பைசர் தடுப்பூசி வாங்குவது தொடர்பாக கூடுதல் கவனமும் வெளிப்படைத்தன்மையும் தேவை

கோவிட்-19 பெருந்தொற்றை கையாளுவதற்காகப் பைசர் (Pfizer) தடுப்பூசி வாங்குவதில் மத்திய அராசங்கம் அதிக கவனத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கையாள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக் கொண்டார். மலேசியர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் பயன்தரக்கூடிய தடுப்பூசி போடப்படுவது அதிமுக்கியமாகும்.

கோவிட்-19 தடுப்பூசி வாங்குவதற்காக பைசருடன் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், மலேசிய மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினரின் தேவையை நிரப்பும் அளவில் மருந்து வாங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.  இதில் அதிக நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கே முதலில் இந்த தடுப்பூசி போடப்படும்.

சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட தடுப்பூசியை வாங்குவதற்கு விதித்துள்ள நிபந்தனைகளை நாங்கள் வரவேற்கிறோம்.  இதில் அதிக நோய் பாதிப்பு உள்ள மக்களுக்கு இந்தத் தடுப்பூசி எந்த வகையில் பயன்தரக்கூடியது என்றும், அது கொண்டு வரும் பக்க விளைவுகள் மற்றும் அது நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்து கோவிட்-19-ஐ பரவ விடாமல் தடுக்குமா என்பதனையும் சுகாதார அமைச்சு அந்த நிபந்தனையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், முதல் தலைமுறை தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் பயன் தொடர்பாக உலகம் முழுக்கப் விவாதிக்கப்படுவதைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சிரத்தையுடன் நோக்குகிறது. ஏனெனில் இந்தத் தடுப்பூசிகள் மக்கள் தொகையில் அதிக நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கே கொடுக்கப்படவிருக்கிறது.

அமெரிக்காவில் இந்தத் தடுப்பூசி உடனடியாகத் தேவைப்படுவதால் சந்தைப்படுத்தலுக்கான அனுமதி கோரும் வேலைகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு நேரடியாகச் சந்தைப்படுத்துதல் ஆயுத்த வேலைகள் தொடங்கிவிட்டன. அவசரகாலத்தில் இந்தத் தடுப்பூசி பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை ஒருவர் எடுத்துக்கொண்டால், அந்தத் தடுப்பூசி கொண்டு வரும் நீண்ட கால பாதிப்புக்களை ஆராய்வதில் சிக்கல்கள் உருவாகும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால உபயோகத்தை எச்.1.என்.1 (H1N1) மற்றும் சீக்கா (Zika) போன்ற வேறு தொற்றுநோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்காக குறைவாகப் பயன்படுத்தினாலும் கூட, அவசர கால அடிப்படையில் ஒரு தடுப்பூசி பொதுமக்களுக்கு பயன்படுத்தப்பட்டதே இல்லை.  மற்ற மருத்துவ உற்பத்திகளிலிருந்து தடுப்பூசி வேறுபடுகிறது.  அது ஆரோக்கியமானவர்களிடையேயும் கூட பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.

ஆகையால்தான் பைசரோடு மலேசியா முன்கூட்டியே கையெழுத்திட்ட ஒப்பந்தம் தொடர்பாக கூடுதல் சிரத்தையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.   தடுப்பூசிக்கான பக்க விளைவின் பொறுப்பிலிருந்து நிறுவனம் விலக்கு பெறும்.

சுகாதார பாதுகாப்பு மோசடி, மருந்துகள் கொண்டு வரும் பாதிப்புகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்காமல் இருத்தல் மற்றும் சட்டவிரோத சந்தைப்படுத்தல் காரணமாக, பைசர் மீது பயனீட்டாளர்களும் அமெரிக்க நீதித்துறை இலாகாவும் நிறைய வழக்குகளைத் தொடுத்துள்ளது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த ஒப்பந்தத்திலும் பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினரின் நேர்மை மிக முக்கியமானது. இந்த ஒப்பந்தம் வாழ்வா சாவா என்ற விஷயம்தான்.  பைசரின் கடந்த காலங்களை வைத்துப் பார்க்கும்பொழுது சூழ்நிலைகள் எதுவும் நமக்குச் சாதகமாக இல்லை என்றே தெரிகிறது.

தடுப்பூசியின் பக்க விளைவுகளுக்கான பொறுப்பை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டுள்ளது மிகவும் அமைதியைக் குலைப்பதாக உள்ளது.  பைசரையும் சேர்த்து, ஐரோப்பாவில் உள்ள வேறு மருந்து தயாரிப்பாளர்கள், மருந்து கொண்டு வரும் பக்க விளைவுகளுக்கு அரசாங்கத்தையே பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லியிருக்கின்றன.

மலேசியாவிலும் இதே நிலைதானா என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிந்து கொள்ள விரும்புகிறது.  அதாவது பைசர் தடுப்பூசிக்கான எந்த பக்க விளைவுகளுக்கும் மலேசிய அரசாங்கமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிவரும்.  அரசாங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தும் மற்ற தடுப்பூசி நிறுவனங்களும் இது போன்ற பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுதான் பேச்சு வார்தைகளை நடத்துகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

மலேசிய அரசாங்கம் தடுப்பூசி வாங்குவதற்காக மருந்துக் கம்பெனிகளோடு மேற்கொண்டு வரும் ஒப்பந்தங்களின் விரிவான தகவல்களைப் பார்க்கக் கோரியிருக்கும் அமைப்புகள் மற்றும் தொண்டூழிய நிறுவனங்களோடு பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் இணைந்து கொள்கிறது.  இந்த ஒப்பந்தத்தில் உள்ள தகவல்கள் மக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.  வரி செலுத்தும் மலேசியர்களின் பில்லியன் கணக்கான தொகை இந்தத் தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆகையால் தடுப்பூசிகளுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இறுதியில் மறுபடியும் மக்களே தடுப்பூசிக்கான தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

பைசரை தடுப்பூசிக்கான பக்க விளைவுகளை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலக்கியிருக்குமானால், அவ்வாறு செய்வதற்கு உள்நாட்டு சட்டத்தை அது பயன்படுத்தியிருக்கும்.  ஏனெனில் குடிமையியல் மற்றும் குற்றவியல் சட்டத்தில் இதற்கு வாய்ப்பில்லை.  இதுதான் அரசாங்கத்தின் நோக்கமா?

அரசாங்கத்திற்கும் பைசருக்கும் இடையே தர்க்கங்கள் ஏற்படுமானால் அந்த வழக்கு விசாரிக்கப்படுவது மலேசிய நீதிமன்றத்திலா அல்லது வெளிநாட்டு நீதிமன்றத்திலா?  ஏனெனில் இதுபோன்ற மருந்து நிறுவனங்களுடனான விவாதங்களை வெளிநாட்டிலேயே விசாரிக்க ஆர்ஜெண்டினா நாடு ஒப்புக்கொண்டுள்ளது.  இதே நிலை மலேசியாவிலும் உருவாகுமானால் அது நமது தேசிய இறையாண்மையை முற்றிலும் மீறும் செயலாகும்.

கோவிட்-19 மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான டிரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தம் எனப்படும் அறிவுசார் சொத்து ஒப்பந்தத்தின் பல விதிகளை அமல்படுத்துவதை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குத் தள்ளுபடி செய்யுமாறு உலக வர்த்தக சங்கத்தில் (WTO), தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா கொண்டு வந்த பரிந்துரைகளுக்கு மலேசிய அரசாங்கம் தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இந்த டிரிப்ஸ் தள்ளுபடி மூலம் கோவிட்-19 நிர்வகிக்கப்படும் வரை நாடுகள் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்துதலை நிறுத்தி வைக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். கோவிட்-19 உபகரணங்களை உற்பத்தி செய்தல், விநியோகித்தல் ஆகியவற்றுக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டு சட்டதிட்டங்களுக்கான ஆயுத்த வேலைகளுக்கான அவகாசம் நாடுகளுக்கு வழங்கப்படும்.

தடுப்பூசி, மருந்துகள், பரிசோதனை ஆகியவை அதிகரிக்கும்பொழுது, அதற்கான போட்டிகளும் அதிகரித்து மருந்துகளின் விலையைக் குறைக்கச் செய்து அவற்றை எல்லோருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி
10.12. 2020

 

TAMIL – 10 Dec 2020 CAP PS – Need for more caution and transparency over Pfizer vaccine purchase