விலைக் குறியிடல் சட்டங்கள் கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி : 19.06.2024

இன்னும் பல கடைகளில் விற்பனை பட்டியல் காணப்படவில்லை.

விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1946 திருத்தம் 1973, பிரிவு 8(1)யை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம், உள் நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செல்வின அமைச்சை கேட்டுகொண்டுள்ளது.

உணவுக் கடைகள், காய்கறி விற்கும் சந்தைகள், இரவுச் சந்தைகள், உணவகங்கள் மற்றும் பலதரப்பட்ட கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விற்பனையாளர்களிடையே இந்த விலை கட்டுப்பாடு பின்பற்றப்படவில்லை என பி.ப.சங்கம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

இந்த விலைபட்டியல் தொடர்பாக பினாங்கு தீவு முழுவதும் பி.ப.சங்கம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.

இந்த ஆய்வில் அடையாளம் காணப்பட்ட முதன்மைக் குற்றவாளிகளாக உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்யும் கடைகள்தான் இந்த விலைகட்டுப்பாட்டை பின்பற்றவில்லை என தெரியவந்துள்ளது என்றார் முகைதீன்.

அந்த கடைகள் விலைகளைப் புதுப்பிக்கவில்லை. இவைகள்
பயனீட்டாளர்களுக்கு தவறான தகவல்களை தருகின்றன.

இதில் வெளிப்படையான விலை நிர்ணயம் இல்லாததால், பயனீட்டாளர்கள் அதிகம் செலவு செய்யவேண்டியதுள்ளது.

மேலும், டீசல் விலையில் சமீபத்திய அதிகரிப்பு, உணவுச் செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

மேலும் ஒரு பயனீட்டாளர் விலையை முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

விலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், வாங்குபவர்களுக்கு விலைகளைப் பற்றித் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வது விற்பனையாளர்களின் பொறுப்பாகும்.

ஆனால் அமலாக்கம் போதுமானதாக இல்லை என்பதால், சட்டத்தின் செயல்திறன் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகிறது.

எனவே, விலைக் கட்டுப்பாடு சட்டம் 1946 திருத்தம் 1973 ன் பிரிவு 8(1) ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சை பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் தெரிவித்தார்.

பயனீட்டாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும், நியாயமான வர்த்தக நடைமுறைகளை உறுதிப்படுத்தவும் கடுமையான அமலாக்கம் மற்றும் சட்டத்தை மீறும் குற்றவாளிகள் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும் என முகைதீன் அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்