பினாங்கு தஞ்சோங் ஆசாம் கடற்கரையும் அரிப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை!

“கடற்கரையோரம் உள்ள மரங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.”

பத்திரிகைச் செய்தி :  25.08.2026

பினாங்கு பத்து ஃபெரிங்கி கடற்கரை அரிப்பால் அச்சுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இங்குள்ள கெர்டாக் சங்கூலில் உள்ள தஞ்சோங் ஆசம் கடற்கரையும் அதே கதியை சந்தித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

“பார்வையாளர்கள் ஓய்வெடுக்கும் கொட்டகை, புயலால் சேதமடைந்துள்ளது.”

முன்பு அதன் தூய்மையான மணலுக்காக அறியப்பட்ட இந்தக் கடற்கரை, இப்போது அலைகளால் ‘மூழ்கடிக்கப்பட்டு’ வருகிறது என்கிறார்  அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர்.

மேலும் அருகிலுள்ள சில பொது வசதிகள் கூட சேதமடையத் தொடங்கியுள்ளன என்றார் அவர். இந்த நிலைமை கடந்த சில ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சமீபகாலமாகபிது  மோசமடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

அரிப்பின் விளைவுகளைத் தெளிவாகக் காண முடிவதாகவும், அரணாகப் பயன்படுத்தப்பட்ட பாறைகள் கூட வலுவான அலைகளால் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மீனவர்கள் தங்கள் படகுகளை எளிதாகக் கையாளவும், தாங்கள் பிடித்த கடல் மீன்களைக் கரைக்குக் கொண்டுவரவும் வசதியாக, இங்கு முன்பு கற்களால் ஆன ஒரு மேடை இருந்தது.

“இருப்பினும், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அது இடிந்து விழுந்தது, மேலும் இங்குள்ள கரையும் சேதமடைந்தது. அலைத்தடுப்பாகக் கட்டப்பட்டிருந்த கற்களின் அமைப்பும் இடிந்து விழுந்ததால், மீனவர்கள் தங்கள் படகுகளைக் கட்டுவது கடினமாகிவிட்டது.

“ஒருமுறை, கட்டமைப்பைச் சரிசெய்வதற்காக சிமெண்ட் வாங்க எங்கள் சொந்தப் பணத்தில் மவெ1,000-க்கும் அதிகமாகச் செலவிட்டோம், ஆனால் விரைவில் அலைகள் தாக்கியதால் அது மீண்டும் சேதமடைந்தது என மீனவர்கள் புகார் கூறினர். “முன்பு, இங்கு மணல் இருந்தது, மக்கள் (மணலில்) விளையாட வந்தனர், ஆனால் இப்போது (அரிப்பு காரணமாக) அது மூடப்பட்டுள்ளது.

“தஞ்சோங் அசாம் கடற்கரையில் மாசுபாட்டின் காரணமாக மணல் கருமையாக மாறியுள்ளது.”

அனைவரின் பாதுகாப்பிற்காகவும் உடனடியாக நல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்,” என மீன்வர்கள் தெரிவித்தனர். மீன்பிடி படகுப் பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்கு (JPS) சொந்தமானதாகக் கூறப்படும் இரண்டு ஓய்வுக் குடில்கள் உள்ளன.

அலைகளால் மணல் அரிக்கப்பட்டு தரைப்பகுதி உடைந்ததாலும், கம்பங்கள் சேதமடைந்து வளைந்ததாலும், அவை அழிவின் நேரத்திற்காகக் காத்திருப்பது போல் காட்சியளிக்கின்றன. மேலும், அரிப்பின் காரணமாக மரங்கள் கிட்டத்தட்ட சாய்ந்து விழுந்திருந்தன.

ஆகவே இக்கடற்கரையை பாதுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இப்பகுதிக்கு வரும் சுற்றுப்பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முகைதீன் அப்துல் காதர் ஆலோசனை கூறினார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்