வழங்கலாமா வேண்டாமா என்பதில் மாநிலங்களுக்கு அதிக விருப்புரிமை அளிக்கிறது.
இது தொடர்பாக மாநிலங்கள் தங்கள் காடுகளை முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட காடுகளாக அரசு பதிவேட்டில் வெளியிட வேண்டும்.
சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்கும் திருத்தத்தையும் தாங்கள் வரவேற்பதாக மீனாட்சி கூறினார்.
ஆகவே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட இந்த புதிய சட்டங்கள் தாமதிக்கப்படாமல், கூடிய விரைவில் நடைமுறைக்குகொண்டுவரப்பட வேண்டும். இதனால், வெள்ளம் மற்றும் மண் பாதுகாப்பு, நமது நீர் வளங்களின் நிலைத்தன்மை மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்பு செயல்பாடுகளுடன் நமது காடுகள் திறம்பட பாதுகாக்கப்படும். இது நமது பல்லுயிர் பாதுகாப்பை நீட்டிக்கும் என்றார் மீனாட்சி ராமன்.
மீனாட்சி ராமன்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு