இயற்கையை காப்பாற்ற மரம், செடி நடுங்கள். அது உணவு பாதுகாப்பை தரும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

நம் எதிர்காலத்திற்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தேவையான இயற்கை விவசாயத்தை விட்டுச் செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நாம் கண்டிப்பாக மரம், செடி, காய்கறிகளை நட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இதற்காக நடுவோம் வாரீர் என்ற மிகப் பெரிய விவசாய பிரச்சாரத்தை பி.ப.சங்கம் தொடங்கியிருப்பதாக அதன் கல்வி ஆய்வு பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் கூறினார்.

மனித குலம் இயற்கையின் அங்கம் என்ற புரிதலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக நடுவோம் வாரீர் என்ற விவசாய பிரச்சாரத்தை பி.ப.சங்கம் துவக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஒரு விதையை அல்லது செடியை அல்லது மரத்தை அல்லது காய்கறியை அல்லது பூக்களையாவது நட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பு என்றார் சுப்பாராவ்.

அண்டத்தில் உள்ளது பிண்டம்: பிண்டத்திலுள்ளது அண்டம் என்பார்கள். இயற்கை சூழலுக்கு நாம் என்ன செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்ப கிடைக்கிறது. இயற்கைத் தாயின் மடியில் நாமெல்லாம் சிறு குழந்தைகள். ஆகவே அந்த இயற்கையை பாதுகாக்க நாம் கண்டிப்பாக ஏதாவதொரு விதயை அல்லது செடி அல்லது மரத்தை நட வேண்டும் என்றார் சுப்பாராவ்.

இந்த காரணத்தால் 2021ல் நாம் அனைவரும் நடுவோம் பிரச்சாரத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றார் அவர்.
சொந்தமாக இயற்கை விவசாயம் செய்தால் காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தலாம். நஞ்சற்ற காய்கறிகள் நமக்கு கிடைக்கும். பணத்தையும் மிச்ச படுத்தலாம் என்றார் அவர்.

கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நடுவோம் வாரீர் பிரச்சாரத்தை செவிமெடுத்த ஆயிரக்கணக்கான மலேசிரியர்கள் தங்கள் வீடுகளில் மரம் செடி வகைகளை நட்டது தங்களுக்கு மகிழ்ச்சியை தந்ததாக அவர் கூறினார்.

நிலம் இல்லாதவர்கள் பழைய ஜாடிகள், தோம்புகளில் நட்டுள்ளனர். வேறு சிலர் மூலிகை செடி நட்டனர்.

பல மேற்கெத்திய நாடுகளில் அங்குள்ளவர்கள் சுயமாகவே விவசாயம் செய்கின்றனர். வீட்டின் சமையல் கழிவுதான் காய்கறிகளுக்கு உரம்.

ஆனால் நமக்கு இடம் போன்ற வசதிகள் இருந்தும் நாம் விவசாயம் செய்யாமல் இரசாயனம் சேர்க்கப்பட்ட காய்கறிகளை உண்டு வருகின்றோம்.

ஆகவே இந்த ஆண்டு முழுவதிலும் நாம் விவசாயம் செய்ய வேண்டும். உழவு இல்லாத உழவாண்மையே நம் இலக்கு என்ற அடிப்படையில் நாம் செல்ல வேண்டும். மா, பழா, தென்னை, வாழை, முருங்கை, பப்பாளி என்றும், வெண்டை, கத்திரி, மிளகாய், கீரைகள் என்றும் எதனையும் மக்கள் தேர்வு செய்யலாம். ஆனால் அனைத்தும் இயற்கையான முறையில் வளர்க்கப்பட வேண்டும்.

நாம் சேர்க்கும் மண்ணில் இரசாயனத்தை சேர்க்கக் கூடாது. இயற்கை விவசாயம் தொடர்பான விபரங்களுக்கு பொதுமக்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்த நடுவோம் வாரீர் பிரச்சாரத்திற்கு மலேசியர்கள் மடுமல்லாது, ஜெர்மனி, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் இயற்கை விவசாய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்ததாகவும் சுப்பாராவ் தெரிவித்தார்.

என் வி சுப்பாராவ்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
பத்திரிகை செய்தி. 3.1.21