பத்திரிக்கைச் செய்தி : 13-01-2026
ஜார்ஜ்டவுன், ஜன. 13- புத்தாண்டை வரவேற்கும் காலக்கட்டத்தில் இருக்கும் நாம் பிள்ளைகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிள்ளைகளிடம் விவசாயக் கல்வியைப் போதிக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு செடி நடும் யுக்திகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என அச்சங்கத்தின் கல்வி, இயற்கை விவசாய பயிற்றுநர் என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் பணிமனையில் நடைபெற்ற சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான விவசாயப் பயிலரங்கில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். புதிய ஆண்டில் பிள்ளைகள் இதுபோன்ற பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாராட்டக்குரியது என்றார். மலேசியர்கள் 2026ஆம் ஆண்டை சுயமாகக் காய்கறிகளைப் பயிரிடும் ஆண்டாகத் தொடங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் சுப்பாராவ்.
2026ஆம் ஆண்டு உணவுப் பொருட்களின் விலை உட்பட வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பின் அடிப்படையில் பயனீட்டாளர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
காய்கறி விலை உயர்வின் சுமையைக் குறைக்க, புதிய ஆண்டின் தொடக்கத்தில் பல வகையான காய்கறிகள், மூலிகைச் செடிகளையும் வளர்க்குமாறு பொதுமக்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பாதுகாப்பு மற்றும் கிரகத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க இதுவே சிறந்த நேரம்.
இந்த இயற்கை விவசாயப் பயிலரங்கில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு செடி வழங்கப்பட்டது. அச்செடியை வீட்டில் நட்டு அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. பங்கு கொண்ட மாணவர்களுக்கு விவசாயக் கையேடுகள் மற்றும் விவசாய உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
