விஷப் பட்டியலிருந்து நிகோடினை அகற்றுவது பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

இன்னும் அதிகமானோர் இதனை உபயோகித்து நிக்கோட்டின் பித்தர்களாக
மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது!
எச்சரிக்கை விடுக்கின்றது,  பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.
________________________________________________________________________________

மலேசிய சுகாதார அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் விஷ வாரியம், நிக்கோட்டின் என்ற திரவியம் மிகவும் ஆபத்தானது என நிர்ணயம் செய்து அதனை யாரும் எளிதில் வாங்க முடியாத அளவுக்கு விதியை அமைத்தது.

அதே போல் அந்த நிக்கோட்டினை யாரும் பயன்படுத்தவும் முடியாத அளவிற்கு தடை விதிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிக்கோட்டின் திரவியம் சிகரெட், வேப் மற்றும் மின்னியல் சிகரெட்டுகளில் சேர்க்கப்பட்டு விற்கப்படுகிறது.

விஷ சட்டத்தின் கீழ் வருகின்ற இந்த நிக்கோட்டினை யாராவது வாங்கி உபயோகித்தால் அவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.

ஆனால் இப்பொழுது சுகாதார அமைச்சு தீடிரென இந்த நிக்கோட்டின் திரவியம் விஷ சட்டத்தின் கீழ் வராது என்ற அறிவிப்பு செய்திருப்பதால், யார் வேண்டுமானாலும் இதனை உபயோகிக்க முடியும் என்ற அறிவிப்பு பி.ப சங்கத்திற்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி இருப்பதாக இந்த புகை மற்றும் வேப்/ மின்னியல் சிகரெட்டுகளுக்கு எதிராக கடந்த 30 ஆண்டுகளாக எதிர்ப்பு குரல் கொடுத்துவரும் சுப்பாராவ் தெரிவித்தார்.

நிகோடினை விஷப் பட்டியலில் இருந்து நீக்க அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நாட்டிலுள்ள சுமார் 70 க்கும் மேற்பட்ட அரசு சார்பில்லா இயக்கங்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாகவும் சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது. அரசாங்கம் விஷம் வாரியத்தின் கருத்தை செவிமெடுத்திருக்க வேண்டும். சுகாதார அனைச்சுக்கு இந்த வாரியம் கடந்த காலங்களில் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளது. அப்படி வாரியத்தின் கருத்துக்கள் தேவை இல்லையென்றால் அதனை கலைத்து விடலாம் எனவும் சுப்பாராவ் ஆலோசனை கூறினார்.

நிக்கோட்டின் என்பது ஒரு போதைப்பொருள். இது ஒரு விஷம். விஷத்தை உட்கொள்ள அரசாங்கம் ஊக்குவிக்கின்றதா. வேப் திரவத்தில் காணப்படும் நிகோடினின் ஆபத்து குறித்து ஆரம்ப பள்ளிகள் உட்பட மாணவர்களுக்கு கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாங்கள் வழங்கி வருகின்றோம்.

இப்போது அது விஷ பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இப்போது விஷத்தின் தீமைகளை கேட்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் விஷம் குடிப்பது சரியா என்று கேட்பார்கள்.
வேப்பில் விஷ திரவம் இருப்பதை உணர்ந்த பல பள்ளி மாணவர்கள் அதனை இழுப்பதை விட்டுவிட்ட சம்பவங்கள் நிகழ்துள்ளதாகவும் சுப்பாராவ் நினைவு படுத்தினார்.
புகைப்பழக்கத்திற்கு எதிராகவும் நிகோடினுக்கு எதிராகவும் போராடும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கடின உழைப்பு முற்றிலும் வீணாகிறது.

விஷப் பட்டியலில் இருந்து நிகோடினை நீக்க அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் பெரும் தவறு செய்து வருகிறது. சுகாதார அமைச்சு குழந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நிக்கோட்டின் என்ற போதைப்பொருளை குடிக்கக் கற்றுக்கொடுக்கிறது

எதிர்காலத்தில் ஆரோக்கியமான மாணவர்களை உருவாக்கும் எங்களின் முயற்சிகள் வீணாகின்றன. நம் மலேசியாவில் அதிகமான Vapealocholics ஐப் பார்க்கப் போகிறோம்.

எதிர்கால ஆரோக்கியமான தலைமுறையின் நலனுக்காக இந்தப் பிரச்சினையை மறுபரிசீலனை செய்யுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுகாதார அமைச்சை வலியுறுத்துகிறது. வரியிலிருந்து பணம் சம்பாதிப்பது மற்றும் நிகோடினை அனுமதிப்பது தவறாகும். நமது எதிகால இளைய தலைமுறையினர் காப்பாற்றப்பட வேண்டும்.

என் வி சுப்பாராவ்
கல்வி மற்றும் புகை எதிர்ப்பு அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Email : subbarow@gmail.com