இரசாயன மறுசுழற்சி – ஆபத்தான சூழ்ச்சி

அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN) மற்றும் ‘நெகிழிக்கு அப்பால்’ ஆகிய அமைப்புகளின் ‘இரசாயன மறுசுழற்சி ஆபத்தான சூழ்ச்சி’ என்ற அறிக்கை.

நெகிழி நம் வாழ்வின் அத்தியாவசிய அங்கமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஏதாவது  ஒரு வகையில் நெகிழியோடுதான் வாழ்க்கையைக் கடக்கிறோம். கடந்த சில தசாப்தங்களில் நெகிழியின் உபயோகம் கிடுகிடுவென உயர்ந்து வரும் அதே வேளையில், சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் அவை விளைவிக்கும் கேடுகளும் பெருகி வருகின்றன.

சுற்றுச்சூழலில், குறிப்பாக நீர் மூலங்களிலும் கடல்களிலும் பெருகி வரும் நெகிழிக் கழிவுகள் மற்றும் நெகிழி மூலப் பொருள்கள் (எ.கா: பிசின் துகள்கள்), கடல்வாழ் உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் பெருத்த கேடுகளை உருவாக்கி வருகின்றன.  இந்தக் கழிவுப் பிரச்னைக்கு மறுசுழற்சி  சரியான தீர்வாகாது.

“நெகிழி மறுசுழற்சியின் மூலம் நெகிழிக் கழிவுகளை நிர்வகிக்க முடியாது என்று தெரிந்தும் கூட நிறுவனங்கள் இலட்சக்கணக்கில் செலவு செய்து மக்களை அதற்கு மாறாக நம்ப வைக்கின்றன என்று 1979 முதல் 2001 வரை, நெகிழி தொழிற்துறை சங்கத்தின் அரசாங்க விவகாரங்களின் முன்னாள் துணைத் தலைவரான லூயிஸ் ஃப்ரீமேன் கூறியுள்ளார்.  நெகிழி மறுசுழற்சி மேன்மையான ஒன்று என்று நெகிழி தொழிற்துறை மக்களை நம்ப வைத்து வருகிறது.

நெகிழி உற்பத்தியின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுப்பதற்குப் பதிலாக, நெகிழி மறுசுழற்சி, சுழற்சிப் பொருளாதாரத்தை உருவாக்கும் என்று அது கோரி வருகிறது. இது தொடர்பாக அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN) உருவாக்கியுள்ள இரசாயன மறுசுழற்சி: ஆபத்தான சூழ்ச்சி (“Chemical Recycling: A Dangerous Deception”) என்ற தலைப்பிலான ஒரு பதிப்பைக் காணவும். இரசாயன மறுசுழற்சியை நீடித்திருக்கச் செய்யும் தொழிற்துறையின் முயற்சிகளை இந்தக் கட்டுரை ஆழமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.  இரசாயன மறுசுழற்சிகளின் நீண்ட நெடிய வரலாறு, அவை அடைந்த தோல்விகள், சுற்றுச்சூழல், மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி ஆகியவற்றுக்கு இழைக்கப்பட்ட அச்சுறுத்தல்களையும் இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகிறது.

நெகிழி மறுசுழற்சி இயல்பிலேயே ஆபத்தானதுதான். நெகிழி நச்சு இரசாயனங்களால் உருவாக்கப்பட்டது.  அவற்றை மறுசுழற்சி செய்யும் பொழுது இன்னொரு பொருளுக்கு இந்த நச்சு இரசாயனங்கள் இடம் பெயர்வது இயல்பே. மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிகளைச் சூடாக்கும்பொழுது,  அவற்றிலிருந்து நச்சு இரசாயனங்கள் மீண்டும் மீண்டும் உருவாகி ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன.

இயந்திர மறுசுழற்சி என்பது வரிசைப்படுத்துதல், அரைத்தல், பிரித்தல், கழுவுதல், உருக்குதல், பின்னர் மீண்டும் நெகிழி மணித்திரள்களாக குளுமைப்படுத்துதல் ஆகும்.  இயந்திர கதியான நெகிழி மறுசுழற்சி சில பலவீனங்களை உள்ளடக்கியுள்ளது.  மறுசுழற்சிப் பொருளின் குறைவான தரம் மற்றும்  மாசுபாடான நெகிழிகளைக் கையாளுவதற்கான திறன் இல்லாது இருக்கும். பலதரப்பட்ட பாலிமர் மற்றும் பல அடுக்கு நெகிழிகள் உணவு, எண்ணெய் பிசுபிசுப்புகளால் மாசுபடுத்தப்பட்டவையாக இருக்கும்.  அவற்றைத் தனித்தனியாக மறுசுழற்சி செய்வதென்பது முடியாத ஒன்று. ஆகையால், அவை ஒட்டுமொத்தமாக எரிஉலை அல்லது குப்பை மேடுகளில் எரிக்கப்படுவதற்குக் கொண்டு செல்லப்படுகின்றன.  சில சமயங்களில், மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிகள் இன்னும் தரம் குறைந்த பொருள்களாகத் தயாரிக்கப் படுகின்றன.

மூலம்: பெல், எல்., இரசாயன மறுசுழற்சி: ஆபத்தான சூழ்ச்சி, மற்றும் ‘நெகிழிக்கு அப்பால்’ மற்றும் அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN), அக்டோபர் 2023

நெகிழியை உருக்குதல், கொதிக்க வைத்தல் ஆகியவற்றின் மூலம் அவற்றை வாயு, இரசாயனம், எண்ணெய், கரியெண்ணெய், மெழுகு ஆகியவையாக உருவாக்குவதே இரசாயன மறுசுழற்சி ஆகும்.  பழைய நெகிழியிலிருந்து புது நெகிழியை உருவாக்குவது பெரும்பாலும் வெற்றி பெறாத காரியம்.  இரசாயன மறுசுழற்சி புதிய ஒன்றோ அல்லது மேன்மையான ஒன்றோ கிடையாது.  அது பைரோலிசிஸ் மற்றும் வாயுவாக்கம் போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டு கழிவுகளைப் பதப்படுத்துவதற்குத் தொழில்நுட்ப ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல தசாப்தங்களாகப் போராடி வருகிறது.  இதன் விளைவாக,  நாம் நினைப்பது போல் நமக்குக் கிடைப்பது “சுழற்சி” அல்லது “பசுமை” நெகிழி கிடையாது.  மாறாக எரிக்கப்படும் பெட்ரோஇரசாயன எரிபொருள் ஆகும். இவை நச்சுக் கழிவுகளையும் பசுமைக் குடில் வாயுவையும் உருவாக்குகின்றன.  இந்தத் தொழிற்துறையின் ஒவ்வொரு படிமுறையும் அதிக செலவுகளை உள்ளடக்கியது.  அதோடு, அதிக எரிசக்தி மற்றும் அதிக மாசுபாட்டினையும் உருவாக்குகிறது.

நிறைய இரசாயன மறுசுழற்சி நிறுவனங்கள் புதைபடிம எரிபொருள் சார்ந்த எரிசக்திகளைப் பயன்படுத்தி, பெட்ரோ இரசாயன நெகிழிகளைப் புதை படிம எரிபொருளாக மாற்றுகின்றன.  இந்த வழிமுறையில், இன்னும் அதிக மாசுபாடு உருவாகி கரிம சுழற்சியும் அதிகமாகிறது.

அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையத்தின் (IPEN) இரசாயன மறுசுழற்சி தொடர்பான முக்கிய கண்டுபிடிப்புகள் வருமாறு:

 

  • இரசாயன மறுசுழற்சி என்பது நெகிழித் தூய்மைக்கேட்டுக்கு ஒரு போலியான தீர்வாகும். இரசாயன மறுசுழற்சி பல தசாப்தங்களாக தோல்வியைக் கண்டு வருகிறது. இன்னமும் கூட அதற்குத் தோல்விதான்.  அது நெகிழி தூய்மைக்கேட்டுப் பிரச்சனைக்கு தீர்வைக் கொண்டு வரும் என்பதற்கு எந்த வித ஆதாரங்களும் இல்லை.

 

  • இரசாயன மறுசுழற்சி திறனற்றது. அது அதிக எரி சக்தியைப் பயன்படுத்துவதோடு பருவ நிலை மாற்றத்துக்கு வித்திடுகிறது.

 

  • இரசாயன மறுசுழற்சி அதிக அளவிலான நச்சுக் கழிவுகளை உருவாக்குகிறது. பெரிய எண்ணிக்கையிலான நெகிழிப் பொருளிலிருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நெகிழிப் பொருள்களையே அது தயாரிக்கிறது. இரசாயன மறுசுழற்சி இயந்திரத்திற்குள் செல்பவை பெரும்பாலும் ஆபத்தான கழிவுகளாக மாறுகின்றன.  இவை எரிபொருளாக எரிக்கப்படுகின்றன அல்லது குப்பைமேடுகளில் தஞ்சமடைகின்றன.

 

  • இரசாயன மறுசுழற்சி ஆபத்தானது மற்றும் மாசுக்கள் நிறைந்தது. இரசாயன மறுசுழற்சித் தளங்கள் நச்சு இரசாயனங்களை உமிழ்ந்து ஆபத்தான கழிவுகளை உருவாக்குகின்றன. இவற்றினால், தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பு உண்டாவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாக இருக்கின்றன.

 

  • இரசாயன மறுசுழற்சி பாரம்பரிய மறுசுழற்சி போன்று செயல்பட முடியாது. பல விதமான நெகிழிக் கலவைகளுக்கு இரசாயன மறுசுழற்சியே பொருத்தமானது என்று இரசாயன மறுசுழற்சியை ஆதரிப்பவர்கள் கூறலாம். ஆனால், இரசாயன மறுசுழற்சி நெகிழிக் கலவைகளை முறையாக மறுசுழற்சி செய்யும் என்பதற்கு எந்த வித ஆதாரங்களும் கிடையாது.  பாரம்பரிய மறுசுழற்சி போன்று ஒரே மாதிரியான நெகிழிகளைப் பயன்படுத்தும்பொழுது அது சாத்தியமாகலாம்.  ஆகையால், இரசாயன மறுசுழற்சி, பாரம்பரிய மறுசுழற்சிக்கு ஈடாகாது.

 

  • நெகிழியை எரிப்பது என்பது அதன் ஆரம்ப நிலையிலிருந்து கடைசி வரை நிலைபேறான ஒன்றல்ல. அது அராஜகமானதும் கூட. இச்செயல் அருகிலுள்ள மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, சுற்றுச்சூழல் நிலைபாட்டுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது.

 

  • நெகிழியை எரிபொருளாக மாற்றி எரிப்பது மறுசுழற்சி கிடையாது. அனைத்துலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கத்தின்படி, நெகிழி எரிபொருளாக மாறுவது மறுசுழற்சி கிடையாது. அது அசுத்தமான மற்றும் ஆபத்தான கழிவகற்றும் முறையாகும்.
  • விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகள் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கின்றன. இரசாயன தொழிற்துறைத் தளங்கள் புற்றுநோயை வரவழைக்கும் இரசாயனத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த இரசாயனங்கள் உலக அளவில் தடை செய்யப்பட்டவையாகும். ஏனெனில், அவை அளவுக்கு அதிகமான நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்கள் ஆகும். இருப்பினும், அமெரிக்காவில், புதிய மறுசுழற்சி ஆலைகளைத் திறப்பதற்காக இந்தச் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்படுகின்றன.  இவ்வாறு, மறுசுழற்சி இரசாயன ஆலைகள் விரிவாக்கப்படும்பொழுது அதன் அருகில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் இன்னும் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளாகிறது.
  • பொதுமக்களின் நிதிகள் நிலைபேறான தீர்வுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமேயொழிய இரசாயன மறுசுழற்சிக்கு அல்ல. இரசாயன மறுசுழற்சிக்காகக் கொடுக்கப்படும் அரசாங்கத்தின் மானியங்கள் தவறான, நிரூபிக்கப்படாத ஓர் அபாய நடவடிக்ஐககளுக்கு முதலீடு செய்யப் படுகின்றன. நாம் பாதுகாப்பான, தூய்மையான பொருள்களுக்கான புத்தாக்கங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். இதன் மூலம் நெகிழியைத் தவிர்த்து ஆரோக்கியமான பொருள்களின் உற்பத்திக்கு வழிவிட்டு நிலைபேறான வாழ்க்கையை வாழ முடியும்.
மூலம்: இரசாயன மறுசுழற்சி: ஆபத்தான சூழ்ச்சி (அக்டோபர் 2023)

11 செப்டம்பர் 2023 வரைக்கும் அமெரிக்காவில் 11 இரசாயன மறுசுழற்சித் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இவை பரந்த அளவில் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும், சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு மற்றும் நிர்வாக முறைகேட்டுக்கு ஆளாகியுள்ளதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன. அளவுக்கு அதிகமான நெகிழிக் கழிவுகள் சுத்திகரிக்கப் பட்டாலும் கூட, அமெரிக்காவின்  11 இரசாயன மறுசுழற்சித் தளங்களும் ஒரு வருடத்திற்கு உருவாக்கப்படும் குப்பைகளில் வெறும் 1.3 விழுக்காட்டுக்குக் குறைவானவற்றை மட்டுமே மறுசுழற்சி செய்கின்றன.

நெகிழிகளை மறுசுழற்சி செய்வதற்குப் பதிலாக தரம் குறைந்த புதை படிம எரிபொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இவற்றுக்கு அதிகம் செலவாகுவதாகவும்,  ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும்  பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. குறிப்பாக, அடித்தட்டு மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மறுசுழற்சித் தளங்கள் மிகவும் அபாயகரமான நிலையில் இயங்குவது, ஆபத்தான கழிவுகளை உருவாக்குவது, சுற்றுச்சூழல் அத்துமீறல் மற்றும் அடிக்கடி அவற்றின் இயக்கம் முடக்கப்படுதல் யாவும் அவை கொண்டு வரும் சொல்லொணா ஆபத்துகளைப் பறைசாற்றுகின்றன. இதற்கு இடாஹோ, ஒரிகோன், வடக்கு கரோலினா, இன்டியானா மற்றும் நியூ ஹெம்சாயர் ஆகியவற்றில் இயங்கும் மறுசுழற்சி மையங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இயங்குதிறன், நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றை முன்னிறுத்துவதில் இந்த மறுசுழற்சித் தளங்கள் யாவும் தோல்வி கண்டுள்ளன. இது பாதுகாப்பான மாற்றுப்பொருள்களுக்கான அவசியத்தை எடுத்துரைக்கிறது.

மலேசியாவின் பெட்ரோனஸ் கெமிக்கல் குருப் பெர்ஹாட் மலேசியாவில் மிகப்பெரிய இரசாயன மறுசுழற்சி ஆலையை நிறுவப்போவதாக 2023-இல் அறிவித்தது.  இந்த ஆலையில் வருடத்திற்கு 33 கிலோ டன் கழிவுகள் நிர்மாணிக்கப்படும். ஜோகூர், பெங்கிராங்கில் இயங்கவிருக்கும் இந்த ஆலை 2026-இன் முதல் அரை ஆண்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம், தன்னுடைய புதிய நெகிழிப் பொருளாதாரத் திட்டத்தின்படி சுழற்சிப் பொருளாதாரத்தை ஆதரித்து நிலைபேறான நெகிழிச் சூழமைப்பினை உருவாக்கப்போவதாக தன்னுடைய ஊடகப் பகிர்வில் குறிப்பிட்டுள்ளது. இரசாயன மறுசுழற்சி மூலம் நெகிழிகளைப் பைரோலிஸிஸ் எண்ணெய்க்கு மாற்றி, பிறகு அதனை நிலையான நெகிழி உற்பத்திக்குப் பயன்படுத்திக்கொள்ளும்.

இந்தத் தொழிற்துறைகள் “சுழற்சி” மற்றும் “நிலைபேறு” போன்ற வார்த்தைகளை தங்கள் வசதிக்கேற்ப அடிக்கடி பயன்படுத்திக் கொள்கின்றன. 2023-இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் நெகிழிச் சுழற்சிக்கான எல்லா அளவுகோல்களும் அதில் கிடையாது என்றும் அது எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறதோ அந்த நோக்கத்தை அடைய முடியாது என்றும் கண்டறிந்துள்ளனர்.

அபாயகரமான கழிவுகளின் எல்லை மீறிய இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றை அகற்றுவது ஆகியவற்றைக் கண்காணிக்கும் முக்கிய  சட்ட மாநாடாக பாசல் மாநாடு திகழ்கிறது.  ஸ்டாக்ஹோம் மாநாடும் இது போன்றே நீடித்த நச்சு மாசுபாடு தொடர்பான விடயங்களைக் கண்காணிக்கிறது. இவ்விரு மாநாடுகளும் அபாயகரமான கழிவுகளின் துணைக் குழுவாக நெகிழிக் கழிவுகளைக் வகைப்படுத்திக் கையாளுகின்றன.

அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN) வலியுறுத்தியதன் படி, உலக அளவிலும் தேசிய அளவிலும் நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.  ஆனால்,  அளவுக்கு அதிகமான நெகிழி மற்றும் அதன் நச்சுத்தன்மையினால் மிகக் குறைந்த நடவடிக்கைகள் மட்டுமே பலனைக் கொண்டு வரும். நெகிழி உற்பத்தியைக் குறைப்பதே மிகவும் மிகச் சரியான நடவடிக்கையாகும்.  அதேப்போன்று, நெகிழித் தயாரிப்பில் ஆபத்தான இரசாய கூட்டுப்பொருள்களை தவிர்ப்பதும் மிகவும் முக்கியமாகும்.

இரசாயன மறுசுழற்சித் தளங்களை மென்மேலும் விரிவாக்கிக் கொண்டே போவதை உடனடியாக நிறுத்தி அதற்கு மாற்றாக நிலைபேறான, புதுமையான தீர்வுகளுக்கு வழிகோள வேண்டியதன் அவசியத்தை அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN) மற்றும் ‘நெகிழிக்கு அப்பால்’ அமைப்பின் ஆய்வுகள் வெட்டவெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. இதற்கென இன்னும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.   பயனளிக்காத தொழிற்நுட்பங்களுக்குப் பொதுமக்களின் நிதிகள் சென்று சேரக்கூடாது. சுற்றுச்சூழல் நீதியை நிலைநாட்டி, நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான, ஒரு போதும் பொதுச் சுகாதாரத்தை மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டினை புறக்கணிக்காத   ஓர் எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

குறிப்புகள்:

Bell, L. Chemical recycling: a dangerous deception. Beyond Plastics and International Pollutants Elimination Network (IPEN), October 2023

https://ipen.org/sites/default/files/documents/ipen_bp_chemical_recycling_report_11_16_23-compressed_0.pdf

https://stoppoisonplastic.org/blog/chemical-recycling-dangerous-deception/