“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது

வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று
“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” என்ற வழிகாட்டிப் புத்தகத்தை வெளியீடு செய்துள்ளது. இருபது பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் முழு வண்ணத்தில் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் என்று 4 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.
கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் பெரும்பாலானோர் சொந்தமாகக் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.  அரசாங்கம் மக்களைத் தங்கள் வீட்டுக்கு அருகாமையிலும் பயிர்களை வளர்க்கத் தூண்டுவதோடு நகர்ப்புற பயிர் வளர்ப்புத் திட்டத்தையும் ஊக்குவித்து வருகிறது.
பயிர்களைப் பூச்சிகள் தாக்குவது இயற்கையே.  இதனைக் கையாளும் முறைகளை அறிந்திராத பயனீட்டாளர்கள், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது எப்படி என்று தொடர்ந்து ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.  இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பூச்சிகளை அழிப்பதற்காகப் பயனீட்டாளர்கள் நச்சு இரசாயனங்களை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்த  வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  பசுமை நடவடிக்கை வாரத்திற்கான கருப்பொருளும் இதுவேயாகும்.
நம் தோட்டத்திற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் இவற்றைப் பிடித்துத் தின்னும் நன்மை செய்யும் பூச்சிகள் ஆகியவற்றின் பங்கு பற்றி இந்த வழிகாட்டி விவரிக்கிறது.  அதோடு, பூச்சிகளை விரட்டுவதற்காக நாமாகவே எப்படிச் சொந்தமாக பூச்சி விரட்டி கரைசல்களைத் தயாரிப்பது, நன்மை செய்யும் பூச்சிகளை எப்படி நம்முடைய தோட்டத்திற்குள் வரவழைப்பது என்றும் இந்த வழிகாட்டியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம், நிலைபேறான வாழ்க்கை முறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கூட்டாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டும், விதைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் தோட்டம் போடுதல் குழுமங்களை உருவாக்கி இயங்கி வருகிறது.  இதனோடு நின்றுவிடாமல், நச்சுத்தன்மையுள்ள, ஆபத்தான பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.  நம் எதிர்கால சந்ததியினர் நச்சுப் பாதிப்புகளுக்கு ஆளாகிவிடாமல் இருப்பதற்கு இது அவசியமாகும் என்றார் முகைதீன்.
உலகம் முழுக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிளைபோசேட் மற்றும் கிளைபோசேட் சார்ந்த களைக்கொல்லிகளைத் தடை செய்யுமாறு கடந்த வாரம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றினைச் சமர்ப்பித்தது. இந்த வேளாண்-இரசாயனங்கள் யாவும் உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் தொடர்ந்து நச்சுத்தன்மைக்கு உள்ளாக்கி வருகின்றன.  இந்த நச்சுகளைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.  அதனோடு இவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கும் கோரிக்கைகளை விடுக்க வேண்டும்.
உலகில், பெரும்பாலான பயிர்களுக்கான மகரந்தச் சேர்க்கை இயற்கை முறையில் பூச்சிகளாலேயே செய்யப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகள் தொடர்ந்து பயன்படுத்தப் படுமேயானால், நாம் நன்மை செய்யும் பூச்சிகளையும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கொன்று நம்முடைய உணவுத் தேவைக்கு நாமே உலை வைத்துவிடுவோம்.
உணவுப் பாதுகாப்பும், தங்குத் தடையின்றி உணவு கிடைப்பதும் நம் வாழ்வின் தேவையாகும்.  நமக்குத் தேவையான பயிர்களைச் சொந்தமாக வளர்ப்பதே இதனை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வழியாகும்.  பகிர்ந்து வாழ்ந்த நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறையை திரும்பக் கொணரவும், நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள நாமே பயிர் செய்யவும், நாம் உற்பத்தி செய்யும் காய்கறிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பயிரிடுதல் தொடர்பாக நம்மிடமுள்ள தகவல்களைப் பகிரவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தோடு இணைந்து செயல்படுங்கள்.

பத்திரிகைச் செய்தி 3.10.2020