கெடாவில் கடுமையான வறட்சி! கருகும் நெற்பயிர்கள்! கண்ணீரில் விவசாயிகள்!

பத்திரிக்கைகச் செய்தி :  09-04-2026

மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று அழைக்கப்படும் ஜித்ரா கெடா மாநிலத்தில் இதுவரை கண்டிராத கடுமையான வறட்சி மேலும் அதீத வெப்பம் காரணமாக நெல் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நெல் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். இது குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி, ஆய்வுப்பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் விடுத்துள்ள அறிக்கையில், ஜித்ரா, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் அதீத வெப்பம், நீர் விநியோகத்தைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல், நெல் விளைச்சலில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தப் பருவத்தில் நெல் மகசூல் 30 விழுக்காடு வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல் விளைச்சலின் முக்கியக் கட்டங்களில் வெப்பநிலை உயர்வு பெரும் இடையூறாக உள்ளது என்றார்.

பொதுவாக 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தைத் தாங்கி வளரும் நெற்பயிர்கள், தற்போது 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை நிலவும் அதீத வெப்பத்தால் கருகத் தொடங்கியுள்ளன. முதிர்ச்சியற்ற மணிகளைக் கடுமையான வெப்பம் மகரந்தச் சேர்க்கையைச் சிதைப்பதால் நெல் மணிகள் முழுமையாக முதிர்வடையாமல் சத்து இல்லாத ‘சாவியாக’ மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மண் வளம் பாதிப்பு அடைந்துள்ளது. அதீத வெயிலால் நிலத்தடி நீர் வற்றி, விளைநிலங்கள் பாளம் பாளமாக வெடித்துக் காணப்படுகின்றன. மண் இறுகி வருவதால் விவசாயப் பணிகள் முடங்கியுள்ளன.

அணை நீர்மட்டம் சரிவு கண்டுள்ளது – பாசனத்திற்குத் தட்டுப்பாடு

தொடர் மழை இல்லாததால் இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமான மூடா அணையின் நீர்மட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு, குடிநீர் விநியோகம், தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

இதனால், விவசாயப் பாசனத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் நிறுத்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது. இயற்கையின் சீற்றத்திலிருந்து பயிர்களைக் காக்கவும், வறட்சி நீங்கி மழை பொழியவும் வேண்டி, மாடா அமைப்பு உள்ளூர் மக்களுடன் இணைந்து ‘இஸ்திஸ்கா’ எனும் சிறப்புத் தொழுகையை நடத்தியுள்ளது.

தங்களுடைய வாழ்வாதாரமாக விளங்கும் நெல் சாகுபடி பொய்த்துப் போனதால் அரசாங்கம் தங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி, ஆய்வுப்பிரிவின் அதிகாரி சுப்பராவ் விவரித்தார்.

என்.வி.சுப்பராவ்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
கல்வி, ஆய்வுப்பிரிவின் அதிகாரி