புறாக்களின் இறகுகளில் வானவில் சாயம் பூசுவதை நிறுத்துங்கள். பொதுமக்களும் அவற்றை வாங்ககூடாது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 2.2.22

கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் அருகே ஒரு வியாபாரி, தான் விற்கும் புறாக்களின் இறகுகளின் மீது வானவில் தோற்றத்தில் சாயங்களை பூசி விற்று வரும் செயலை பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பிராணிகள் மீது காட்டப்படும் ஒரு வன்முறை என அந்த இயக்கத்தின் தலைவர் மீனாட்சி ராமன் அதிருப்தி தெரிவித்தார்.

புறாக்களுக்கு இயற்கையாகவே தனது உடல் முழுவதும் வர்ணங்கள் உள்ளன.

ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வியாபார நோக்கத்தில் அதனை விற்பனை செய்வோர் வானவில் தோற்றத்தில் ரசாயனங்கள் கொண்ட சாயங்களை புறாக்களின் இறகுகளில் பூசி விற்பது புறாக்களின் உரிமைகள் மீது மீறுகின்ற செயலாகும் என மீனாட்சி கூறினார்.

எதற்கு புறாக்களின் இறகுகளில் சாயம் பூச வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

மனிதர்கள் தங்களின் முடி, மீசை அல்லது தாடிக்கு சாயங்களை பூசிக்கொள்ளலாம். ஆனால் புறாக்களின் இறகுகளின் மீது சாயங்கள் பூச இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது.

இயற்கையான சூழலில் பறந்து சுற்றித்திரியும் புறாக்களின் மீது செயற்கையான சாயங்களை பூசி அவற்றின் வாழ்வை நாம் கொன்று விடுகின்றோம் என்றார் அவர்.

செயற்கை வர்ணங்களை அவற்றின் இறகுகளில் பூசுவதால் சாயம் பூசப்படாத மற்ற புறாக்களுக்கும் இவற்றிர்க்கும் இடையே உள்ள இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. சாயம் பூசப்பட்ட புறாக்கள் மற்ற புறாக்களோடு சேருவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

புறாக்களின் மீது ரசாயனம் கொண்ட சாயங்களை பூசுவது என்பது ஒரு துன்புறுத்தும் செயலாகும்.

டிவிஎஸ் எனப்படும் கால்நடை சேவை இலாகா இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்ல பிராணிகளை வளர்ப்போர், மிருக நலச் சட்டம் 2015(விதி 722) கீழ் தாங்கள் வளர்க்கும் பிராணிகள் நலமுடன் இருக்க பொருப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கால்நடை இலாகாவிற்கு உரிமை உண்டு என மீனாட்சி தெரிவித்தார்.

இப்படி பலதரப்பட்ட வர்ணங்களில் புறாக்களின் இறகுகள் மீது சாயங்களை பூசி விற்பதை வியாபாரிகள் நிறுத்தி கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் புறாக்களை தங்களின் செல்லப் பிராணிகளாக வளர்க்க விரும்புவோர், வானவில் தோற்றத்தில் பூசப்பட்ட புறாக்களை வாங்க வேண்டாம் எனவும் புறாக்களை இயற்கையோடு வாழ வழி விட வேண்டும் எனவும் மீனாட்சி ராமன் கேட்டுக்கொண்டார்.

மீனாட்சி ராமன்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு