போளிப்லுரோஅல்கேல் பற்றி அறிந்துகொள்ளுதல்: சூழலில் நிலைத்திருத்தல் மற்றும் ஆரோக்கிய அபாயங்கள்!

போளிப்லுரோஅல்கேல் என்பது என்ன? அது எங்கு பயன்படுத்தப்படுகிறது? போளிப்லுரோஅல்கேல் பயனீட்டாளர் பொருள்களில் பயன்படுத்தப்படும் சுமார் 4,700 இரசாயனங்களைக் கொண்ட செயற்கை வஸ்துகளாகும். 1940-களிலிருந்தே வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பெர்ப்லுரோஒக்டேனிக் அமிலம் மற்றும் பெர்ப்லுரோஒக்டேன் சல்போனேட் ஆகியவையும் இந்த இரசாயனங்களில் அடங்கும்.

போளிப்லுரோஅல்கேல் இதர இரசாயனங்களோடு அதிகம் தொடர்பு கொள்ளாத மிக உறுதியான கலவையாகும். இதனால், இவை எண்ணெய், கறை, நீர், சூடு ஆகியவற்றை எதிர்க்கும் தயாரிப்புகளுக்கு அதிக பயன் தரக்கூடியதாக உள்ளது. போளிப்லுரோஅல்கேல் மழை நீர் துளைக்க முடியாத கருவிகள், உணவு மடிப்புத் தாள்கள், நெருப்பு எதிர்ப்பு நுரைப்பங்கள், ஒட்டாத சமையல் பாத்திரங்கள், கம்பளம் மற்றும் நெசவு பூச்சாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவற்றில் இந்த இரசாயனம் பயன்படுத்தத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, பாதுகாப்பான மாற்றுப்பொருள் பயன்படுத்தலாம். எல்லா போளிப்லுரோஅல்கேல்களும் மிகவும் உறுதியான இரசாயன இணைப்பைக் கொண்டிருக்கிற காரணத்தால் “நீடித்திருக்கும் இரசாயனங்கள்” என்ற பட்டப்பெயரும் இவற்றுக்கு உண்டு.

போளிப்லுரோஅல்கேல் சூழல் மண்டலத்தில் நிலைத்திருக்கும் தன்மை கொண்டவை. அவை காலப்போக்கில் குவியும் தன்மையும் கொண்டவை. காற்று, மண், நீர் (குடிநீர் மூலங்களும் அடங்கும்), வீட்டு உபகரணங்களில் படியும் தூசிகளிலும் இவை காணப்படுகின்றன. ஒரு பொருள் உற்பத்தி, பயன்பாடு மற்றும் தூக்கி எறியும்பொழுது என்று எல்லா படிநிலைகளிலும்  போளிப்லுரோஅல்கேல்  வெளிப்படுகிறது. வெளியானவுடன் அவை நீண்ட தூரங்களுக்குப் பிரயாணித்து அவை உருவான இடத்திலிருந்து மிக தொலைதூரத்தில் கூட இருக்கும். இவை எளிதில் சிதையாமல் சூழலிலும் மனித உடலிலும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.

மாசுபாடு உள்ள உணவு, நீரை அருந்துவதாலும், தூசுகளின் பாதிப்புக்கு உள்ளாகுவதாலும், பயனீட்டாளர் பராமரிப்பு பொருள்களின் மூலமும் மனித இனம் தொடர்ச்சியாக போளிப்லுரோஅல்கேல் பாதிப்புக்கு உள்ளாகிறது.  தாய்ப்பால், சிறுநீர், இரத்தம் ஆகியவற்றில் போளிப்லுரோஅல்கேல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனித உயிரியல் கண்காணிப்பு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. போளிப்லுரோஅல்கேல் உடலின் கொழுப்பை விட புரதத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டு இரத்தம், கல்லீரல், சிறுநீரகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது.

கருவுற்றல், கரு வளர்ச்சி, தைராய்டு சுரப்பு இயக்கம் போன்றவற்றிற்கு போளிப்லுரோஅல்கேல் பெருத்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது. நம் வாழ்க்கையின் பல படிகளில் தைரோய்டு சுரப்பிகள் செவ்வனே இயங்குவது அதிமுக்கியமாகும். உதாரணத்திற்கு, கர்ப்ப காலத்தில், கரு மற்றும் சிசுக்களின் மூளை வளர்ச்சிக்கும், மாதவிடாய் நிற்கும் பருவத்தில் உருவாகும் அறிகுறிகளுக்குத் தைரோய்டு சுரப்பிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

மலேசியாவில், குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் போளிப்லுரோஅல்கேல் மாசுபாடு ஒரு முக்கிய பிரச்சனையாகும். 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை இணைக்கும் ஜோகூர் ஜலசந்தி அருகே தொழிற்சாலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அதன் கழிவுகளை வெளியேற்றும் பகுதிகளில் போளிப்லுரோஅல்கேல் அதிகான அளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தென்சீனக் கடலில் நிலவும் போளிப்லுரோஅல்கேல் மாசுபாட்டிற்கு மலேசியா ஒரு மூலகாரணமாக இருக்கலாம் என்று 2017-இல் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வு கூறுகிறது.

மலேசிய உணவுகளில் போளிப்லுரோஅல்கேல் எந்த அளவுக்கு உள்ளது என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. ஒன்பது விதமான உணவுகளில், நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் 18 வகையான இரசாயனங்களில் போளிப்லுரோஅல்கேல், பிஸ்பெனோல் மற்றும் பாராபென் ஆகிய இரசாயனங்கள் எந்த அளவுக்கு உள்ளன என்று ஆராயப்பட்டு அவை விளைவிக்கும் ஆரோக்கியச் சீர்கேடுகளும் இனங்காணப்பட்டன. டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், பால் உணவுகள், பழங்கள், காய்கறிகள், மீன், கடலுணவுகள், வணிக முட்டைகள், பாரம்பரிய முட்டைகள் ஆகிய உணவுப் பிரிவுகள் ஆராயப்பட்டன. நம் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட இந்த உணவுகள் சிலாங்கூரில் உள்ள சந்தைகளிலிருந்தும் மளிகைக் கடைகளிலிருந்தும் ஆகஸ்டு மற்றும் அக்டோபர் 2021-இல்  வாங்கப்பட்டு  சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

வெட்ட வெளியில் வளர்க்கப்படும் கோழிகளில் ஆக அதிகமான அளவு  (7.19 ng/g) போளிப்லுரோஅல்கேல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் (5.18 ng/g), மீன்  (1.87 ng/g), பழங்கள் (0.75ng/g), கடலுணவுகள் (0.73 ng/g), பால்பொருள்கள் (0.62 ng/g),  ஆகியவற்றில் அதிகமான அளவில் இருந்தன. பெரும்பாலும், எல்லா டின்னில் அடைக்கப்பட்ட மாதிரிகளிலும் இதர உணவுகளில் உள்ளதைவிட 4-லிருந்து 20 மடங்கு அதிகமான போளிப்லுரோஅல்கேல் இருந்தது.

இந்த ஆய்வு முடிவுகள், இன்னும் என்னென்ன உணவுகளில் போளிப்லுரோஅல்கேல் உள்ளது என்பதனையும் மற்றும் அவை பயனீட்டாளர்களுக்கு எப்படிப்பட்ட கேடுகளை உருவாக்கும் என்பதனையும் அடிக்கோடிட்டு காண்பிக்கின்றன.  மலேசிய உணவுகளில் உள்ள ஆபத்தான இரசாயனங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முறையான சட்ட திட்டங்களையும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வு உணர்த்துகிறது.

போளிப்லுரோஅல்கேல் துணிகளில் இருப்பதாக அனைத்துலக மாசுபாடு ஒழிப்பு பிணைய ஆய்வு கூறுகிறது

தொழிற்துறை மற்றும் வீட்டுத் உபகரணங்களோடு சேர்த்து நாம் பயன்படுத்தும் துணிகளிலும் போளிப்லுரோஅல்கேல் இருப்பதாக அனைத்துலக மாசு ஒழிப்பு கூட்டமைவு ஆய்வு கூறுகிறது. உலகம் முழுவதும் போளிப்லுரோஅல்கேலின் மொத்த பயன்பாட்டில் துணிகளுக்கு மட்டும் 50% பயன்படுத்தப்படுகிறது. போளிப்லுரோஅல்கேலின் எண்ணெய் மற்றும் நீர் எதிர்ப்புத் தன்மையின் காரணமாக, துணிகளில் கறை படியாமல் இருக்கவும், மழை நீர் புகாமல் இருக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

நெசவு உற்பத்தியில் 8,000-க்கும் மேற்பட்ட செயற்கை இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இந்த இரசாயனங்களை ஆபத்தானவை மற்றும் அளவுக்கு அதிகமாக ஆபத்தானவை என்று வரையறுத்து, புற்றுநோய், பிறப்புக் கோளாறுகள், இனப்பெருக்க உற்பத்தி கோளாறு ஆகியவற்றோடு தொடர்புடையது என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இரசாயனங்களில் பெர்புளோரினேட்டட் இரசாயனமும் அடங்கும். டெப்ளோன் சமையல் பாத்திரங்களில் இரும்பு அல்லாத தரத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்தும் இரசாயனமாகும் இது.

அனைத்துலக மாசு ஒழிப்பு கூட்டமைவும், செக் நாட்டின் அமிகா என்ற  ஆதாயம் கருதாத அமைப்பும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்குப் பாடுபடுபவரோடு இணைந்து நெசவுகளில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்கள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.

ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, வட அமெரிக்காவின் 13 நாடுகளிலிருந்து ஜேக்கட் மற்றும் இதர வகையான நீர் மற்றும் கறை தடுப்பு ஆடைகள் வாங்கப்பட்டன. ஏப்ரன், டீ-சட்டைகள், நீச்சல் உடை, மழை சட்டை, ஹிஜாப், கால்சட்டை போன்ற 16 ஆடைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட 16 மாதிரிகளில் 11-இல் (68.8%) போளிப்லுரோஅல்கேல் அல்லது  பிரித்தெடுக்கக்கூடிய ஆர்கானிக் புளோரைன்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நெசவு உற்பத்திகளில் போளிப்லுரோஅல்கேல் பயன்படுத்தப்படுகிறது என்பது இந்த ஆய்விலிருந்து தெள்ளத் தெளிவாகிறது. இதில் புளோரோதெலோமர் அல்கோஹோல், புளோரோதெலோமர் எக்ரிலேட்ஸ், பெர்புளோரோஅல்கில் கார்பொக்சிலிக் அமிலம், புளோரோதெலோமர் கார்பொக்சிலிக் அமிலம், பெர்புளோரோஅல்கேன் சல்போனிக் அமிலம், புளோரோதெலோமர் சல்போனிக் அமிலம் மற்றும் போளிப்லுரோஅல்கேலிருந்து தருவிக்கப்பட்டவை (எ.கா: சல்போனமைட், சல்போனமைடோ இட்டனோல்).

நெசவு உற்பத்திகளில் மற்றும் பொது இடங்களில் அணியப்படும் ஆடைகளில்  போளிப்லுரோஅல்கேல் சேர்க்கப்படுகிறது. நெசவு உற்பத்தியின் ஒவ்வொரு படிநிலையிலும் (உற்பத்தியின்பொழுது, உபயோகிக்கும்பொழுது மற்றும் தூக்கி எறியும்பொழுது) போளிப்லுரோஅல்கேல் சூழலில் கலப்பதால் சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டினை விளைவிப்பதோடு மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தினைக் கொண்டு வருகிறது.

போளிப்லுரோஅல்கேல் இரசாயனங்கள்

போளிப்லுரோஅல்கேல் மோசமான சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு மற்றும் ஆரோக்கிய பாதிப்புகளைக் கொண்டு வருவதால், அவற்றின் பரவலான உபயோகம் பொருளாதாரச் சூழற்சியில் ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. போளிப்லுரோஅல்கேல் கலவை உள்ள பொருள்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு அதிலிருந்து ஒரு புதிய பொருள் உருவாக்கப்படும்பொழுது போளிப்லுரோஅல்கேல் நச்சுத்தன்மை இன்னும் அதிகமாகி தூய்மையான பொருளாதார சுழற்சியைப் பங்கப்படுத்துகிறது.

உலக அளவில் போளிப்லுரோஅல்கேல் மாசுபாட்டினை நாம் தடுத்து நிறுத்துவதோடு உலகளாவிய மனித உரிமைப் பேரழிவையும் தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இதர பொது நலக் குழுக்களோடு இணைந்து ஒட்டு மொத்த போளிப்லுரோஅல்கேல் இரசாயன வகைகளை ஆபத்தானது என்று வரையறுத்து அவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம், ஒரு போளிப்லுரோஅல்கேல் இரசாயனத்திற்குப் பதிலாக இன்னொரு இதே வகை இரசாயனத்தை உபயோகிக்கும் சூழலைக் குறைக்க முடியும்.

References:

Haron, D. E. M., Yoneda, M., Ahmad, E. D., & Aziz, M. Y. (2023). PFAS, bisphenol, and paraben in Malaysian food and estimated dietary intake. Food Additives and Contaminants Part B, 16(2), 161–175.
https://doi.org/10.1080/19393210.2023.2188611

Malaysia PFAS situation report | Consumers’ Association of Penang. (2019, March). IPEN.
https://ipen.org/sites/default/files/documents/malaysia_pfas_country_situation_report_mar_2019.pdf

PFOA, PFOS, and related Pfas Chemicals. (n.d.). American Cancer Society.
https://www.cancer.org/cancer/risk-prevention/chemicals/teflon-and-perfluorooctanoic-acid-pfoa.html

Straková , J., Grechko, V., Brosché , S., Karlsson, T., &  Buonsante, V. (2022). PFAS in Clothing: Study in Indonesia, China, and Russia Shows Barriers for Non-toxic Circular Economy. IPEN (International Pollutants Elimination Network). https://ipen.org/sites/default/files/documents/ipen-pfas-2021-v1_6w.pdf

Straková, J., Brosché, S., Brabcová, K. (2023, November). Toxics in our Clothing: Forever Chemicals in Jackets and Clothing from 13 Countries. IPEN. https://ipen.org/sites/default/files/documents/clothing-chemicals-v12.pdf

Straková, J., Brosché, S., Grechko, V. (2023, December). Forever Chemicals in Single-use Food Packaging and Tableware from 17 Countries. IPEN. 57p. https://ipen.org/sites/default/files/documents/ipen-packaging-report-fin-opr-25012024.pdf

The global PFAS problem: Fluorine-free alternatives as solutions. (2019). IPEN. https://ipen.org/sites/default/files/documents/global_pfas_exec-sum_en.pdf