“ஆசியான் பதிவு” விருதுகள் குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை!

பத்திரிக்கைச் செய்தி : 13-05-2026

ஆசியான்என்ற பெயரை பயன்படுத்தி மலேசிய வணிக நிறுவனங்களுக்கு அதிக கட்டணத்திற்கு ஆசியான் பதிவு” (ASEAN Record) அங்கீகாரங்களை வழங்குவதாகக் கூறப்படும் தனியார் அமைப்புகள் தொடர்பான தகவல்களை முன்னிட்டு கவலை வெளியிடுகிறது.

சில தனியார் அமைப்புகள் மலேசிய வணிக நிறுவனங்களை அணுகி, “ஆசியான் பதிவுவிருதுகள் மற்றும் அங்கீகாரங்களை வழங்குவதாகக் கூறி RM30,000 வரை உயர்ந்த தொகைகளை கோரியுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிகிறது. இத்தகைய நடைமுறைகள், தவறான பிரதிநிதித்துவம் மற்றும் ஆசியான் அடையாளத்தை வர்த்தக லாபத்திற்காக தவறாக பயன்படுத்தும் முயற்சிகள் குறித்த கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக மலேசிய தீபகற்ப பயனீட்டாளர் சங்கம் (PPSM) பல வணிக நிறுவனங்களிடமிருந்து புகார்கள் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியான் (ASEAN) என்பது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பாக விளங்கும், உறுப்புநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசுகளுக்கிடையிலான அமைப்பாகும்; அது எந்தவிதத்திலும் வர்த்தக நோக்கமுடைய அமைப்பு அல்ல. எனவே, ஆசியான் தனது பெயர், சின்னம் அல்லது அடையாளத்தை அனுமதியின்றி வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதையும், தனியார் அமைப்புகள் லாப நோக்கில் சான்றிதழ்கள், விருதுகள் அல்லது பதிவுகளை வழங்குவதையும் அனுமதிப்பதில்லை.

மேலும், “ஆசியான் அங்கீகாரம்பெற்றதாகக் கூறி மலேசிய வணிக நிறுவனங்களுக்கு பதிவுகள் மற்றும் சான்றிதழ்களை விற்பனை செய்யும் அமைப்புகளுக்கு ஆசியான் செயலாளர் அலுவலகம் எந்தவித அங்கீகாரமும், ஆதரவும் அல்லது கூட்டாண்மையும் வழங்கவில்லை எனத் தெளிவுபடுத்தும் கடிதம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்கிறது.

2026 மார்ச் மாதத்தில் ஆசியான் பொதுச் செயலாளரால் வெளியிடப்பட்ட கடிதத்தின் படி, இத்தகைய அமைப்புகள் வழங்கும் நிகழ்வுகள், சான்றிதழ்கள், நினைவுப் பலகைகள், சின்னப் பயன்பாடுகள் அல்லது அவர்கள் முன்வைக்கும் எந்தவொரு கூற்றுகளும் ஆசியானால் அங்கீகரிக்கப்படாதவை; மேலும் அவை ஆசியான் செயலாளர் அலுவலகத்திலிருந்தோ அல்லது எந்த அதிகாரப்பூர்வ ஆசியான் அமைப்பிலிருந்தோ தோன்றியவை அல்லஎன்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும், ஆசியான் பெயரும் சின்னமும் பாதுகாக்கப்பட்ட அடையாளங்களாகும் என வலியுறுத்தப்பட்டதுடன், சில தரப்புகள் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றதாக தவறான தோற்றத்தை உருவாக்கி, வணிக நிறுவனங்களிடமிருந்து பணம் வசூலிக்க முயற்சிப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து வணிக நிறுவனங்களும் பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, ஏதேனும் தொகை செலுத்துவதற்கு முன்போ அல்லது ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு முன்போ, ஆசியான் தொடர்பான அங்கீகாரக் கூற்றுகளை அதிகாரப்பூர்வ ஆசியான் வழிமுறைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும், தவறான விளம்பரம், பயனீட்டாளர் பாதுகாப்பு, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் அல்லது பாதுகாக்கப்பட்ட நிறுவன அடையாளங்களை தவறாக பயன்படுத்துதல் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ ஆசியான் தொடர்பு அல்லது அங்கீகாரம் இருப்பதாக தவறான எண்ணத்தை உருவாக்கக்கூடிய இத்தகைய அங்கீகாரங்களுக்காக, வணிக நிறுவனங்கள் பெரும் தொகைகளை செலுத்த அழுத்தப்படக்கூடாது.

மதிப்புமிக்க பிராந்திய அமைப்பாக விளங்கும் ஆசியானின் நம்பகத்தன்மை, கண்ணியம் மற்றும் மரியாதை வர்த்தக சுரண்டலிலிருந்தும் தவறான பயன்பாட்டிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்