பத்திரிகை செய்தி 31.12.21
அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பேரிடரால் சேகரிக்கப்பட்ட திடக் கழிவுகளை எரிப்பதற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் மற்றும் நீர் வல அமைச்சு அந்த பரிந்துரை சுற்றுச்சூழலுக்கு எதிரானது என இரண்டு அரசு சாரா இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துளன.
பைரோலிசிஸ் எனப்படுகின்ற சிறிய இயந்திரத்தில் இக்கழிவுகள் எரியூட்டப்படும் என அமைச்சு அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பரிந்துரை என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் தலைவர் மீனாட்சி ராமன் ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் சுற்றுச்சூழல் அமைச்சுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அமைச்சின் இந்த ஒப்புதலுக்கு தாங்கள் ஆட்சேபம் தெரிவிப்பதாக அவர்கள் கூறினர். வெள்ளத்தால் உருவாகிய திடக்கழிவுகளை அகற்றுவதற்கு வசதியாக பைரோலிசிஸ் இயந்திரத்தை பயன்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சு (காசா) ஒப்புதல் அளித்துள்ளதை அறிந்து தாங்கள் கவலை கொள்வதாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.
பைரோலிசிஸ் என்பது ஒரு எரித்தல் தொழில்நுட்பம் ஆகும், ஏனெனில் இந்த தொழில்நுட்பம் கழிவுப்பொருட்களை அதிக வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துகிறது.
மேலும் அதிக வெப்பநிலை, வாயு, திட மற்றும் திரவ எச்சங்களை உருவாக்குகிறது.
மற்ற எரிக்க பயன்படுத்தப்படும் பெரிய இன்சினரேட்டர்களில் இருந்து வெளியாகும் அதே நச்சுக்கள் இதே பைரோலிசிஸ் லிருந்தும் வெளியாகும்.
இந்த பைரோலிசிஸ் கழிவு எரிப்பு இயந்திரம் டையாக்ஸின்கள் மற்றும் கன உலோகங்கள், நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் குளோரைடு, சல்பர் டை ஆக்சைடு ஆகியவற்றை வெளிப்படுத்தும்.
அத்துடன் கரி அல்லது சாம்பல் எச்சங்களில் உள்ள நச்சு அசுத்தங்கள் மற்றும் அசுத்தமான கழிவு நீர் ஆகியவற்றின் பல மாசுபாடுகள் புற்றுநோயை உண்டாக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
சில நிறுவனங்கள் பைரோலிசிஸ் தொழில்நுட்பம் “மாசு இல்லாதது” என்று கூறுகின்றன, ஆனால் இந்த கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவை.
வேறு சில நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பங்கள் எரியூட்டிகள் அல்ல என்றும் கூறுகின்றன. உண்மை என்னவென்றால், கழிவுகளை சூடாக்குவதன் மூலம் உருவாகும் நச்சு வாயுக்கள் எரிக்கப்படுகின்றன. பரிந்துரை செய்யப்பட்டுள்ள பைரோலிசிஸ் ஆலைக்கான EIA அறிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை சுற்றுச்சூழல் இலாகா பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அமைச்சு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மின்-கழிவுகளை பிரித்தெடுக்க அறிவுறுத்தியுள்ளது, அவை அமைச்சு மற்றும் மாநில அரசாங்கத்தால் கண்காணிக்க ப்படும்.
தங்கள் குப்பைகளை பொதுமக்களேபிரித்து அந்தந்த பைகளில் போட வேண்டும்.
மக்கும் பொருட்கள் மற்றும் மக்காத பொருட்கள் என பிரித்தெடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஆகவே தேசிய திடக்கழிவு மேலாண்மைத் துறை, பைரோலிசிஸ் இயந்திரங்கள் அல்லது ஏதேனும் வெப்பம் அல்லது எரிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான அதன் திட்டங்களை கைவிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என இரண்டு இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு வளங்களையும் வீணடிக்கும் என இருவரும் தெரிவித்தனர்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
மீனாட்சி ராமன்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு