விலைப் பட்டியல் இல்லாத கடைகள் . சீன மொழியில் உள்ள விலைப்பட்டியல்! சட்டத்தில் இடமில்லை ஆனால் நடவடிக்கை இல்லை

பத்திரிகை செய்தி. 5.5.22

விலைக் குறியிடல் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்!
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1946 திருத்தம் 1973, பிரிவு 8 (1) ஐ, உடனடியாக செயல்படுத்துவதற்கு, உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பி.ப.சங்கம் பினாங்கு தீவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் பல வணிகர்கள் குறிப்பாக சிறிய உணவுக் கடைகள் மற்றும் உணவகங்கள் விலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அப்பட்டமாக மீறியிருப்பது தெரியவந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

ஸ்டால்கள் மூலம் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை பட்டியல் எதுவும் காட்டப்படாத கடைகளே முக்கிய குற்றவாளிகளாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சில கடைகளில் முற்றிலும் சீன மொழியில் எழுதப்பட்ட விலை பட்டியல்கள் இருந்தன. இது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இதுபற்றி அமைச்சு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

அடுத்ததாக தங்கள் விலைப் பட்டியலைப் புதுப்பிக்காத உணவகங்கள் பல இருந்தன. பல உணவு விற்பனை கடைகள், அவற்றின் விலைப்பட்டியலை உணவு வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து சிறிது தொலைவில் வைத்திருந்தன.

இதனால், ஒரு வாடிக்கையாளர் தனது தட்டில் வைக்கப்படும் உணவின் விலையை அறிந்து கொள்வது கடினம். குறைவான கட்டணம் என்ற நினைப்பில் பணம் கட்டும்போது கூடுதலாக இருந்தால் அவர் என்ன செய்வார் என முகைதீன் கேள்வி எழுப்பினார்.

ஆகவே பொதுவாக, இந்த சந்தர்ப்பங்களில் பயனீட்டாளர் அதிக கட்டணம் செலுத்த நேரிடும். அப்படி கூடுதலாக வசூலிக்கப்பட்டால் ஒரு பயனீட்டாளர் வாதாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றார் அவர்.

இந்தச் சட்டத்தின்படி, வாங்குபவர்களுக்கு விலையைப் பற்றித் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு விற்பனையாளருக்கு உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, நாடு தழுவிய அளவில் விலைபட்டியல் பற்றி சோதனயிட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் கூறினார்.

அதே நேரத்தில் விலைக் கட்டுப்பாடு சட்டம் 1946 திருத்தம் 1973 இன் பிரிவு 8(1) இன் படி சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

குற்றவாளிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்