அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN) மற்றும் 18 உறுப்பிய குழுமங்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்காவின் 17 நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட பொருள்கள், ஒரு முறை பொட்டலமிடும் காகிதங்கள், அட்டைப்பெட்டிகளில் பெர்- மற்றும் போளிப்லுரோஅல்கேல் மற்றும் தடை செய்யப்பட்ட இரசாயனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சூழலில் நீடித்திருப்பதால் “நீடித்திருக்கும் இரசாயனங்கள்” என்று பெயர் பெற்ற போளிப்லுரோஅல்கேல் எண்ணெய் பிசுபிசுப்பைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய், மலட்டுத் தன்மை மற்றும் ஹோர்மோன் குளறுபடிகளோடு தொடர்புபடுத்தப் படுகிறது. போளிப்லுரோஅல்கேல் கலவை கொண்ட பொட்டலங்களில் உணவுகளை உண்ணும்பொழுது அவை உணவுகளில் கசிந்து இரத்தத்தில் போளிப்லுரோஅல்கேலின் அளவை அதிகரிக்கிறது.

போளிப்லுரோஅல்கேல் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுகிறது. நேரடி வெளிப்பாடாக, இந்த ஆய்வு 21 முக்கிய போளிப்லுரோஅல்கேலை இனங்கண்டுள்ளது. இதில் உணவு உணவுப் பொட்டலத்தில் பயன்படுத்தப்படும் ஃப்ளோரோடெலோமர் ஆல்கஹால்கள் (FTOHs), பாலிஃபுளோரினேட்டட் அல்கைல் பாஸ்பேட் எஸ்டர்கள் (PAPs) மற்றும் பெர்ஃப்ளூரோகார்பாக்சிலிக் அமிலங்களும் (PFCAs) அடங்கும். பாலிஃபுளோரினேட்டட் அல்கைல் பாஸ்பேட் எஸ்டர்கள், ஃப்ளோரோடெலோமர் ஆல்கஹால்கள் ஆகவும் பெர்ஃப்ளூரோகார்பாக்சிலிக் அமிலங்கள் வளர்சிதை மாற்றம் கண்டு கல்லீரல் நச்சுத்தன்மை, பாலூட்டி சுரப்பி புற்றுநோய், இனப்பெருக்கச் சேதம் மற்றும் வளர்ச்சிக் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இந்த போளிப்லுரோஅல்கேல், உணவுப் பொட்டலங்களிலிருந்து உணவுக்கு இடம் பெயர்கின்றன. நுண்ணலை அடுப்பில்பொரிக்கப்படும் சோளப்பொரி இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
துரித உணவுகளை விரும்பி உண்ணும் பயனீட்டாளர்களின் இரத்தத்தில் போளிப்லுரோஅல்கேல் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இதில் இளம் பருவத்தினர் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பொட்டலங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன.
போளிப்லுரோஅல்கேல் பொருள்களை உற்பத்தி செய்யும்பொழுது காற்றிலும் நீரிலும் போளிப்லுரோஅல்கேல் கசிகிறது. பயன்படுத்தி வீசப்படும் பொட்டலங்களை எரிஉலைகளில் போட்டு எரிக்கும்பொழுது போளிப்லுரோஅல்கேல், புளோரினேட்டட் பசுமைக்குடில் வாயுக்கள் மற்றும் இதர மாசுபடுத்திகள் வெளிப்படுகின்றன. போளிப்லுரோஅல்கேல் அடங்கிய பொருள்களை எரித்த பிறகு உருவாகும் சாம்பலைக் குப்பைமேடுகளில் கொட்டும்பொழுதும், கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும்பொழுதும் கூடுதல் மாசுபாட்டினை உருவாக்குகிறது.
ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்
இந்த ஆய்வு, 17 நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட, காகிதம், அட்டைப்பெட்டி, தாவரசார் நார்ப்பொருள் ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட 119 உணவுப் பொட்டலப் பொருள்களை ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவுகள் வருமாறு:
- சோதனை செய்யப்பட்ட 119 மாதிரிகளில் 64-இல் (54%) போளிப்லுரோஅல்கேல் இருந்தது அல்லது போளிப்லுரோஅல்கேல் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
- நுண்ணலை அடுப்பில் பயன்படுத்தப்படும் சோளப்பொரிப் பைகளில் பெரும்பாலும் போளிப்லுரோஅல்கேல் இருந்தது. (28 மாதிரிகளில் 24-இல் இருந்தது).
- எண்ணெயற்ற உணவுகளைப் பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்படும் 12 விதமான மறுசுழற்சிக் காகிதங்களில் 4 போளிப்லுரோஅல்கேலால் மாசுபடுத்தப்பட்டவை. ஆகையால், இந்தக் காகிதங்களை மறுசுழற்சி செய்யும் பொழுது அவற்றில் கட்டுக்கடங்காத போளிப்லுரோஅல்கேல் மாசுபாடு இருந்தாலும் அது அப்பொருளில் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது.
- மக்கும் தன்மை கொண்ட தாவர நார் சார்ந்த பொருள்களில் ஆக அதிகமான போளிப்லுரோஅல்கேல் இருந்தது. இதனையடுத்து நுண்ணலை அடுப்பு சோளப்பொரி பைகளில் அதிகமான போளிப்லுரோஅல்கேல் இருந்தது.
- 4 மாதிரிகளில் பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) பெர்ஃப்ளூரோகார்பாக்சிலிக் (PFCAs) ஆகியவை ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்த அளவை மீறி இருந்தது. 53 மாதிரிகளில் ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பு வரையறையை மீறி இருந்தது.
- மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதப் பொட்டலங்கள் போளிப்லுரோஅல்கேலால் மாசுபடுத்தப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகையால் அது மறுசுழற்சிக்கு ஏற்றதா என்பது கேள்விக்குறியாகிறது.
மக்கும் தன்மை கொண்டது என்று விளம்பரப்படுத்தப்படும் தாவர நார் பொட்டலமிடும் பொருள்கள், ஒரு காலக்கட்டத்தில் அவை மக்கும்பொழுது, போளிப்லுரோஅல்கேல் நச்சுத்தன்மைக்கு உள்ளான மக்குரத்தையே உருவாக்குகின்றன. இவை நாளடைவில் பயிர்களுக்குச் சென்று சேர்கின்றன. போளிப்லுரோஅல்கேல் சேர்க்கப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பொருள் விளைவிக்கும் சேதங்களை இவை கோடிட்டுக் காட்டுகின்றன.
ஒரு பொருளில் போளிப்லுரோஅல்கேல் இருப்பதை இனங்காணுவது அரிது. ஏனெனில் வெறும் 2% மாதிரிகள் மட்டுமே குறிப்பிட்ட போளிப்லுரோஅல்கேலை இனங்காட்டுகின்றன. ஆகையால் வேறு விதமான போளிப்லுரோஅல்கேலை இனங்காணுவதும் கட்டுக்குள் கொண்டு வருவதும் சவால் மிக்கது ஆகும். போளிப்லுரோஅல்கேல் சூழலில் நீடித்திருக்கும் மற்றும் குவிந்திருக்கும் தன்மையின் காரணமாக அவை பற்றிய அச்சம் உலக அளவில் நிலவி வருகிறது.
மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பர்கர் கிங், சப்வே, ஸ்டார்பக்ஸ், டன்கின் டோனட்ஸ் மற்றும் ஜோல்லி டைம் போன்ற சில உலகளாவிய உணவு நிறுவனங்கள் சில நாடுகளில் போளிப்லுரோஅல்கேல் அல்லாத பொட்டலங்களைப் பயன்படுத்துகின்றன என்று அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் அறிவித்துள்ளது. ஆனால், இதர நாடுகளில் மாற்று வழிகள் இருந்தாலும் கூட, போளிப்லுரோஅல்கேலால் மாசுபடுத்தப்பட்ட பொட்டலங்களையே பயன்படுத்துகின்றன.
உணவு தொழிற்துறை போளிப்லுரோஅல்கேலை படிப்படியாக நீக்குவதை வலியுறுத்துகிறது. அஃதோடு சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு உருவாகும் கேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு போளிப்லுரோஅல்கேலை உலகம் முழுக்கத் தடை செய்யுமாறும் வலியுறுத்தி வருகின்றனர். போளிப்லுரோஅல்கேல் சேர்க்கப்பட்ட காகிதங்களை மறுசுழற்சி செய்வது அது கட்டுக்கடங்காமல் சூழலில் கலப்பதற்கு வித்திடுவதோடு மட்டுமல்லாமல் மறுசுழற்சியின் மீதான நம்பிக்கையைத் தகர்த்தெறிகிறது. இது ஆரோக்கியமான சுழற்சிப் பொருளாதாரத்திற்குத் தடையாக உள்ளது.
பரிந்துரைகள்
உலகம் முழுக்க ஓரிரு போளிப்லுரோஅல்கேல்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விதிமுறைகள், தனித்த இரசாயனங்கள் மற்றும் சிறு குழும இரசாயனங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. டென்மார்க் மற்றும் சில அமெரிக்க மாகாணங்களில் உணவுப் பொட்டல முறை தொடர்பாக இறுக்கமான விதிமுறைகள் உள்ளன. ஆனால், விரிவான, உலகம் முழுமைக்குமான ஒரு தடை இன்னும் சாத்தியப்படாததாகவே உள்ளது.
“நீடித்திருக்கும் இரசாயனங்கள்” சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதகங்களைக் கருத்தில் கொண்டு, உணவுப் பொட்டலங்களிலிருந்து அவற்றை நீக்கிவிட்டு, பாதுகாப்பான மாற்றுப் பொருள்களுக்கு தொழிற்துறை மாறுவதற்கென, அனைத்துலக அளவில் போளிப்லுரோஅல்கேலை தடை செய்வது அவசியமாகும்.
எல்லா போளிப்லுரோஅல்கேல்களுக்கும் விரிவான கண்காணிப்பு முறைகளை செயல்படுத்துவது (எ.கா. மொத்த கரிம புளோரின் பகுப்பாய்வு) மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கு அவசியமானது.
இந்த ஆய்வுகளின் முடிவுகளைக் கருத்தில் கொண்டு, அரசாங்கங்கள், தொழிற்துறை மற்றும் குடிமக்களை போளிப்லுரோஅல்கேல் மாசுபாட்டை இனங்காணுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உணவு தொடர்பான பொருள்களில் மற்றும் பயனீட்டாளர் உற்பத்திகளில் போளிப்லுரோஅல்கேலை தடை செய்வதோடு, எல்லா போளிப்லுரோஅல்கேல்களுக்கும் உலகளாவிய சட்ட விதிகளை நாட்டு அரசாங்கங்கள் கொண்டு வர வேண்டும். உற்பத்திகளில் பயன்படுத்தப்படும் கலவைகள் என்னென்ன என்பதை உறுதி செய்து பொருளாதார சலுகைகள் வாயிலாக பாதுகாப்பான மாற்றுப் பொருள்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
ஸ்டாக்ஹோம் மற்றும் பாஸல் மாநாடுகளின் தரப்பினர் குறிப்பிட்ட போளிப்லுரோஅல்கேல்களுக்கான விலக்குகளை நீக்க வேண்டும். போளிப்லுரோஅல்கேல் கழிவுகளை அபாயகரமானதாக வகைப்படுத்துவதோடு போளிப்லுரோஅல்கேலுக்கு கடுமையான உலகளாவிய வரம்புகளை விதிக்க வேண்டும். உலகளாவிய இரசாயன நிர்வாகத்தில் பங்குதாரர்கள் போளிப்லுரோஅல்கேல் அல்லாத மாற்றுப் பொருள்களை ஏற்றுக்கொள்வதை துரிதப்படுத்தி, இது தொடர்பாக வெளிப்படைத்தன்மையோடு இருப்பதோடு மறுசுழற்சி பொருட்களின் உள்ளடக்கத்தையும் கண்காணிக்க வேண்டும்.
துரித உணவு நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் விநியோகச் சுற்றிலிருந்து இருந்து போளிப்லுரோஅல்கேல்களை அகற்றுவதோடு, பாதுகாப்பான மாற்றுகளைப் பின்பற்ற வேண்டும். மறுபயனீட்டினை ஊக்குவிப்பதோடு அவற்றின் நன்மைகளை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
மறுசுழற்சி களன்களைப் பயன்படுத்துவதோடு போளிப்லுரோஅல்கேல் சேர்க்கப்பட்ட பொட்டலங்களைத் தவிர்ப்பதன் மூலம் பயனீட்டாளர்கள் தங்கள் பங்கை ஆற்றலாம்.
போளிப்லுரோஅல்கேல்களை முற்றிலும் நீக்குவதற்கும் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்
சூழலுக்கும் அது விளைவிக்கும் தீங்குகளைக் குறைப்பதற்கும் ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய முன்னெடுப்பு அவசியமாகும்.
குறிப்புகள் :
Straková, J., Brosché, S., Grechko, V. (2023, December). Forever Chemicals in Single-use Food Packaging and Tableware from 17 Countries. IPEN. 57p.
https://ipen.org/sites/default/files/documents/ipen-packaging-report-fin-opr-25012024.pdf



