மக்களின் மீன் எனப்படும் கானாங் கெளுத்தி என்ற ஈக்கான் ராக்யாட் குறித்து விசாரிக்க வேண்டும். மீன்வளத் துறையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது

சந்தையில் இந்திய கானாங்கெளுத்தி (ஈக்கான் கெம்போங்) என்ற மீன்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், இதை ஏற்படுத்துவதில் இடைத்தரகர்களின் பங்கு இருப்பதாகவும் மலேசிய போட்டி ஆணையம் கூறியுள்ள கூற்றை விசாரிக்க மீன்வளத் துறையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த கானாங் கெளுத்தி ஒரு கிலோவிற்கு மவெ18.00 லிருந்து மவெ22.00 வரையில் விலையை அதிகரித்து விற்கப்படுவதாக மைசீசியின் தலைமை நிர்வாக அதிகாரி இஸ்கண்டார் இஸ்மாயில் கூறியிருக்கின்றார்.

இதன் காரணமாக சீனா, யேமன் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்திய கானாங்கெளுத்தியை இறக்குமதி செய்ய மலேசியா நிர்பந்திக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். அத்துடன் நமது உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சிங்கப்பூரிலிருந்து உறைந்த இந்திய கானாங்கெளுத்தி கொண்டுவரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் நம் நாட்டின் உணவு விநியோகமும் பயனீட்டாளர் சுமைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கும் என்று தாம் கவலைப்படுவதாக முகைதீன் கூறினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி விசாரணை செய்வதோடு தேவையான உடனடி நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்;

கூடுதலாக, இளம் இந்திய கானாங்கெளுத்திகளை பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மீன்வளர்ப்பு திட்டங்களை நிர்வகிப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் மீன்களுக்கு இந்த இளம் மீன்களை தீவனமாக விற்பதாகவும் தெரிகிறது. இந்த சம்பவங்கள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதனால் இது குறைந்த விநியோகத்தையும்
சந்தையில் இந்த மீன்களின் விலையை அதிகரிப்புக்கும் ஒரு காரணமாக அமையலாம் என்றார் அவர்.

எதிர்காலத்தில் நாட்டின் மீன்வள வளங்களை பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக மீன்வள சட்டம் 1985 ஐ கண்டிப்பாக அமல்படுத்துமாறு மீன்வளத் துறை மற்றும் மலேசிய கடல் அமலாக்க முகமை (எம்.எம்.இ.ஏ) க்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுப்பதாக முகைதீன் தெரிவித்தார்.

முகைதீன் அப்துல் காதர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகை செய்தி. 7.4.21