பத்திரிக்கைச் செய்தி : 14 may 2026
மே 9ஆம் தேதி 2026 பேராக் மாநிலம் சுங்கை சிப்புட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் எஸ்பெஸ்டோஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் பல பேர் கலந்து கொண்டனர். இளைஞர்களும் இதில் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு கூடுதல் தாக்கத்தையும் வழங்கியது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், எஸ்பெஸ்டோஸ் தொடர்பான அடிப்படை தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், அதன் பாதிப்புகள் மற்றும் உடல்நல ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் பதிவு செயல்முறையுடன் தொடங்கியது. பின்னர், மூலிகைகள் தொடர்பான குறுந்தகவல் பகிர்வு மற்றும் கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது. தொடர்ந்து பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி திரு தீபன் குணசேகரன் வரவேற்புரையாற்றினார். எஸ்பெஸ்டோஸ் தொடர்பான விழிப்புணர்வை அறிந்து கொள்ளும் நோக்கில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி மகேஸ்வரி சங்கரலிங்கம் தொடக்க உரையாற்றினார். தனது உரையில், எஸ்பெஸ்டோஸ் தொடர்பான சுருக்கமான அறிமுகத்தையும், அதன் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பின்னர் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் மூத்த செயற்பாட்டாளர் திரு மணிவேலு தனது அனுபவப் பகிர்வை வழங்கினார். எஸ்பெஸ்டோஸ் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய அனுபவங்களையும், அங்கு தொழிலாளர்கள் எதிர்கொண்ட சுகாதார ஆபத்துகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
தொழிற்சாலையில் பணியாற்றிய காலத்தில், எஸ்பெஸ்டோஸ் பாதிப்பால் ஏற்படும் உடல்நல ஆபத்துகள் குறித்து தொழிலாளர்களுக்கு எந்தவிதமான விழிப்புணர்வோ தகவலோ வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். மேலும், தன்னுடன் பணியாற்றிய பல முன்னாள் தொழிலாளர்கள் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும், அவர்கள் எஸ்பெஸ்டோஸ் தொடர்பான நோய்களால் உயிரிழந்தார்களா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட சீருடைகள் அங்கிருந்த சலவை வசதிகளிலேயே துவைக்கப்பட்டதாகவும், அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போது பார்க்கும்போது, எஸ்பெஸ்டோஸ் நார்கள் தொழிற்சாலைக்கு வெளியே பரவாமல் தடுக்கவே அந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக அவர் கருதுவதாக தெரிவித்தார். எஸ்பெஸ்டோஸ் நார்கள் மூச்சின் மூலம் உடலுக்குள் சென்றாலோ அல்லது நேரடி தொடர்பு ஏற்பட்டாலோ மனித உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் விளக்கினார்.
இந்த அனுபவப் பகிர்வைத் தொடர்ந்து, “Asbestos Endangers Lives: Ban Chrysotile Now” என்ற தலைப்பிலான புத்தகங்களை பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது. பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும் சீனம் ஆகிய நான்கு மொழிகளில் அவை வெளியிடப்பட்டிருந்தன.

பின்னர் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி சரஸ்வதி தேவி ஒடியன் உரையாற்றினார். தனது உரையில், எஸ்பெஸ்டோஸ் என்றால் என்ன, அது ஏன் கடந்த காலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விரிவாக விளக்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் இல்லத்தரசிகளும் ஓய்வு பெற்ற ஆண்களுமாக இருந்ததால், தொழிலிடத்திற்கு வெளியே ஏற்படும் எஸ்பெஸ்டோஸ் பாதிப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். வீட்டு பழுதுபார்ப்பு பணிகள், தொழிலாளர்களின் உடைகளைத் துவைப்பது, பழைய கூரைகள், சுவர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் மூலமாகவும் எஸ்பெஸ்டோஸ் பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் விளக்கினார்.
மேலும், சில டால்க் (talc) அடிப்படையிலான பொருட்களிலும் எஸ்பெஸ்டோஸ் கலந்திருக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக டால்கம் பவுடர், ஐஷேடோ (Eyeshadows) உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் பெண்கள், இதன் மூலம் ஏற்படக்கூடிய சுகாதார ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.
எஸ்பெஸ்டோஸ் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் குடும்பத்தினரை பாதுகாக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
மொத்தத்தில், “எஸ்பெஸ்டோஸ் தொடர்பான பயனீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி” பங்கேற்பாளர்களிடையே நல்ல வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. எஸ்பெஸ்டோஸ் பாதிப்புகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர்கள் தெளிவான புரிதலையும் விழிப்புணர்வையும் பெற்றனர்.
இந்த விஷயத்தில் சமூகங்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் உறுதியாக செயல்பட்டு வருகிறது. எஸ்பெஸ்டோஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை 04-8299511 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது info@consumer.org.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
2026

