பத்திரிகைச் செய்தி 10.06.2026
மலேசியாவின் கடல் சூழல் அமைப்பிற்கு மிகவும் அழிவுகரமானதும், அதே சமயம் கவனிக்கப்படாததுமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் வேகமாக உருவெடுத்து வருகின்றன என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கைவிடப்பட்டு மிதந்துகொண்டோ அல்லது நீரின் மேற்பரப்பிற்குக் கீழே சிக்கிக்கொண்டோ இருக்கும் இந்த வலைகள், பொறுப்பற்ற மீன்பிடி நடைமுறைகளின் நேரடி விளைவாகும் என்கிறார் அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர்.
சமீபத்திய செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டபடி, இத்தகைய நடத்தை தொடர்வது, இது விழிப்புணர்வின்மையால் ஏற்படுகிறதா அல்லது சுற்றுச்சூழல் பொறுப்பை வேண்டுமென்றே புறக்கணிப்பதால் ஏற்படுகிறதா என்பது குறித்து தீவிர கவலையை எழுப்புகிறது.

தொலைந்து போனாலோ அல்லது கைவிடப்பட்டாலோ, இந்த மீன்பிடி வலைகள் கடல்வாழ் உயிரினங்களை ஒரு மரணச் சுழற்சியில் சிக்க வைக்கின்றன.
அரிதான கிட்டார் சுறாக்கள், ஆமைகள் மற்றும் பெரிய மீன்கள் இந்த வலைகளில் சிக்கி மூச்சுத்திணறல் மற்றும் பட்டினியால் இறக்கின்றன, மற்றவை நெகிழியை உணவு எனத் தவறாக நினைத்து, அவை ஜெல்லிமீன்களைப் போல இருப்பதால் அவற்றை உட்கொள்கின்றன என்றார் முகைதீன்.
இதன் விளைவாக உடனடியான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, மாறாக நீடித்த துன்பங்கள் ஏற்படுகின்றன.
இது இறுதியில் மலேசியக் கடற்பரப்பை கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பற்ற வாழ்விடமாக மாற்றுகிறது.
கடல்வாழ் உயிரினங்களைத் தாண்டி, இந்தச் சேதம் முழு கடல் சூழல் மண்டலத்திற்கும் பரவுகிறது.
இது காலப்போக்கில் குவிந்து, கடல்களின் மீள்திறனை பலவீனப்படுத்துகின்றன.
எனவே மலேசிய மீன்வளத் துறையையும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சும் இந்தப் பிரச்சினையை அதன் மூலத்திலேயே கையாண்டு, பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு பி.ப.சங்கம் வலியுறுத்துகிறது:
தொலைந்து போன அல்லது கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளைக் கட்டாயமாகப் புகாரளிப்பதை அமல்படுத்தப்பட வேண்டும்.
வலைகளின் உரிமையாளரைக் கண்டறிய, வலைகளில் குறியிடுதல் அல்லது அடையாளம் காணுதல் உள்ளிட்ட ஒரு பொறுப்புக்கூறல் அமைப்பை அறிமுகப்படுத வேண்டும்.
கைவிடப்பட்ட மற்றும் சேதமடைந்த மீன்பிடி வலைகளைச் சேகரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட முறையை நிறுவுப்பட வேண்டும்.
தூய்மைப்படுத்தும் முயற்சிகள் மதிப்புமிக்கவையாக இருந்தாலும், அவை பிரச்சினையின் பின்விளைவுகளை மட்டுமே கையாளும் எதிர்வினை நடவடிக்கைகளாகும்.
பொறுப்பற்ற மீன்பிடி நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடரும் வரை, கைவிடப்பட்ட வலைகள் மலேசியக் கடல்பரப்புகளில் தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கும்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அவ்வப்போது அவற்றை அகற்றும் முயற்சிகளிலிருந்து, மூலத்திலேயே உறுதியான தடுப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை நோக்கி ஒரு தீர்க்கமான மாற்றம் தேவைப்படுகிறது. அத்தகைய நடவடிக்கை இல்லாவிட்டால், கடல்சார் சூழல் அமைப்புகள் அச்சுறுத்தல்களாலும் மாசுபாட்டாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் என்றார் முகைதீன் அப்துல் காதர்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

