புனிதமான பிரசாதத்தை வீணாக்காதீர்தைப்பூச பக்தகோடிகளுக்கு பி.ப.சங்கம் வேண்டுகோள்

மலேசியர்களான நாம் உணவு பிரியர்கள். நமக்கு பிரியமான உணவுகளைப் பரிமாறும் உணவகங்களுக்கும், உணவு அங்காடி கடைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதே போல் அதிகமான உணவுகளையும் விரயம் செய்வதில் மலேசியவர்கள் சளைத்தவர்கள் அல்ல என பி.ப.சங்க தமிழ் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் கூறினார்.
திடக்கழிவு நிர்வகிப்பு கழகத்தின் கூற்றுப்படி, மலேசியர்கள் நாள் ஒன்றுக்கு 16,687.5 டன் உணவுகளை விரயம் செய்கிறார்கள்.   இது 12 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு ஈடான உணவாகும்.  இதில் குறைந்த பட்சம் 3,000 டன் உண்பதற்கு உகந்த நிலையில் இருக்கக்கூடிய உணவாகும்.
தைப்பூசத்துக்கு வழங்கப்படும் அன்னதானமும் இந்த உணவு விரய பட்டியலில் சேர்ந்து விடக்கூடாது என்பதே பி.ப.சங்கத்தின் ஆதங்கம்.
இந்து மதம் உணவை இறைவனாக பார்க்க கற்றுக்கொடுக்கிறது.  உண்பதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்லும் பாரம்பரியத்தையும் இந்து மதம் கொண்டிருக்கிறது.
தைப்பூசத்திற்கு இலவசமாக வழங்கப்படும் அன்னம் இறைவனின் பிரசாதமாகும். தங்கள் பசியை ஆற்றுவதற்காக இந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ளும் பக்தகோடிகள் எடுத்த உணவைச் சாப்பிட்டு முடிக்க வேண்டும். சாப்பிட்டு முடிக்காத உணவு பொட்டலங்கள் குப்பைதொட்டிகளில் நிறைந்து வழிவது ஒவ்வொரு வருட தைப்பூசத்தின் போதும் நடந்து கொண்டிருக்கிறது என சுப்பாராவ் கூறினார்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது இந்து மத போதனையாகும். அன்னதானம் வழங்குவது மிக உன்னதமான பாராட்டத்தக்க ஒரு செயலாகும்.  ஆனால் நாளுக்கு நாள் அதிகமான தனிநபர்களும் இயங்கங்களும் அன்னதானம் வழங்க முற்படும் போது, உணவு விரயமும் கூடிக் கொண்டே வர ஆரம்பித்திருக்கிறது.
அன்னதானம் வழங்கும் அன்பர்கள் அன்னதானம் வழங்கும் போது:* உணவை கேட்பவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் ;  போவோர் வருவோரை கூப்பிட்டு உணவை திணிக்கக்கூடாது* குழந்தைகளுக்குச் சிறிய பொட்டலங்களை வழங்க வேண்டும்
* “பிரசாதத்தை வீணாக்காதீர்; குப்பையில் போடாதீர்” போன்ற வாசகங்களை அன்னதானம் வழங்கும் பந்தல்களில் பக்தகோடிகளின் கண்களில் படும் படி ஒட்டி வைக்க வேண்டும்
* சாப்பிட்ட உணவு பொட்டலங்களை வீசுவதற்கு ஏதுவாக ஒன்று அல்லது  இரு குப்பை தொட்டிகளைப் பந்தல்கள் தயார்பண்ணி வைக்க வேண்டும் (ஆலயம் இந்த ஏற்பாட்டை செய்திருந்தாலும் கூட)
பக்கதகோடிகளின் கவனத்திற்கு:
* உங்களுக்கு தேவையான அளவு உணவை மட்டுமே எடுக்க வேண்டும். ஒரு பொட்டலத்தை  மட்டும் எடுக்கவும். சாப்பிட்டு முடித்தப் பிறகு போதவில்லை என்றால் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
* எடுத்த உணவை சாப்பிட்டு முடிக்கவில்லை என்றால், வீட்டுக்கு கொண்டு சென்று பிறகு சாப்பிடுங்கள்.
* ஒவ்வொரு பந்தல்களாக உணவு பொட்டலங்களை சேகரித்துக் கொண்டு, உள்ளே என்ன உணவு இருக்கிறது என்று ஆராய்ந்து எந்த உணவு பிடித்திருக்கிறதோ அந்த உணவை தேர்வு செய்யும் பழக்கம் வேண்டாம். நீங்கள் எடுத்திருப்பது பிரசாதம் என்பதை மறவாதீர்
* உணவு விரயம் வேண்டாம், பிரசாதத்தை வீசக்கூடாது என்பதை செயலில் காட்டி உங்கள் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக திகழுங்கள்
தைப்பூசம் ஒழுக்கத்தை போதிக்கும் ஒரு சமய விழாவாகும். பக்தர்கள் விரதம் இருந்து, தங்களிடம் இருக்கும் தீய பழக்கங்களை விட்டொழித்து, நல்ல விஷயங்களைப் சிந்திக்கும் கட்டொழுங்கை தங்களுக்குள் ஏற்படுத்த முயற்சி செய்யும் ஒரு  புனிதமான விழாவாகும்.
இந்த 2019 ஆண்டு தைப்பூசத்தின் போது  பக்தகோடிகள் உணவை விரயம் செய்யமால், போதுமான அளவு மட்டுமே உணவை அன்னத்தானத்தின் போது பெற்றுக்கொள்ளும் ஒரு கட்டொழுங்கை தங்களுக்கு விதித்துக் கொள்ளவார்கள் ஈன பி.ப.சங்கம் எதிர்பார்ப்பதாக என்.வி. சுப்பாராவ்
கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது