ஜார்ஜ் டவுன்: மயக்கப்பொருள் கலந்த வேப் திரவத்தை சில முறை இழுத்தாலே, கடுமையான மயக்க நிலை, கண்கள் மங்கலாகத் தோன்றுதல் மற்றும் சுற்றுப்புறச் சூழலை உணரும் திறன் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம். இவ்வகை வேப் பொருட்கள் தற்போது பொழுதுபோக்கு மையங்களிலும் சில பள்ளிகளிலும் கூட கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேப் பொருட்களில் ஃபென்டனில் (Fentanyl) எனப்படும் ஆபத்தான மயக்கப்பொருள் கண்டறியப்பட்டிருப்பது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இவை பொதுவாக “சோம்பி மருந்துகள்” (Zombie Drugs) அல்லது “பியாவ் பியாவ்” (Piao Piao – மிதத்தல் அல்லது அலைதல் என்ற பொருள்) என்று அழைக்கப்படுகின்றன.
பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் கூறுகையில், புதிய வகை செயற்கை மயக்கப்பொருட்கள் மிகவும் கவலைக்கிடமானவை. ஏனெனில் அவை வழக்கமான சிறுநீர் பரிசோதனைகளில் எளிதில் கண்டறியப்படாமல் போகலாம் என்றார்.
“இதனால், குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இவற்றின் பயன்பாடு மேலும் ஆபத்தானதாக மாறுகிறது. பரிசோதனையில் சிக்கமாட்டோம் என்ற தவறான எண்ணம் பயனாளர்களிடம் உருவாகலாம்,” என்றார்.
இந்தப் பொருட்கள் கணிக்க முடியாத மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, உடல்நலம், நடத்தை மற்றும் மனநலத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
“இவ்வகை பொருட்களை விற்பனை செய்து விநியோகிக்கும் கும்பல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் உளவுத்துறைத் தகவல் சேகரிப்பையும் தொடர்ந்து தீவிரப்படுத்துவோம்,” என்றார்.
இந்த ஆண்டு மே மாதம் வரை, மயக்கப்பொருள் கலந்த வேப் பொருட்கள் தொடர்பாக 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் மற்றும் நச்சுப்பொருள் சட்டத்தின் கீழ் 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வேப் சாதனங்கள் மூலம் போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சுகாதார அமைச்சகம் மற்றும் பினாங்கு மருந்தியல் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதற்கிடையில், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி சுப்பாராவ், சில பள்ளி மாணவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் வேப் சாதனங்களின் விற்பனை மற்றும் விநியோக முகவர்களாகச் செயல்படுவதாகக் கூறினார். இதில் மயக்கப்பொருள் கலந்த திரவங்களும் அடங்கும் என்றார்.

“இந்த மாணவர்கள் வேப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தங்கள் நண்பர்களிடையே அவற்றை பரப்புவதன் மூலம் விற்பனையாளர்களிடமிருந்து கமிஷனும் பெறுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், வேப் திரவங்களில் மயக்கப்பொருட்கள் கலக்கப்படுவதாக வரும் தகவல்கள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். இதைப் பயன்படுத்துவோர் தாங்கள் ‘பறப்பது போன்ற’ உணர்வைப் பெறுவதாகக் கூறுகின்றனர்.
“இந்தப் பொருட்களில் என்ன கலக்கப்பட்டுள்ளது என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பல்வேறு தெரியாத இரசாயனப் பொருட்களும் இருக்கக்கூடும். இவை மலிவானவை, எளிதில் கிடைக்கக்கூடியவை, மேலும் இணையம் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வலையமைப்புகள் மூலம் வேகமாகப் பரவி வருகின்றன.
“சமூக ஊடகங்கள் இதனை இன்னும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றியுள்ளன,” என்றார்.
நிக்கோடின் அடிமைத்தனம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மாணவர்களிடம் அதிக கோபம், கட்டுப்பாட்டின்மை மற்றும் எதிர்ப்புத் தன்மை போன்ற நடத்தை மாற்றங்கள் காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
முன்பு பெரும்பாலும் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இந்தப் பிரச்சினை, எளிதில் கிடைப்பது, கவர்ச்சிகரமான மணங்கள் மற்றும் நண்பர்களின் தாக்கம் காரணமாக தற்போது பள்ளிகளுக்கும் பரவியுள்ளது என்றார்.
தொடக்கப்பள்ளி மாணவர்கள்கூட வீட்டிலேயே வேப்பிங் பழக்கத்தைப் பார்க்கும் சூழலில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“பல குழந்தைகள் தங்கள் தந்தையோ அல்லது மூத்த சகோதரரோ வீட்டில் வேப் பயன்படுத்துவதாக என்னிடம் கூறியுள்ளனர். பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் வேப் சாதனங்களைத் தாங்களாக வாங்குவதில்லை; குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்திப் பார்த்து பழகுகின்றனர்,” என்றார்.
சில ஒருமுறை பயன்படுத்தும் வேப் சாதனங்கள் வெறும் 10 ரிங்கிட் விலைக்கே விற்கப்படுவதால் மாணவர்களிடையே அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் சுப்பாரோ கூறினார்.
“பல்வேறு சுவைமணங்கள் கொண்ட பொருட்களே முக்கிய ஈர்ப்பாக உள்ளன.
“புகையிலையின் மணத்தை குழந்தைகள் விரும்புவதில்லை. அதனால் சுவைமணங்கள் கொண்ட வேப் பொருட்கள் அவர்களை ஈர்க்கின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, உலகளவில் சுமார் 16,000 வகையான வேப் சுவைகள் உள்ளன,” என்றார்.
மேலும், சமூக ஊடகங்கள் வேப்பிங்கை நவீன மற்றும் நாகரிகமான பழக்கமாகக் காட்டுவதன் மூலம் அதனை இயல்பாக்குகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மூலம்: தி ஸ்டார் (29 மே 2026) (THE STAR)

