ஜார்ஜ்டவுன் ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அச்சம்!

பத்திரிக்கைச் செய்தி : 04-02-2026

ஜார்ஜ்டவுன், ஜாலான் யார்க் பகுதியில் உள்ள சுங்கை ஏர் தெர்ஜுன் ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான மீன்கள் மற்றும் இறால்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, ஆற்று நீர் மாசுபட்டுள்ளதோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

ஆற்றில் இறந்து கிடக்கும் மீன்களை என்.வி. சுப்பாராவ் காண்பிக்கின்றார்.

சுமார் 73 வயதான ஓமார் கான் காசிம் என்ற பெரியவர், முன்பு தெளிவாக இருந்த ஆற்று நீர் கடந்த சில நாட்களாக கறுப்பு நிறமாக மாறிவிட்டதாகக் கூறுகிறார். ஆற்றிலிருந்து வீசும் துர்நாற்றம் சுமார் 20 மீட்டர் தொலைவில் உள்ள அவரது வீடு வரை உணரப்படுகிறது. குறிப்பாக மதிய நேரத்திலும் இரவு நேரத்திலும் இந்த நாற்றம் மிகக் கடுமையாக இருப்பதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த அஜோ என்பவர் கூறுகையில், திலப்பியா போன்ற மீன்கள் ஆற்றில் செத்து மிதப்பதைப் பார்த்ததாகக் கூறினார். சில நபர்கள் இந்த மீன்களைப் பிடித்து மற்றவர்களுக்கு விற்பனை செய்வதாகவும், இதனால் அந்த மீன்களை உண்பவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் கவலை தெரிவித்தார். தற்போது ஆற்று நீர் நுரை தள்ளியும், குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது.

இது குறித்துத் தகவல் அறிந்த பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அதிகாரி சுப்பாராவ் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆற்று நீரைச் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் விஷம் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
கல்வி அதிகாரி
என்.வி.சுப்பாராவ்