பத்திரிகைச் செய்தி. 12.11.2024
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு, மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம், ஆகியவை இணைந்து உள்நாட்டில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக எங்களின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
பீன்ஸ்ஸின் விலை ஒரு கிலோவுக்கு மவெ 9.00 லிருந்து மவெ 17.50 ஆகவும், வெண்டைகாய் மவெ 7.00 லிருந்து மவெ 12.50 ஆகவும், நீளமான பீன்ஸ் மவெ 8.00 லிருந்து மவெ 20.00 ஆகவும், சாவி கீரையின் விலை மவெ 6.00 லிருந்து மவெ 12.00 ஆகவும் உயர்ந்துள்ளது.
சிவப்பு மிளகாய் மவெ 8 முதல் மவெ18.00 வரை உயர்வு கண்டுள்ளது. அண்மையில் பெய்த மழையினால் இந்த பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். மழைக்காலம் இன்னும் குறையவில்லை என்பதால், மலேசியா மற்ற நாடுகளுக்கு மீன் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி, மழைக்காலம் முடியும் வரை உள்ளூர் தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முகைதீன் கருத்து தெரிவித்தார்.
அமலாக்கப் பிரிவினர் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இந்த கடுமையான விலை உயர்வு ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் உணவுப் பழக்கத்தை கடுமையாக பாதிக்கலாம், ஏனெனில் அதிக செலவுகள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
தீர்க்கமான நடவடிக்கைக்கு பலமுறை அழைப்பு விடுத்தாலும், காய்கறிகளின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்த பாமா போதுமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது இந்த விலை உயர்வு காட்டுகிறது.
உணவு விநியோக முறைகளின் செயல்திறனை மேம்படுத்த வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சை பி.ப.சங்கம் வலியுறுத்துகிறது. இடைத்தரகர்களின் பங்கைக் குறைத்தல், நேரடி சந்தை இணைப்புகளை உருவாக்குதல் மற்றும் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல் ஆகியவை செலவுகளைக் குறைக்க உதவும்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்கள், வேளாண்மைப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றின் மூலம் விவசாயிகளை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும். இது உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கவும் விலையைக் குறைக்கவும் உதவும் என முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்