பத்திரிகைச் செய்தி : 03.09.2026
பெர்லிஸ் கங்காரில் மத்திய சந்தை அருகே சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ரெப்போ ஆற்றங்கரை சரிவை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்குமாறு பெர்லிஸ் மாநில அரசு, கங்கார் நகராட்சி மன்றம் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை ஆகியவற்றை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மிக அவசரமாக வலியுறுத்துகிறது.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்திய ஆய்வின்போது, ஆற்றங்கரையின் 50 மீட்டர் நீளப் பகுதியில் ஏற்பட்ட இந்தச் சம்பவம், சந்தைக்கான அணுகுசாலையைச் சேதப்படுத்தி, அதை மேடு பள்ளங்கள் நிறைந்ததாக மாற்றியுள்ளது கண்டறியப்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
தொடர்ச்சியான மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன, ஆனாலும் எந்தவொரு சரிசெய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.
இந்த நிலை தொடர அனுமதிக்கப்பட்டால், ஆற்றங்கரை சரிவு மற்றும் மண் சரிவின் விளைவுகள் பரவி மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், எதிர்காலத்தில் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் முகைதீன் கவலை தெரிவித்தார்.
ஆற்றங்கரை மேலும் சரிவதைத் தடுப்பதற்காக, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு தடுப்புச் சுவரைக் கட்டவோ அல்லது மரங்களை நடவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களையும் தடுப்பதற்கும், சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தாழ்ந்தும் குண்டும் குழியுமாக உள்ள சாலை நிரப்பப்பட்டு, அதன் மேற்பரப்பு சமப்படுத்தப்பட வேண்டும் என்றார் முகைதீன் அப்துல் காதர்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
