மலேசியா-அமெரிக்க ஒப்பந்தம்! சரணடைதல் மலேசியாவின் இறையாண்மை சரணடைவதற்கு சமம். பினாங்கின் இரண்டு அமைப்புக்கள் கருத்து,!

பத்திரிகைச் செய்தி. 29.10.2025

மலேசியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நமது ஒழுங்குமுறை சுயாட்சியைப் பறிக்கிறது என்கின்றன பினாங்கு பயனீட்டாளர் சங்கமும், பூவுலகின் நண்பர்கள் இயக்கமும். நமது வெளியுறவுக் கொள்கையை வாஷிங்டனின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்துவதாக இந்த ஒப்பந்தம் இருப்பதாக அவை கருதுகின்றன.

இந்த ஒப்பந்தம் நமது வருவாயை உயர்த்துவதற்கான நமது திறனைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் அடுத்த தசாப்தத்தில் 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட நம்மை உறுதி செய்கிறது. இது ஒரு பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் அல்ல.

இது வர்த்தகமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சரணடைதல் என்கின்றனர் முகைதீன் அப்துல் காதர் மற்றும் மீனாட்சி இராமன்.  இந்த ஒப்பந்தத்தை உடனடியாக நிராகரித்து, நாடாளுமன்றத்தில் திறந்த விவாதத்தைத் தொடர்ந்து முழுமையான மற்றும் வெளிப்படையான மதிப்பாய்வை நடத்துமாறு மலேசிய அரசாங்கத்தை இந்த இரண்டு அமைப்புக்களும் கேட்டுக்கொள்கின்றன.

இந்த ஒப்பந்தம் வாஷிங்டன் நமது வெளியுறவுக் கொள்கையை ஆணையிட அனுமதிக்கின்றது. மலேசியா தனது பொருளாதாரக் கொள்கைகளை அமெரிக்காவின் கொள்கைகளுடன் இணைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக காட்டுகிறது.

இருதரப்பு வர்த்தகத்துடன் எந்த தொடர்பும் இல்லாத விஷயங்களில் கூட. இந்த ஒப்பந்தம் மலேசியாவை பல வழிகளில் கட்டாயப்படுத்துகிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு அபாயங்களுக்காக மலேசியாவில் வெளிநாட்டு முதலீடுகளைத் தடுக்கவும் இந்த ஒப்பந்தம் ஒப்புக்கொள்கின்றது.

பிற நாடுகளுடன் டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு அமெரிக்காவுடன் மலேசியா கலந்தாலோசிக்க வேண்டுமாம்.

இந்த விதிகள் அசாதாரணமானவை.  அவை அடிப்படையில் மலேசியாவின் சுயாதீன வெளியுறவுக் கொள்கையின் மீது அமெரிக்காவிற்கு வீட்டோ அதிகாரத்தை வழங்குகின்றன.

மலேசியா அதன் சொந்த மூலோபாயத் தேர்வுகளைச் செய்வதற்கான சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் அந்த சுதந்திரத்தை நம்மிடமிருந்து பறிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மலேசியா அமெரிக்க விதிமுறைகள் மற்றும் ஒப்புதல்களை நம்முடையது போல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஒப்பந்தம் மலேசியாவை பல வழிகளில் கட்டாயப்படுத்துகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலை நமது சந்தைக்கு போதுமானதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சுயாதீன ஆய்வு இல்லாமல் அமெரிக்க இறைச்சி, பால் மற்றும் கோழிப் பொருட்களை மலேசியா ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஆபத்தானது. அமெரிக்க ஒழுங்குமுறை தரநிலைகள் எப்போதும் நம்முடையதை விட கடுமையானவை அல்ல.

சில சந்தர்ப்பங்களில், அவை பலவீனமானவை. சுயாதீன பாதுகாப்பு தரநிலைகளை அமைக்கும் நமது உரிமையை விட்டுக்கொடுப்பதன் மூலம், அமெரிக்க ஏற்றுமதியாளர்களை திருப்திப்படுத்த மலேசிய பொது சுகாதாரத்துடன் சூதாட வேண்டியுள்ளது.

இது நமது இறையாண்மை உரிமை, அதை நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது என்கின்றனர் முகைதீன் அப்துல் காதர் மற்றும் மீனாட்சி இராமன்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்மீனாட்சி இராமன்
தலைவர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.