புவியையும் ஆரோக்கியத்தையும் அச்சுறுத்தும் நெகிழிப் பயன்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவோம்.

பத்திரிகைச் செய்தி:   11.10.2025


நெகிழியிலிருந்து வெளியேறும் நச்சுக்களின் அபாயங்களிலிருந்து விடுபட அனைவரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொண்டாடப்படவுள்ள பசுமைப் புரட்சி வாரத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பி.ப.சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பசுமைப் புரட்சி என்பது உலகின் அனைத்து பகுதிகளிலும் நிலைபேறான பயனீட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஓர் உலகளாவிய பிரச்சாரமாகும்.

இந்தப் பசுமைப் புரட்சி வாரம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையில் நடத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில், இந்த ஆண்டின் பசுமைப் பிரச்சாரத்தில்  தகவல்களையும், வளங்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை எடுத்துச்சொல்ல அனைவரையும் அழைக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

தகவல் பகிர்வு சமூகத்தை வளர்ப்பதோடு நிலைபேறான வாழ்க்கை குறித்த கலந்தாலோசனைகள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலம், அனைவருக்கும் பயன்களை அள்ளித்தருகின்றது. அதே வேளையில், அவை இப்புவியில் நாம் ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கத்தைக் குறைப்பதற்கு சேர்ந்து செயல்படும் தருணங்கள் உருவாக்கப்படுவதால் முறையான பயனீட்டுக் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகின்றது என்று பி.ப.சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்

பசுமை நடவடிக்கை வாரம் 2025-இல் இணைந்து, ‘பகிரும் சமூகம்’ என்ற கருத்தை வெளிப்படுத்த, பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக “நெகிழியில் உள்ள நச்சுகள் – நெகிழியிலிருந்து விடுபடுவது எப்படி?” என்பதைத் தொட்டுப் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது என்றார் முகைதீன்.

நெகிழி வாழ்க்கைக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. ஆனால், அது பெரும்பாலும் நச்சுத்தன்மை வாய்ந்தது. ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்துகளை விளைவிக்கிறது. நெகிழியில் உள்ள தீங்கிழைக்கும் இரசாயனங்கள் உணவு மற்றும் நீரில் கசிகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றிலும், நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலும், நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் நம் அன்றாட வாழ்வில் நெகிழியின் நுண்துகள்கள் காணப்படுகின்றன.

நெகிழிப் பொருட்கள் நவீன வாழ்க்கையின் அத்தியாவசியமாக மாறிவிட்டன. அவை நீடித்து உழைக்கக்கூடியவை. நெகிழிகளை எந்த வடிவத்திலும், அளவிலும், நிறத்திலும் வடிவமைக்கலாம். அதில் உள்ள இரசாயனங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை. நெகிழி பாதுகாப்பானது என்ற கருத்து தவறானது. நெகிழியில் பிளாஸ்டிசைசர்கள் போன்ற பல்வேறு நச்சுப் பொருள்கள் உள்ளன. அவை மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன.

நெகிழியைப் பயன்படுத்தி வீசுவதால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கின்றன. ஆறுகளிலிருந்து அவை கடலில் சென்று சேருகின்றன. அங்கு சேரும் நெகிழிப் பைகளை உட்கொண்டு பல இலட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளங்களும் இந்த நெகிழிப் பைகளால் மாசடைவதால் நீர்வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன.

நாமும் நெகிழியின் தீமைகளை அறியாமலேயே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் சுற்றுப்புறத்தை தூய்மைக்கேடாக்கி பற்பல நோய்கள் உருவெடுக்கக் காரணமாகின்றன.

நெகிழிக்குப்பையை எரிக்கும்பொழுது அதிலிருந்து டையோக்சின் வாயு வெளிப்படுகிறது. இந்த வாயு புற்றுநோயை ஏற்படுத்தும். நெகிழிகளைத் தின்னும் விலங்குகளின் உணவுக்குழாய்கள் சிதைக்கப்பட்டு அவை இறந்து போகின்றன.

எளிதில் மக்காத நெகிழிப் பொருட்கள் விவசாய நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து மண்ணை நஞ்சாக்குகின்றன. நெகிழிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை கொண்டவை. இதனால், அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு சுவாச பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, சிறுநீரக கோளாறு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

நெகிழிப் பைகள் மக்குவதற்குச் சுமார் 1000 ஆண்டுகள் பிடிக்கும். எனவே, நெகிழிப் பைகளை பயன்படுத்தாமல் இருப்பது நன்மை பயக்கும். நம் உடல் நலத்தையும், எதிர்கால சந்ததியினரின் நலத்தையும் கருத்தில் கொண்டு இனியாவது நெகிழிப் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து வளமான, நலமான, நோயற்ற சமூகத்திற்குத் துணை நிற்போம்.

உணவு, இரசாயனங்கள் அல்லது பிற பொருட்களால் மாசுபட்ட நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்வது பெரும்பாலும் கடினம் அல்லது சாத்தியமற்றது. உலகளவில், நெகிழிக் கழிவுகளில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவையே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. அனைத்து ரகக் நெகிழிகளையும் மறுசுழற்சி செய்ய முடியும் என்பது பொதுவான தவறான கருத்து.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளைக் குறைத்து, இயற்கையான மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நமது புவியைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினரின் நலத்தைப் பாதுகாக்கவும் முடியும்.

இந்தப் பசுமைப் புரட்சி நிகழ்வின் போது விதைப் பகிர்வு நிகழ்வையும் பி.ப.சங்கம் நடத்தவிருக்கின்றது. விதைகள், மரக்கன்றுகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து, நிகழ்வில் கலந்துகொள்ளும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

இந்த பசுமை புரட்சி நிகழ்வின் போது, நிலைபேறான வாழ்க்கை முறை மற்றும் நெகிழியிலிருந்து  விடுபடுவது எப்படி என்பது குறித்த செயல் விளக்கங்களும் நடைபெறும்.

மேலும் இதே நிகழ்ச்சியில் :

* பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பத்திரப்படுத்தி வைக்க இயற்கை
பொருட்களைப் பயன்படுத்தும் முறைகள்;
* வாழை இலையைக் கொண்டு பொட்டலமிடும் முறை;
* இயற்கை பொருள்களைப் பயன்படுத்திச் சமைக்கும் முறை;
* இயற்கை பொருள்களிலிருந்து துடைப்பம் மற்றும் ஷாம்பு தயாரிக்கும் முறை
ஆகியவற்றுக்கான செயல்முறை விளக்கங்கள் நடைபெறவுள்ளன.

அன்றாட வாழ்வில் நெகிழி பயன்பாட்டைக் குறைப்பதற்கான எளிய, நடைமுறை வழிகளைக் கண்டறிய இம்மாதம் 13-ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 10 மணிக்கு பி.ப.சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெறும் ‘பசுமைப் புரட்சி 2025’ நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கின்றோம் என்றார் முகைதீன் அப்துல் காதர்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்