மாணவர்கள் பயன்படுத்தும் அழிப்பான்களில் ஆபத்தான இரசாயனங்கள்.

பத்திரிகை செய்தி. 26.4.22

மிக கவனம் தேவை என எச்சரிக்கை விடுக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

எண்டோகிரைன் எனப்படும், ரத்த நாளங்களை சீர்குலைக்கும் இரசாயனங்கள் அடங்கிய அழிப்பான்கள் சந்தையில் பரவலாக விற்கப்படுவதால், பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விற்கப்படும் அழிப்பான் பொருட்களில் சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்கள் இருப்பதால் இது பயன்படுத்துவோருக்கு பலதரப்பட்ட உடற் சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் கூறினார்.

இந்த அழிப்பான்கள் பினாங்கில் உள்ள பிரபலமான விற்பனை நிலையங்களிலிருந்து வாங்கப்பட்டன. பெரும்பாலான அழிப்பான்கள் சீனாவிலிருந்து தயாரிக்கப்பட்டு இங்கே விற்பனை ஆகிறது.

சில அழிப்பான்களில் கற்பனை வடிவங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் பழ வாசனைகள் போன்றவை இருந்தன.

இது போன்ற அழிப்பான்களை குழந்தைகள் வாயில் வைத்து விளையாடும் போது அதில் இருக்கின்ற நச்சு இரசாயனம் அவர்ககின் உடலுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக முகைதீன் தெரிவித்தார்.

அழிப்பான்கள் பற்றிய ஆய்வில், சோதனை செய்யப்பட்ட 40 மாதிரிகளில், அவற்றில் 26ல், நச்சு கலவைகள் இருப்பது கண்டறியப்பட்ட்டது.

கொரியாவில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த ஆய்வு செய்யப்பட்டது.
கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற நச்சு இரசாயனங்கள் பொருட்களில் சேர்க்கப்படக்கூடாது என சட்டங்கள் உள்ளன. இது போன்ற சட்டங்கள் நம் நாட்டிற்கும் தேவை.

இந்த நச்சுக்கள் உடலில் மிக அதிகமானால் நரம்பியல் பிரச்சினை, நடத்தை கோளாறுகள், உடல் பருமன், வளர்சிதை மாற்ற செயலிழப்பு, இனப்பெருக்க கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல்நலப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, நாட்டில் விற்கப்படும் பொருட்களில் உள்ள சுரப்பிகளை சீர்குலைக்கும் இரசாயனங்களுக்கு அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என முகைதீன் அப்துல் காதர் கேட்டுக் கொண்டார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கில் பயனீட்டாளர் சங்கம்