நம் நாட்டு சாலைகளில் கொல்லப்படும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு விஷயம் அல்ல என்று மண்ணின் தோழர் கழகத் தலைவர் மீனாட்சி இராமன் கூறினார்.
இப்படியாக வனவிலங்குகள் மட்டுமல்லாது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளும் சாலைகளில் அடிபட்டு இறக்கின்றன.
சாலைகளில் மனிதர்கள் அடிபட்டு இறந்து போனால், அது பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் வனவிலங்குகளின் இறப்புக்கு எந்த வித விசாரணையும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. தவறிழைத்த வாகன ஓட்டுநர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை. காயத்திற்குள்ளான அல்லது இறந்துபோன வனவிலங்குகள் அரிய வகை விலங்காகவோ அல்லது அருகி வரும் உயிரினங்களாகவோ இருக்கக்கூடும். இதை விட வேதனையான விஷயம் என்னவென்றால் செத்துப்போன பிராணிகளை அவற்றின் உடலுறுப்புகளுக்காக கண்டதுண்டமாக வெட்டி எடுத்துச் செல்லும் மனிதர்களின் செயல்கள்தாம். குறிப்பிட்ட வனவிலங்குகளின் உடல் பாகங்கள் பாலுணர்வு ஊக்கி மருந்தாக செயல்படுவதாக எண்ணி அவற்றைச் கூறுபோட்டு வியாபாரம் செய்கிறார்கள்.
இப்படிச் சாலைகளில் அடிபட்டு இறக்கும் வனவிலங்குகளுக்கு யார் காரணம்? பெரும்பாலான வாகனமோட்டிகள் சாலைகளின் இருபக்கக் காடுகளிலிருந்தும் விலங்குகள், ஊர்வன ஆகியவை சாலையைக் கடக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு வாகனத்தைச் செலுத்துவதில்லை. ஆக அதிகமாக கொல்லப்படும் உயிரினங்களில் பல்லி வகைகள், பாம்புகள், எறும்புத்திண்ணி (pangolins), தவளை, குரங்கு ஆகியவை முதலிடம் வகிக்கின்றன. சிலர் சாலையை வனவிலங்குகள் கடக்கலாம் என்ற எச்சரிக்கை வாசகங்கள் சாலை ஓரங்களில் நிறுவப்பட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட அலட்சியமாகத்தான் வாகனத்தைச் செலுத்துகின்றனர் என்றார் மீனாட்சி இராமன்.
வனவிலங்குகளின் புகலிடமான காடுகளை வீழ்த்தி சாலைகளை நிர்மாணிப்பதும், சாலையில் விரையும் வாகனங்களின் எண்ணிக்கைப் பெருக்கமும்தான் வனவிலங்குகள் அழிந்து போவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. காடுகள் அழிப்பு, வனவிலங்குகள் வாழ்விடங்களை நிர்மூலமாக்குதல், நன்செய் நிலநாசம், வனவிலங்குகளை திருட்டுத்தனமாக வேட்டையாடி வணிகம் செய்தலும் அவை அருகி வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
சாலைகள் நிர்மாணிப்புக்காக காடுகள் துண்டாக்கப்படுவதால் அவை வனவிலங்குகள் காலங்காலமாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும் அவற்றின் வழிப்பாதையை மறித்துவிடுகின்றன. இப்படி சாலைகளில் வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்கும் பொருட்டு சூழல்சீர்-பாலங்கள் (eco-bridge), மேம்பாலம், அடிநில வழி, மேல்நில வழி ஆகியவற்றை உருவாங்கி ஒரு துண்டாக்கப்பட்ட வனத்திலிருந்து இன்னொரு துண்டாக்கப்பட்ட வனத்திற்குச் செல்ல வழியமைத்து வருகின்றனர். ஆனால் இவை யாவும் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்றார் மீனாட்சி இராமன்
வனவிலங்குகளுக்காக செய்யும் இதுபோன்ற சின்னச் சின்ன வசதிகள் சாலை விபத்துக்களைக் குறைக்க வழி செய்தாலும் அதுவே இதற்குச் சிறந்த தீர்வாக முடியாது. இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு இன்னும் நிறைய சாலைகளை வனவிலங்குகளின் வாழ்விடங்களில் நிர்மாணிக்கக்கூடாது. முதலில் வனவிலங்குகளின் வசிப்பிடங்களில் புதிய சாலைகள் குறுக்கே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வனவிலங்குகள் இறந்து போவதை முற்றிலும் தவிர்ப்பதற்கு நாம் எதுவும் செய்துவிட முடியாது. ஆனால் சாலைகளில் வனவிலங்குகளுக்கு நிகழும் கொடூரங்களை கருத்தில் கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு வாகனம் செலுத்துவது தொடர்பான கல்வித் திட்டங்களைக் கொண்டு வருதல் வேண்டும். வாகனத்தைச் செலுத்தும்பொழுது இடர்படும் வனவிலங்கு பற்றி எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வை ஊட்டுவதற்கு வானொலி, தொலைக்காட்சி மற்றும் பல்லூடகங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு சாலை மேம்பாட்டுத் திட்டம் அவ்விடத்தில் வசிக்கும் விலங்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) செய்யப்பட வேண்டும். வனவிலங்கு அதிகாரிகளின் ஆலோசனைகளும் கேட்டறியப்பட வேண்டும்.
மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகின்ற காரணத்தால் எதிர்காலத்தில் சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு, செயல்திறன் மிக்க வியூகத் திட்டங்கள் எதிர்கால சாலை நிர்மாணிப்புகளில் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். வனவிலங்குகள் வசிப்பிடங்களில் சாலைகளை நிர்மாணிப்பதைத் தவிர்ப்பதே மிகச் சிறந்த வியூகமாகும் என்று மண்ணின் தோழர் கழகத் தலைவர் மீனாட்சி இராமன் கூறினார்.
மீனாட்சி இராமன்
தலைவர்
மண்ணின் தோழர் கழகம்
பத்திரிகைச் செய்தி
7.10.2020