ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு என்பது என்ன?
ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு என்பது ஓர் உபகரணத்தில் தீப்பற்றிக்கொள்ளும்பொழுது அதில் இடையூறுகளை ஏற்படுத்தி குறைவாக எரியுமாறு பார்த்துக்கொள்ள உதவும் இரசாயனங்களாகும். மெத்தை உறை, வாகன இருக்கை, மின்சாதனங்கள், கட்டிடத்திற்கான வெப்பக்காப்பு ஆகியவற்றுக்கான நெகிழி மற்றும் நுரைப்பப் பொருள்களில் இந்த ப்ரோமின் தீப்பிழம்பு தடுப்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்துலகச் சந்தையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 175-க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான தீப்பிழம்புத் தடுப்பு இரசாயனங்களில் இந்த ப்ரோமின்த் தீப்பிழம்பு தடுப்பு ஒரு துணைப் பிரிவாகும். போலி ப்ரோமினேட்டட் டைஃபெனில் இதர் (PBDEs), தெட்ரோப்ரோமொபிஸ் ஃபீனோல் ஏ (TBBPA) மற்றும் ஹெக்சாப்ரோமோசைக்ளோடொடிகேன் (HBCD) ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்புகள் ஆகும்.
மின்னியல் பொருள்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் நெகிழி மற்றும் போலிமர்களின் உபயோகம் கடந்த இரு தசாப்தங்களில் அதிகரித்திருப்பதன் காரணமாகத் தீப்பிழம்புத் தடுப்புகளின் உபயோகமும் அதிகரித்திருக்கிறது. தொலைக்காட்சி, கணினி, திறன்பேசி, ரொட்டி வாட்டி, முடி உலர்த்தும் கருவி, இதர பயனீட்டாளர் கருவிகளில் போலி ப்ரோமின் டைஃபெனில் மற்றும் இதர தீப்பிழம்புத் தடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனோடு கம்பிகள், கேபிள்கள் மற்றும் சர்க்யூட் போர்டுகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.
1970களில், படுக்கை, இருக்கை, இதர தளவாடங்களில் சிகரெட் துண்டுகள் பட்டு தீப்பற்றும் சம்பவங்கள் அதிகரித்த பின், தளவாடத் தொழிற்துறை இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்த பிறகு, ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு உற்பத்தி தொடங்கியது. சிகரெட்டுகள் தீப்பற்றுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் தீயைத் தடுக்கும் இரசாயனத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தியது. இரசாயனத் தொழிற்துறையும் இதற்கு அமோக ஆதரவினை வழங்கி தங்கள் தீயைத் தடுக்கும் இரசாயன வியாபாரத்தைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டது. தளவாடங்களில் சேர்க்கப்படும் தீ தடுப்பு இரசாயனங்கள் மிகவும் குறைவான பாதுகாப்பையே கொடுக்கின்றன அல்லது சில சமயங்களில் கொடுக்காமலேயே போகின்றன. அதோடு இது அந்தத் தளவாடங்களைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்களுக்கு ஆபத்தான இரசாயன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்த பிறகும் கூட இவை தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.
பயனீட்டாளர்கள் பல்வேறு வழிகளில் தீ தடுப்பு இரசாயனங்களின் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். ஒரு பொருளிலிருந்து இரசாயனங்கள் காற்றில் கசிந்து தூசுகளில், உணவில் மற்றும் நீரில் ஒட்டிக்கொள்கின்றன. பிறகு, இவற்றை நாம் உட்கொள்கிறோம். தரையில் கை வைத்து தவழும் குழந்தைகள் அதே கையை வாயிலும் வைப்பதால் ஆபத்துகள் இன்னும் அதிகரிக்கின்றன.
ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு இரசாயனங்களின் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு நாளமில்லா சுரப்பி மற்றும் தைராய்டு இடையூறுகள், நோய் எதிர்ப்புச் சக்தியில் பாதிப்புகள், இனப்பெருக்க உறுப்பில் நச்சுத்தன்மை, புற்றுநோய், கரு மற்றும் குழந்தை வளர்ச்சியில் பாதகங்களை ஏற்படுத்துவதாக இரு தசாப்தங்களுக்கும் மேலான அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன.
சில தீப்பிழம்புத் தடுப்பு இரசாயனங்கள் அளவுக்கு அதிகமான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை அனைத்துலக அளவில் தடை செய்யப்பட்டவை. ஆனால், அவற்றுக்கு மாற்றாக வேறு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுமானால் அவை கூட பெரும்பாலும் இது போன்றே ஆபத்தானவையாக இருக்கலாம்.
சீனா, இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் 11 அரபு, ஆப்பிரிக்க நாடுகளான பெகினா ஃபேசோ, கெமரூன், எகிப்து, எத்தியோபியா, கெபூன், ஜோர்டான், கென்யா, மொரோக்கோ, ஷிரியா, தான்சானியா, துனிசியாவில் மின்கழிவு நெகிழி மறுசுழற்சி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் உள்ள ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு பற்றி அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN) ஓர் ஆய்வினை மேற்கொண்டது.
சீனா, இந்தோனேசியா, ஆப்பிரிக்கா, அரபுச் சந்தைகளில் விற்கப்படும் நெகிழி மின்கழிவு மறுசுழற்சி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட சிறார் பொம்மை, கூந்தல் அலங்காரப் பொருள்கள், அலுவலக, சமையலறைத் தளவாடங்கள் ஆகியவற்றில் ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெகிழி மறுசுழற்சி காரணமாக, புதிய பயனீட்டாளர் உற்பத்திகளிலும் இந்த இரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்வதும் இந்த ஆய்வின் நோக்கமாகும்.
அக்டோபர் – டிசம்பர் 2020 வரை, மறுசுழற்சி நெகிழிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட (கருப்பு நெகிழி) 455 பயனீட்டாளர் மாதிரி உற்பத்திகள், சீன, இந்தோனேசிய, ரஷிய சந்தைகளிலிருந்து வாங்கப்பட்டன. தீ ஆபத்துகளை விளைவிக்காத விளையாட்டு பொம்மைகள் மற்றும் இதர பயனீட்டாளர் உற்பத்திகள் இதற்காகவென்றே தேர்வு செய்யப்பட்டன. ஏனெனில், இவற்றில் ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு சேர்க்கத் தேவையில்லை என்றாலும் கூட, இவை மறுசுழற்சி நெகிழிகளில் தயாரிக்கப்பட்டதன் காரணமாக இவற்றில் ப்ரோமின் தீப்பிழம்பு தடுப்பு இரசாயனங்கள் இருக்கும்.
விளையாட்டு பொம்மைகள், கூந்தல் அலங்காரப் பொருள்கள், அலுவலக மற்றும் சமையலறைத் தளவாடங்கள் ஆகியவற்றுக்கு ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், இவை ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு இரசாயனங்களால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளாலும், குழந்தைப் பெற்றுக்கொள்ளும் பருவத்தில் உள்ள பெண்களாலும் பயன்படுத்தப்படும் பொருள்களாகும். குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களை வாயில் வைக்கும் பழக்கம் உடையவர்கள். சமையலறை சாதனங்கள் நாம் உட்கொள்ளும் உணவோடு தொடர்புடையவை. கூந்தல் அலங்காரப் பொருள்களும், அலவலக சாதனங்களும் பெண்களின் சருமத்தோடு தொடர்புடையவை.
சீனா, இந்தோனேசியா, ரஷியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 455 சோதனை மாதிரிகளில் 73 மாதிரிகள் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டன. இவற்றில் எல்லா மாதிரிகளிலுமே ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாடுகளில், சோதனைக்கு அனுப்பப்பட்ட 83 மாதிரிகளில், 80-இல் ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு இரசாயனங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாடுகளின் சிறாருக்கான தயாரிப்புகள் மற்றும் இதர பயனீட்டாளர் பொருள்களில் உள்ள புரோமினேட்டட் டையோக்சினின் அளவு எரிஉலைகளிலிருந்து வெளிப்படும் ஆபத்தான இரசாயனங்களுக்கு இணையான அளவில் இருந்தது.
ஜோர்டானின் விளையாட்டுக் கார், தான்சானியாவின் பேனா, பென்சில்களை வைக்கும் தட்டுகள் (அலுவலகப் பொருள்கள்) மற்றும் மொரோக்கோவின் கூந்தல் அலங்காரப் பொருளில் அளவுக்கு அதிகமான போளி ப்ரோமினேட்டட் டைஃபெனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகளில் போளி ப்ரோமினேட்டட் டைஃபெனில் இதர் இருந்தது அதிர்ச்சிக்குரிய விஷயமாகும். ஏனெனில், வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் மூளை ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு நச்சுத்தன்மைக்கு விரைவில் ஆளாகலாம். நரம்பியல் நச்சுத்தன்மை மற்றும் நாளமில்லா சுரப்பி சீர்குலைவு யாவும் போளி ப்ரோமினேட்டட் டைஃபெனிலின் ஓர் அங்கமாகும். இவை குழந்தைகளுக்கு அதிகக் கேடுகளைக் கொண்டு வரும் (கோஸ்தா மற்றும் கியோர்டேனோ 2007). மகப்பேற்றின்பொழுது மற்றும் குழந்தை பிறப்புக்குப் பிறகு போளி ப்ரோமினேட்டட் டைஃபெனில் பாதிப்புக்கு உள்ளாகும் சிசுக்கள் கவனச் சிதறல், அதீத இயக்கம் மற்றும் இயல்புப் பிறழ்வு ஆகிய பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
கூந்தல் அலங்காரப் பொருள்கள், சமையலறை மற்றும் அலுவலகத் தளவாடங்கள் பெரும்பாலும் பெண்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்பு அதிக ஆபத்துக்களை உருவாக்கும். ஏனெனில் போளி ப்ரோமினேட்டட் டைஃபெனில் இதர் மற்றும் தெட்ரோப்ரோமொபிஸ் ஃபீனோல் ஏ, கரு வளர்ச்சியின்பொழுது நஞ்சுக்கொடியைக் கடந்து செல்கிறது. (மிட்ரோ, ஜோன்சன் 2015). அது தாய்ப்பாலில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. (தாங் மற்றும் சாய் 2017).
ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்
நஞ்சற்ற பொருளாதாரச் சுழற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்புக்குப் பதிலாக இது போன்றே அபாயகரமான மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ப்ரோமின் தீப்பிழம்புத் தடுப்புகளை படிப்படியாகச் சந்தையிலிருந்து நீக்குவதன் மூலம் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு உருவாக்குவதைத் தவிர்க்க முடியும்.
References:
Blake, A. (2004, September). Health and Environmental Hazards of PBDEs and other BFRs | IPEN
https://ipen.org/documents/health-and-environmental-hazards-pbdes-and-other-bfrs
Costa, L. G. and G. Giordano (2007). “Developmental neurotoxicity of polybrominated diphenyl ether (PBDE) flame retardants.” Neurotoxicology 28(6): 1047-1067.
Mitro, S. D., T. Johnson and A. R. Zota (2015). “Cumulative Chemical Exposures During Pregnancy and Early Development.” Curr Environ Health Rep 2(4): 367-378.
Petrlik, J., Beeler, B., Straková , J. (2022, May). Hazardous chemicals in plastic products | IPEN. Arnika.
https://ipen.org/documents/hazardous-chemicals-plastic-products
Straková , J., Grechko, V., Brosché , S., Karlsson, T., & Buonsante, V. (2022, February). Brominated Flame Retardants in Plastic Products from China, Indonesia, and Russia | IPEN. Arnika.
https://ipen.org/documents/brominated-flame-retardants-plastic-products-china-indonesia-and-russia
Tang, J. and J. X. Zhai (2017). “Distribution of polybrominated diphenyl ethers in breast milk, cord blood and placentas: a systematic review.” Environ Sci Pollut Res Int 24(27): 21548-21573.