வலுவான நெகிழி ஒப்பந்தம் தேவை! உலக நாடுகளுக்கு பினாங்கு இடைநிலை பள்ளி மாணவர்கள் வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி   10.10.2024

நெகிழி உடன்படிக்கைக்கு உலக தலைவர்கள் செவிசாய்க்க வேண்டும் என மாணவர்கள் சக்தி வாய்ந்த செய்தியை அனுப்பி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கமும், பூவுலகின் நண்பர்கள் இயக்கமும் கூட்டாக தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு நவம்பரில் ஒரு உலகளாவிய நெகிழி உடன்படிக்கைக்கான ஐ.நா. பேச்சுவார்த்தையில் உலகம் தனது கவனத்தைத் திருப்புகையில், பினாங்கில் உள்ள ஒரு இடை நிலைப் பள்ளியைச் சேர்ந்த 190 மாணவர்கள்  தங்களின் உடல் அசைவுகளைப் பயன்படுத்தி அரசாங்கங்களுக்கு ஒரு தைரியமான செய்தியை அனுப்பியுள்ளனர்.

“வலுவான நெகிழி ஒப்பந்தம்” என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் ஒரு  அடையாளத்தையும் மற்றும் நெகிழி உற்பத்தியைக் குறைக்க உலகை வலியுறுத்தும் ஒரு செய்தியை துணிப் பதாகை மூலம் இந்த நிகழ்வு நடைபெற்றது என பி.ப.சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் தலைவர் மீனாட்சி ராமன்  கூட்டாக இணைந்து தெரிவித்தனர்.

கடந்த 8ம் தேதி  அன்று   பினாங்கு பயனீட்டாளர்  சங்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் இணைந்து நடத்திய நிகழ்வில்,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  தங்கள் பள்ளி மைதானத்தில் மனித அடையாளம் மூலம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நெகிழி மாசு நெருக்கடியை நிறுத்தவும், நெகிழி கழிவுகளை அதன் மூலத்திலேயே குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மனித விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. நெகிழி மாசுபாடு மற்றும் உலகளாவிய நெகிழி ஒப்பந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட சுமார் 400 பேர் இந்த நடவடிக்கையில்  ஈடுபட்டதாக முகைதீன் கூறினார்.

நெகிழி மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதால், எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக நெகிழி பயன்பாட்டைக் குறைக்க உறுதிமொழி அளிக்க இது ஒரு வாய்ப்பாகும்  என்று  பள்ளியின் மூத்த உதவியாளர்  முகமது ஆதம் பின் சல்லேஹன் கூறினார்.

நெகிழி மாசுபாடு ஒரு பெரிய நெருக்கடியாக மாறியுள்ளதால், இது அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்றார் பூவுலகின் பொதுச்செயலாளர் மகேஸ்வரி. உலகளவில், ஆண்டுக்கு 400 மில்லியன் டன்களுக்கும் அதிகமான நெகிழி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் பாதிக்கும் மேற்பட்டவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழியாகும் என்றும்  மகேஸ்வரி சங்கரலிங்கம் மேலும் தெரிவித்தார். “இந்த நெகிழி உற்பத்தி செய்வது என்பது காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் நமது ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் நச்சு இரசாயனங்களை வெளியிடுகிறது.

அதிக நெகிழி உற்பத்தி என்பது அதிக நெகிழி மாசுவைக் குறிக்கிறது. ஒவ்வொரு நாளும்,  2,000 குப்பை லாரிகளுக்கு சமமான நெகிழி குப்பைகள் உலகின் பெருங்கடல்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் கொட்டப்படுகின்றன.

உலகளாவிய நெகிழி ஒப்பந்தம் என்பது நெகிழியின் முழு வாழ்க்கைச் சுழற்சியிலும் முறையான மாற்றத்திற்கான வாய்ப்பாகும். இந்த ஒப்பந்தத்திற்கு 2024 ஒரு முக்கியமான ஆண்டாகும்.

இது ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மில்லியன் டன் கணக்கான  நெகிழி  கழிவுகளை பணக்கார நாடுகள், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் கானா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

பேச்சுவார்த்தைகள் நெருங்க நெருங்க, நெகிழி எதிர்ப்பு வேகம் கூடுகிறது. உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள், புதைபடிவ எரிபொருளின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கும், ஒப்பந்தத்தின் செயல்திறனை நீர்த்துப்போகச் செய்யும் கார்ப்பரேட் நலன்களை எதிர்ப்பதற்கும் தயாராகி வருகின்றன.

முகைதீன் அப்துல் காதர
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

மீனாட்சி ராமன்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்