பத்திரிக்கைச் செய்தி : 11-05-2026
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மத்திய அரசை, நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, தற்போதும் எதிர்காலத்திலும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், ஆற்று மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அனைத்து மாநிலங்களிலும் முழுமையாகத் தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்துமாறு வலியுறுத்துகிறது.
பஹாங் மாநில அரசு மணல் ஏற்றுமதிக்கான அனுமதியை கோரியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையில், அதனால் ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகளை மாநில அரசு ஆழமாக ஆய்வு செய்து கவனமாக பரிசீலிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள், கிடைக்கக்கூடிய வருவாயால் ஈடு செய்ய முடியாதவை என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

முன்னதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வுகளும் அனுபவங்களும் காட்டுவதாவது, பல மாநிலங்களில் நடைபெற்ற ஆற்று மணல் அகழ்வு நடவடிக்கைகள் சுற்றுச்சூழலையும் ஆற்றுச் சூழலியலையும் கடுமையாக பாதித்துள்ளன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாடும் சட்ட அமலாக்க பலவீனங்களும் மட்டுமல்லாது, எதிர்கால விளைவுகளைப் பொருட்படுத்தாமல் செயல்படும் சில மணல் தொழில்முனைவோரின் பேராசையும் காரணமாகும். கட்டுப்பாடின்றி நடைபெறும் ஆற்று மணல் அகழ்வு, ஆற்றின் இயற்கை அமைப்பை மாற்றி, வெள்ள அபாயத்தை அதிகரிப்பதோடு, சுத்தமான குடிநீர் விநியோகத்தையும் பாதிக்கக்கூடும்.
ஆற்று மணல் குவாரிகள் இயங்கும் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் பலர், அந்த நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம், இந்நடவடிக்கைகள் நிலச்சரிவு மற்றும் கரையரிப்பை ஏற்படுத்தி, விவசாய
நிலங்களையும் குடியிருப்புகளையும் பாதிப்பதுடன், இயந்திரங்களின் இயக்கத்தால் கடும் இரைச்சலும் அதிர்வுகளும் உருவாகின்றன. மேலும், ஆற்றுநீர் மாசுபடுவதால் மீன்வள வளங்களும் உள்ளூர் மக்களின் வருமான ஆதாரங்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன.
ஆற்று மணல் அகழ்வு நடவடிக்கைகள் கட்டுப்பாடின்றி பரவலாக நடைபெறுமானால், இந்த இயற்கை வளம் விரைவாக அழிந்து போகும் அபாயம் இருப்பதாகவும், திடீர் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரித்து மக்களின் உயிர், சொத்து மற்றும் அரசாங்கம் அமைத்துள்ள அடிப்படை வசதிகள் கடுமையாக சேதமடையக்கூடும் எனவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தெரிவிக்கிறது.
ஆறுகள் படிவங்களால் நாளுக்கு நாள் ஆழம் குறைந்து வரும் பிரச்சினையை முன்னிட்டு, அனைத்து மாநில அரசுகளும், உள்ளூர் நிர்வாக அமைப்புகளும் (PBT), சம்பந்தப்பட்ட துறைகளும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக அமல்படுத்தி, நிலப்பரப்பிலிருந்து ஆறுகளுக்குள் சேரும் கழிவுப் படிவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது. “வருமுன் காப்பதே சிறந்தது” என்பதே இவ்விடயத்தில் மிக முக்கியமான அணுகுமுறையாகும் எனவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் குறிப்பிடுகிறது.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

