பத்திரிக்கைச் செய்தி : 12-05-2026
பினாங்கு மாநிலம், செபராங் பிறை தெங்கா (SPT) பகுதியில் உள்ள கம்புங் கோலா ஜூருவைச் சேர்ந்த சுமார் 100 கெராங் (சிப்பி) வளர்ப்பாளர்களும் மீனவர்களும், ஜூரு ஆற்றில் தற்போது தீவிரமாக அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக கடும் கவலையில் உள்ளனர். தொழிற்சாலை கழிவுகள் மற்றும் இறால் வளர்ப்பு குளங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாக இந்த மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அவர்கள் வளர்த்து வந்த சிப்பிகள் மற்றும் ஆற்றிலுள்ள மீன்கள் இறப்பதால், அவர்களின் வருமானத்தில் 50% க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில், ஜூரு ஆற்றின் நீர் எப்போதும் மங்கலாக காணப்படுவதாகவும், அது தொழிற்சாலை கழிவுநீர் வடிகால்கள் மற்றும் அருகிலுள்ள இறால் வளர்ப்பு குளங்களின் கழிவு வெளியேற்றக் குழாய்கள் மூலம் மாசுபடுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
கோலா ஜூரு மீனவர் தலைவர் வாஹித் ஒத்மான், 50, கூறுகையில், “ஒரு ஆண்டுக்கு முன்பிருந்து இந்தப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த சுங்காய் தெர்ஹாகா (Sungai Derhaka) பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவு வெளியேற்ற வாயில் மீண்டும் திறக்கப்பட்டபின், அந்த ஆறு ஜூரு ஆற்றுடன் இணைவதால் மாசுபாடு அதிகரித்துள்ளது,” என்றார். மேலும், “மேலும், காலை நேரங்களில் இரசாயன கழிவுகள் அடிக்கடி ஜூரு ஆற்றில் கலக்கப்படுவதால், ஆற்றுநீர் கருமை நிறமாக மாறி கடுமையான துர்நாற்றத்தை வீசுகிறது. இதன் விளைவாக ஏராளமான கிளிஞ்சல்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆற்றின் மேற்பரப்பில் செத்து மிதக்கும் மீன்களையும் மீனவர்கள் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.”

இந்தப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து, மாசுபாட்டின் மூல காரணத்துக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாஹித் கேட்டுக்கொண்டார். “இந்த நிலை தொடர்ந்தால், கிளிஞ்சல்கள் வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும். இது அவர்களின் குடும்ப வாழ்க்கையையும் மோசமாக பாதிக்கும்,” என அவர் வலியுறுத்தினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்தப் பிரச்சினையை மிகவும் கவலைக்கிடமானதாகக் கருதுவதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது. ஜூரு ஆற்றில் அதிகரித்து வரும் மாசுபாட்டை கட்டுப்படுத்த பினாங்கு மாநில அரசு, சுற்றுச்சூழல் துறை (JAS), நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS), மீன்வளத் துறை மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், ஜூரு ஆற்றின் கரையோரங்களில் கழிவு வெளியேற்றம் நடைபெறும் அனைத்து வடிகால்களையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்த மாசுபாட்டின் விளைவுகள் சுற்றுச்சூழலையும், அப்பகுதி மீனவர்களின் வருமானத்தையும் மட்டுமல்லாது, மக்களின் உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடியதாகும். எனவே, நீண்ட காலமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் சிப்பிகள் வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு அரசாங்கம் நிதி மற்றும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

