பத்திரிகைச் செய்தி
3.8.2017
சீனா, தாய்லாந்து, வங்காளதேசம், வியட்னாம், கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் நம்முடைய உணவு சட்டம் 1985 பிரிவு IV (லேபல்) மற்றும் வாணிப விபரங்கள் சட்டம் 1972 பகுதி 2 பிரிவு 6(1) ஆகியவற்றைப் பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
இந்த உணவுப் பொருட்களில் உள்ள லேபல்களில் உற்பத்தியாளர், விநியோகிப்பாளர் மற்றும் உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவை தொடர்பான விபரங்கள் எதுவும் இல்லை. இதனோடு நில்லாமல் இந்த லேபல்களில் இருக்கின்ற விபரங்கள் யாவும் அவர்களுடைய சொந்த நாட்டு மொழியிலேயே உள்ளன. ஆனால் லேபல்கள் யாவும் மலாய் மொழியில் இருக்க வேண்டும் என நம் நாட்டு சட்டம் வரையறுத்துள்ளது.
முதலில், நம் நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் இவ்வாறான பொருட்கள் நம் நாட்டின் உள்ளே புகுவதற்கே நாம் அனுமதி கொடுக்கக்கூடாது. வெளிநாட்டிலிருந்து வரும் இந்த உணவுப் பொருட்கள் “ஹலால்” உணவுப் பொருட்களா, அவை ஆரோக்கியத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துமா, அல்லது இறப்பைக் கூட ஏற்படுத்துமா என்பவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு அதி ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பட்சத்தில் அவர் தீவிரமான உணவு ஒவ்வாமைக்கு உள்ளாகி இறந்து போகக் கூட நேரிடலாம். லேபல்கள் யாவும் புரியாத வெளிநாட்டு மொழியிலேயே இருக்கின்ற காரணத்தால் அந்த லேபல்களால் யாருக்கும் எந்த வித ஆதாயமும் இல்லை.
உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் விவேகமான, பாதுகாப்பான தேர்வுகளை மேற்கொள்ள நாம் உணவுகளின் லேபலைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்த உணவுகளில் சேர்க்கப்பட்ட சுவைகூட்டுப் பொருட்களின் விபரங்கள் எண்களிலும் சுருக்கமான மொழிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற காரணத்தால் அவை என்னவென்றே பயனீட்டாளர்களுக்குப் புரியாது. ஓர் உணவுப் பொருளில் சேர்க்கப்பட்டிருக்கின்ற மஞ்சள் இரசாயன வர்ணமான தார்த்ராசைன் E102 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை படிக்கும் ஒருவருக்கு அந்த எண் எதைக் குறிப்பிடுகின்றது என்றே புரியாது. சிலருக்கு இந்த வர்ணம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
இதைப் போன்றே பொட்டேஸியம் நைட்ரைட் (Potassium nitrite) E249 என்றும், போட்டேஸியம் நைட்ரேட் (potassium nitrate) E252 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரசாயனங்கள் யாவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. நம்முடைய செரிமான உறுப்பு இவற்றை நைட்ரோசமைன் ஆக மாற்றும். பெரும்பாலான நைட்ரோசமைன் புற்றுநோயை வரவழைக்கும் பொருளாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உணவுப் பொருளில் E எண்கள் பயன்படுத்தப்பட்டாலும் கூட, நம் நாட்டில் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது. ஏனெனில் இவ்வாறான முறைகள் பயனீட்டாளர்களுக்குப் புரியாமல் போய்விடும்.
உணவுப் பொருட்கள் சட்டத்திற்கு உட்பட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு சுகாதார அமைச்சு, உள்நாட்டு வாணிப கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சுக்கு உள்ளது. உணவுப் பொருள் ஹலால் அல்லது ஹாராம் என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்புக்கு ஜாக்கிமிற்கு (JAKIM) உள்ளது. உணவுத் தொழிற்துறை, அவை இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களாக இருந்தாலும் கூட நம் நாட்டு உணவு சட்டத்தைப் பின்பற்றியாக வேண்டும்.
உணவுப் பொருட்களின் காலாவதியாகும் காலக்கட்டமும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். காலாவதியாகிய உணவுப் பொருட்களை மறுபடியும் பேக் செய்து வேறு காலாவதியாகும் தேதி கொடுக்கும் முறைகேடுகளும் தடுக்கப்பட வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சரியான தரத்திலும் சட்டத்திற்கு உட்பட்டு இருப்பதை உறுதி செய்யும் பொருட்டும் அவை குறிப்பிட்ட துறைமுகங்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்தால் மட்டுமே தரமான உணவுப் பொருட்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய முடியும்.
ஆகையால் வெறும் வெளிநாட்டு மொழியில் நம்முடைய சந்தைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் உணவுப் பொருட்களை விரைவில் அகற்ற வேண்டும். வியாபாரிகள் அவ்வாறான பொருட்களை விற்பதையும் தடை செய்ய வேண்டும். இல்லாவிடில் நம்முடைய உணவு சட்டத்தை நாமே கேளிக்குரியதாக ஆக்குவதாக ஆகிவிடும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்