மலேசியா பூஜ்ஜிய கழிவு உள்ள நாடாக உருவாக வேண்டும். இரண்டு அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள். கழிவு எரிப்புத் திட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும்.

பத்திரிகைச் செய்தி:  20.8.2024

“மலேசியா பூஜ்ஜிய கழிவுகளை நோக்கி அதாவது கழிவு இல்லா நாடாக  நகர வேண்டும் என பினாங்கின் இரண்டு பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதே நேரத்தில் கழிவுகளை எரிக்கும் திட்டத்திற்கும் அவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கழிவுக்கு எரிசக்தி எரிக்கப்படுவதற்கு எதிரான திட்டம்” என்ற தலைப்பில் மகஜர் ஒன்றை பிரதமர், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கபட்டுள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் செயலாளர் மகேஸ்வரி சங்கரலிங்கம் கூட்டாக சமர்ப்பித்த மகஜரில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 14.8.2024 அன்று இந்த மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது. மலேசியாவில் முன்மொழியப்பட்டுள்ள கழிவு-ஆற்றல் எரிப்புத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மகஜரில்  வலியுறுத்தப்பட்டதாகவும் மேலும் மலேசியா பூஜிய கழிவுக்கு மாறவேண்டும்  என்றும்  அழைப்பு விடுக்கப்பட்டது என அவர்கள் கேட்டுகொண்டனர்.

வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு  மலேசியாவில் 2040 ஆம் ஆண்டுக்குள் 18 கழிவு எரிப்பு ஆலைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என அதன் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

18 உத்தேச ஆலைகள் கெடாவில் கட்டப்படும் என்று அதன்  அமைச்சர் டொல்லியிருந்தார். ஜோகூர், பகாங், கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, பேராக் மற்றும் கிளாந்தான் ஆகிய இடங்களில் இந்த எரிப்பு ஆலைகள் கட்டப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதனை தாங்கள் முழுமையாக  கடுமையாக எதிர்க்கிறோம் என முகைதீன் மற்றும் மகேஸ்வரி தெரிவித்தனர்.

டயாக்ஸின்கள், ஃபுரான்கள், கன உலோகங்கள் மற்றும் துகள்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளை இவை வெளியிடுவதால், கழிவு எரிப்பு இயந்திரங்கள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும்.

மேலும் இந்த கழிவு எரிப்பு இயந்திரங்கள் நச்சுத்தன்மையை அதிகப்படுத்துவதோடு அபாயகரமான சாம்பலையும் உருவாக்கும். இது மறுசுழற்சி முயற்சிகள் மற்றும் வளங்களை பாதுகாப்பதை தடுக்கிறது.

இந்த எரிப்பு முறை என்பது ஆற்றல் உற்பத்திக்கான மிகவும் விலையுயர்ந்த மற்றும் குறைந்த செயல்திறன் கொண்ட முறையாகும். மேலும், இந்த எரியூட்டிகள் புதைபடிவ எரிபொருள் மின் நிலையங்களை விட ஒரு மெகாவாட்- மணி நேரத்திற்கு அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன.

இது காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது. புதிய கழிவுகளை எரிக்கும் தொழில்நுட்பங்கள் மிகவும் சுத்தமாகவும், குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்புடனும் இயங்குவதாகக் கூறப்படுகிறது. வலுவான பராமரிப்பு அட்டவணைகளுடன் கூடிய புதிய எரியூட்டும் தொழில்நுட்பங்கள் குறைவான தீங்கு விளைவிப்பதாக சில கருத்துக்கள் உள்ளன.

ஆனால் வெளிப்பாடுகளால் ஏற்படும் நோய்கள் பல ஆண்டுகள் ஒட்டுமொத்த வெளிப்பாட்டிற்குப் பிறகுதான் வெளிப்படும். மலேசியாவின் கழிவு மேலாண்மை சவால்களை எதிர்கொள்ள,  பூஜ்ஜிய கழிவு அணுகுமுறைக்கு ஆதரவாக, வள திறன், மீட்பு மற்றும் பாதுகாப்பை கையாள வேண்டும்.

இந்த உத்தியில் கழிவுகளைக் குறைத்தல், உரமாக்குதல், மறுசுழற்சி செய்தல், மறுபயன்பாடு, மறு நிரப்புதல், பழுதுபார்த்தல் மற்றும் பயனீடு பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஆகியவை அடங்கும். முடிவில், இந்த இயந்திரங்கள் நமது கழிவு மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு தவறான தீர்வுகள் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஆகவே செலவு குறைந்த, பாதுகாப்பான,  சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பங்களிக்கக்கூடிய பூஜ்ஜிய கழிவு அணுகுமுறைகளில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை நாங்கள் கடுமையாக வலியுறுத்த விரும்புகின்றோம் என முகைதீன் அப்துல் காதர் மற்றும் மகேஸ்வரி சங்கரலிங்கம் கூட்டாக தெரிவித்தனர்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

மகேஸ்வரி சங்கரலிங்கம்
பொதுச்செயலாளர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு