
பத்திரிகைச் செய்தி : 16.02.2025
போக்குவரத்து அமைச்சும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சும் சீட் பெல்ட் அலாரங்களை செயலிழக்கச் செய்யப் பயன்படுத்தப்படும் போலி கொக்கிகளின் விற்பனையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுப்பதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
டம்மி அல்லது போலி கொக்கிகளின் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (MIROS) போலி கொக்கி சீட் பெல்ட், அலாராத்தை நிறுத்துவதற்கு இதனை பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.
“கடந்த பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்டவர்கள் சீட் பெல்ட்களை அணியாமல் இருந்ததால் ஏற்பட்ட மரண எண்ணிக்கையை வெளியிடுமாறு ஒரு சாலை பாதுகாப்பு ஆர்வலர் அரசாங்கத்தையும் காவல்துறையையும் வலியுறுத்தியுள்ளார்” என்று மீரோஸ் சுட்டிக்காட்டியது.
மீரோஸின் கூற்றுப்படி, இந்த துணைக்கருவி, ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு கூறுகளின் உகந்த செயல்பாட்டை சீர்குலைத்து, மோதல் ஏற்பட்டால் ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருவரின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றது.
சீனப் புத்தாண்டு சிறப்பு நடவடிக்கையின் போது சீட் பெல்ட் அணியாததற்காக அதிக எண்ணிக்கையிலான குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும், 195 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை உண்மையான சீட் பெல்ட் கொக்கியை ஒத்த துணைப் பொருளைப் பயன்படுத்துவதாகவும் ஊடகங்கள் தெரிவித்ததாக நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குனர் ஹனிஃப் யூசப்ரா யூசுப் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு முதல் போலி கொக்கிகளுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றின் விற்பனை சந்தையில் தொடர்கிறது.
மேலும், அத்தகைய தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் சட்டம் இல்லாதது ஒரு கவலையாகவே உள்ளது. இந்தப் பிரச்சினையை பினாங்கு பயனீட்டாளர் பலமுறை எழுப்பியுள்ளது.
ஆன்லைன் வழியாக சந்தையில் போலி கொக்கிகளை விற்பனை செய்வதைத் தடை செய்யுமாறு போக்குவரத்து அமைச்சு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சை பி.ப.சங்கம் மீண்டும் வலியுறுத்துவதாக முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

