பத்திரிக்கைச் செய்தி : 02-01-2026
“வருங்கால சந்ததிக்கு நாம் தரும் ஆரோக்கியமான உயில்!” எனும் தலைப்பிலான திட்டத்தைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) ஏற்பாடு செய்தது. நிலையான இரசாயனமற்ற நகர்ப்புற விவசாயம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புத்தாண்டு முயற்சியாக இது தொடங்கப்பட்டது.
உணவுமுறை குறித்த அறிவு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நடைமுறை வாழ்க்கைத் திறன்களைக் கொண்ட ஒரு தலைமுறையை வளர்ப்பதற்கான கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இத்திட்டத்தைப் பினாங்கு மாநில மாநகராட்சி மேயர் டத்தோ இங். இராஜேந்திரன் பி. அந்தோணி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

குடும்பச் செலவுகளைக் குறைப்பதற்கும், சத்தான மற்றும் புதிய உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு மாற்றத்தக்க அணுகுமுறையாக நகர்ப்புற விவசாயத்தை (Urban Agriculture) பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) நீண்டகாலமாக ஆதரித்து வருகின்றது. இந்த முன் முயற்சியானது, குடும்பங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் தங்களுக்குக் கிடைக்கும் குறைந்த இடவசதியிலும், ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான முறைகளைப் பயன்படுத்தி காய்கறிகள், மூலிகைகள் மற்றும் உண்ணக்கூடிய தாவரங்களை வளர்க்க ஊக்குவிக்கிறது.
தினசரி வீட்டில் பயன்படுத்தப்படும் பாட்டில்கள், பால் கேன்கள் மற்றும் தகரப் பெட்டிகள் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தி, வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய், கீரை வகைகள், புதினா, வல்லாரை மற்றும் செலோம் (Selom) போன்ற தாவரங்களை வளர்க்கலாம். இதன் மூலம் குடும்பங்களுக்கு இரசாயனமற்ற மற்றும் புதிய விளைபொருட்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
சுற்றுச்சூழல் கல்வியை வளர்ப்பதில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியப் பங்கை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது. தோட்டம் அமைத்தல் மற்றும் நேரடியாகப் பயில்வதன் மூலம், மாணவர்கள் தாவரங்களின் வளர்ச்சி, நிலையான விவசாய முறைகள் மற்றும் இயற்கையின் சுழற்சிகள் குறித்த நடைமுறை அறிவைப் பெறுகின்றனர். அதே வேளையில், பருவநிலை மாற்றம் மற்றும் மனித செயல்பாடுகள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் சிறுவயதிலேயே பெறுகின்றனர்.
பள்ளி வளாகங்கள், பயன்படுத்தப்படாத நிலங்கள் அல்லது வீட்டின் சிறிய இடங்களைக்கூட பசுமையான கற்றல் சூழல்களாக மாற்றுவதன் மூலம், குழந்தைகளிடம் ஆர்வத்தையும், பொறுப்புணர்வையும், பூமியைப் பாதுகாக்கும் கடமை உணர்வையும் வளர்க்க முடியும் என்று பயனீட்டாளர் சங்கம் (CAP) நம்புகிறது.
நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்த முன்முயற்சி கருத்தில் கொள்கிறது. குறிப்பாக, விவசாய உள்ளீட்டுச் செலவுகள் உயர்வு, கணிக்க முடியாத வானிலை, வெள்ளம் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் உணவு உற்பத்தி மற்றும் விலையைப் பாதித்துள்ளன. காய்கறிகளை வீட்டிலேயே வளர்ப்பதன் மூலம், நுகர்வோர் தங்களின் மளிகைப் பில் செலவுகளைக் குறைப்பதுடன், இத்தகைய சவால்களின் தாக்கத்தையும் தணித்துக்கொள்ள முடியும். மேலும், உணவு ஆதாரங்கள் மற்றும் நிலையான நடைமுறைகள் குறித்த ஆழமான புரிதலையும் அவர்கள் பெறுகின்றனர்.

2026-ஆம் ஆண்டிற்குள் நாம் அடிஎடுத்து வைக்கும் வேளையில், அனைத்து மலேசியர்களும் “வருங்காலத்திற்காக விதைகளை விதைப்போம்” என்ற எளிமையான அதேசமயம் வலிமையான உறுதிமொழியை ஏற்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) அழைப்பு விடுக்கிறது. உங்கள் சொந்த காய்கறிகளையும் மூலிகைகளையும் வளர்ப்பது என்பது புதிய மற்றும் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கான ஒரு நடைமுறை நடவடிக்கை மட்டுமல்ல; அது சுயசார்பு, மீள்திறன் மற்றும் நமது சமூகம் மற்றும் சுற்றுச்சூழலின் நலனுக்கான ஒரு முதலீடாகும். இந்த சிறிய ஆனால் அர்த்தமுள்ள செயலைச் செய்வதன் மூலம், குடும்பங்கள் சத்தான உணவை வளர்ப்பது மட்டுமின்றி, பொறுப்புணர்வு, பூமியின் மீதான அக்கறை மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கை முறை ஆகிய விழுமியங்களையும் வளர்க்க முடியும்.
ஒவ்வொரு விதையை நடுவது என்பது பசுமையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான மலேசியாவை நோக்கிய ஒரு படி என்பதை இந்தப் புத்தாண்டு நமக்கு நினைவூட்டட்டும். மலேசியர்கள் இந்த உறுதிமொழியை முழு மனதுடன் ஏற்று, அன்றாட இடங்களை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளுக்கான தோட்டங்களாக மாற்றுவார்கள் என்றும், தங்கள் குடும்பத்தையும் தாங்கள் வாழும் உலகையும் பராமரிப்பதில் அடுத்த தலைமுறையினர் பெருமிதம் கொள்ளத் தூண்டுவார்கள் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நம்புகிறது.
என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
