பத்திரிக்கைச் செய்தி : 08-05-2026
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP), கிளந்தான் நிலம் மற்றும் சுரங்க அலுவலகமும் (PTG) உள்ளூர் அதிகாரிகளும் நெங்கிரி ஆற்றில் மணல் தோண்டும் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள ஆற்று அரிப்பு குறித்து உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இன்று (8 மே 2026) வெளிவந்த உள்ளூர் செய்தித்தாள் (பெரித்தா ஹரியான்) அறிக்கையை மேற்கோள் காட்டிய பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இந்த நிலைமை நீடித்தால் சுற்றுச்சூழல் மற்றும் அருகிலுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் எனத் தனது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.
கம்போங் பெர்த்தாம் லாமா (Kampung Bertam Lama) கூட்டமைப்பு கிராம வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குழுவின் (JPKKP) செயலாளர் முகமட் அஸ்ரி ஹசன் (வயது 57) கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த நடவடிக்கையினால், மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் கிராமச் சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், இப்பகுதியில் இயங்கி வரும் மணல் பம்ப் செய்யும் இடம் மயானத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், கம்போங் பெர்த்தாம் லாமாவைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதியில் மணல் எடுக்கும் பணி தொடங்குவது குறித்து தங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.
ஆற்று அரிப்பு மற்றும் சாலை சேதங்களைத் தவிர, இந்தச் சிக்கலை உடனடியாகக் கையாடாவிட்டால், மயானம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், ஆற்றில் உள்ள பல்வேறு உயிரினங்களும் விரைவில் அழிந்துவிடும் என்று பயனீட்டாளர் சங்கம் நம்புகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதையும் கிராம மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய இந்த மணல் அகழ்வு நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
நெங்கிரி ஆற்று அரிப்பால் பாதிக்கப்பட்ட கரைகள் மற்றும் கம்போங் பெர்த்தாம் லாமாவில் உள்ள சேதமடைந்த சாலைகள், மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
