
சொங் தெய்க் தேசிய சீன பள்ளியின் 4, 5 மற்றும் 6-ம் வகுப்புக்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் மக்கு உரம் தயாரிப்பு பயிலரங்கில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு இடையிலான உயிர்ச் சங்கிலி முறையை விளையாட்டுகள் மூலம் மிக எளிமையாக கற்றுக்கொண்டனர்.
முதலில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள செடி, கொடி மரங்களை களை அடையாளம் காணச் சொல்லப்பட்டது. அதேப்போல் மேசையில் வைக்கப்பட்டிருந்த மிளகாய் செடியை அடையாளம் காண சொன்ன போது, ஒரு மாணவர் மட்டுமே அதனைச் சரியாக அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து, இளசான வெண்டைக்காய்க்கும், முற்றிய வெண்டைக்காய்க்கும் உள்ள வித்தியாசங்களை மாணவர்கள் கலந்துரையாடினர். ஒரு முற்றிய காயில் உள்ள எல்லா விதைகளும் செடியாக வளருமா என்ற கேள்வி மாணவர்களிடையே மிகுந்த ஆர்வத்தை தூண்டியது.
செடிகளின் வேர்கள் மண்ணுக்குள் தங்களுக்குத் தேவையான வழியை எப்படித் தேடிப் பிடிக்கின்றன என்பதை விளக்கும் ஒரு காணொளி மாணவர்களுக்குக் காட்டப்பட்டது. செடிகள் ஆரோக்கியமாக வளர மண் வளமாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு இயற்கை உரம் எவ்வளவு அவசியம் என்றும் அங்கு விளக்கப்பட்டது.
குழாய் வழி மக்கு உரம் (பைப் கம்போஸ்டிங்’ -Pipe Composting) தயாரிக்கும் பயிற்சியில் மாணவர்கள் மிக ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.
மண் வளத்திற்கு நுண்ணுயிரிகள் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை மாணவர்களுக்குப் இந்தப் பயிற்சி புரிய வைத்தது. பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய பைப் கம்போஸ்டிங் பராமரிக்கும் முக்கியப் பொறுப்பு நான்காம் ஆண்டு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



