ஹலால்-ஹராம் சட்டத்தை அறிமுகப்படுத்துங்கள்! அரசாங்கத்திற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகை செய்தி. 16.3.22

ஹலால் ஹராம் சட்டத்தை மிக விரைவாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதது.

உணவுப் பொருட்களை ஹலால் என முத்திரை குத்துவதில் உற்பத்தியாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்ய சட்டம் தேவைப்படுகின்றது என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.

தற்போது ஒரு பொருளின் ஹலால் நிலையை நிரூபிக்கும் சுமை பயனுட்டாளர் மீது தான் உள்ளது. இன்றுவரை இச்சட்டம் அமுல் படுத்தாத காரணத்தால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது என்றார் அவர். சட்டங்கள் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவை பல ஆண்டுகளாக அதிகாரிகளால் ஓரங்கட்டப்பட்டுள்ளன.

ஹலால் சின்னத்தை பலர் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான வழக்குகள் அடிக்கடி பதிவாகி உள்ளன. 2020 டிசம்பரில் இறைச்சியை இறக்குமதி செய்து விற்பனை செய்ய சுங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் ஒரு கார்டெல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோது நாடு அதிர்ச்சியடைந்தது.

இந்த கார்டெல்கள் சீனா, உக்ரைன், பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து உறைந்த இறைச்சியை இறக்குமதி செய்து, பின்னர் அதை தெற்கு மாநிலமான ஜோகூரில் மீண்டும் பேக்கெட் செய்து சிலர் விற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இறக்குமதி செய்யப்பட்ட சில இறைச்சிகளில் கங்காரு மற்றும் குதிரை இறைச்சியும் அடங்கும். பின்னர் அவை ஹலால் மாட்டிறைச்சியாக கலக்கப்பட்டு விற்கப்பட்டன என முகைதீன் கூறினார்.

இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு இழிவானது என்று முஸ்லிம் பயனீட்டாளர்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியது. மலேசியாவிற்கு சான்றளிக்கப்படாத இறைச்சியை கொண்டு வருவதற்காக அரசு நிறுவனங்களில் இருந்து மூத்த அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதை ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களாக இறைச்சி விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த கார்டெல் பல நாடுகளில் உள்ள ஹலால் சான்றளிக்கப்படாத இறைச்சிக் கூடங்களில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவது தெரிய வந்தது.

இந்த கார்டலின் உறுப்பினர்கள் சுங்க இலாகா, கால்நடை மருத்துவ சேவைகள் துறை, மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவை இலாகா மற்றும் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு பணம் செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது என்றார் முகைதீன்.

இந்த பிரச்சினை இரண்டு அம்சங்களைத் தொட்டது, முதலாவது ஹலால் நிலை மற்றும் இரண்டாவது ஊழல், இது தேசிய பாதுகாப்பு குறித்த பெரிய கேள்விகளை எழுப்பியது.

ஆகவே மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் அரசாங்கம் ஹலால் ஹராம் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் அதே நேரத்தில் ஹலால் ஹராம் பிரச்சினையைத் தொடும் தற்போதைய சட்டங்களைத் திருத்துவதற்கும் இதுவே சரியான நேரம் என பி.ப.சங்கம் நம்புவதாக முகைதீன் தெரிவித்தார்.

இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் இது மலேசியாவை உலகின் மிகப்பெரிய ஹலால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாற்றும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும்.

இதற்கிடையில், உணவு அல்லது பொருட்களில் ஹராம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து சிறந்த புரிதலை வழங்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். உதாரணமாக உணவுச் சட்டத்தின் கீழ், ஹராம் பொருட்கள் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதிசெய்ய உணவு லேபிளிங் குறித்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஒரு பொருளைப் பல ஆதாரங்களில் இருந்து பெற முடிந்தால், உற்பத்தியாளர் அது எந்த மூலத்திலிருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இது முஸ்லீம் அல்லது முஸ்லிம் அல்லாத பயனீட்டாளரின் சந்தேகத்திற்குரிய அல்லது ஹராம் பொருளைக் கொண்ட எந்தவொரு உணவு மற்றும் பொருட்களையும் தவிர்க்க உதவும்.

ஆகவே ஹலால் சான்றிதழ் செயல்முறையை மேம்படுத்துதல்,
இறைச்சி கார்டெல் ஊழல் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் உணவு கொள்முதல் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்யவும்.

இறைச்சி கார்டெல் ஊழலைத் தீர்க்க அரச விசாரணை ஆணையத்தை (RCI) அமைக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்