வெள்ளத்தினால் இந்திய வெங்காயம் கிடைப்பதில் தட்டுப்பாடு வெங்காய விலை கிடுகிடு உயர்வினால் பயனீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் ஏற்பட்ட பருவமலையின் காரணமாக ஏற்பட்ட இடர்களினால் அது மற்ற நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிக்கு அது தடை வித்துள்ளது. இதன் விளைவாக நம் நாட்டில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்வு கண்டுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட சந்தை ஆய்வில் சீனா, ஹாலந்து மற்றும் பாக்கிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ஒரு மாதத்திற்கு முன்பு கிலோவுக்கு மவெ. 4.00 ஆக இருந்து பிறகு மவெ. 7.50-க்கு உயர்வு கண்டுள்ளது. இப்போது அதே வெங்காயத்தின் விலை கிலோவுக்கு மவெ. 9.00 ஆக உயர்ந்து நிற்கிறது.

ஆனாலும் இறக்குமதி செய்யப்படுகின்ற வெங்காயங்கள் யாவும் மிகவும் தரம் குறைந்தவையாக இருந்தாலும் அதை மிகவும் அதிகமான விலையில் கடைக்காரர்கள் விற்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வந்த புகார்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்தியாவிலிருந்து வெங்காயம் வருவது நின்றபோதுதான் பிரச்னையே ஆரம்பமானது என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஐந்து கிலோ சாக்கில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தில் வெறும் 80% மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலையில் இருக்கிறது. எஞ்சிய 20% சேதமைடைந்தும் அழுகிய நிலையிலும் உள்ளது என்கின்றனர் விற்பனையாளர்கள்.

வெங்காய இறக்குமதி எந்த நிலையில் உள்ளது என்பதனை மத்திய விவசாய சந்தைப்படுத்தல் அதிகாரத் தரப்பு (FAMA) ஆராய வேண்டும். வெங்காயத் தட்டுப்பாட்டு சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, வெங்காய விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி சில தரப்புகள் ஆதாயம் தேடும் நோக்கில் செயல்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும், வெங்காயம் எல்லோருக்கும் தங்குத் தடையின்றி கிடைக்க வகை செய்யவும் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு உரிய நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

வெங்காய தட்டுப்பாட்டை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு விலையை விருப்பத்திற்கு ஏற்றுவதைத் தவிர்க்கவும், வெங்காயத்தின் தரத்தை நிர்ணயம் செய்யவும் அமைச்சு உடனடி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால், வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு, விலை கட்டுப்பாடு மற்றும் இலாபநோக்கு-எதிர்ப்பு விதிமுறைகளின்படி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வெங்காயம் மலேசியர்களின் சமையலில் ஒரு முக்கிய அடிப்படைப் பொருளாகவும் இருப்பதோடு அது மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு உணவுமாகும். வெங்காயத் தட்டுப்பாடும் அதனைத் தொடர்ந்து வரும் விலை உயர்வும் ஒரு புதிய பிரச்னை கிடையாது. பயனீட்டாளர்கள் பல முறை இதே பிரச்னையைச் சந்தித்துள்ளனர்.

ஆகையால், மத்திய விவசாய சந்தைப்படுத்தல் அதிகாரத் தரப்பு (FAMA), உள்நாட்டு விவசாயிகளை வெங்காயம் பயிர் செய்ய ஊக்குவிக்க வேண்டும். பயனீட்டார்கள் தங்களுடைய வீட்டு நிலங்களிலும் வெங்காயம் பயிர் செய்யலாம். வெங்காயம் வளர்ப்பதற்கு அதிக நிலம் தேவைப்படாது மற்றும் எளிதாகவும் பயிர் செய்ய முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பத்திரிகைச் செய்தி 1.12.2020