பத்திரிகைச் செய்தி : 31.07.2025
நமது நாட்டில் இல்லாத நடுவர்களா?
சினிமா நடிகையை வைத்து தீர்ப்பு கொடுக்க முடியுமா?
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேள்வி!

மிக விரைவில் தனியார் தொலைக்காட்சி யில் அச்சமில்லை அச்சமில்லை என்ற நிகழ்ச்சியை வழி நடத்த ஒரு தமிழக சினிமா நடிகையை ஏற்பாடு செய்திருக்கும் அஸ்ட்ரோ தமிழ் பிரிவு அந்த முடிவை மாற்றிக்கொண்டு, அதற்கு பதிலாக மலேசியாவில் இருக்கும் நூற்றுக்கணக்கான மிகச் சிறந்தவர்களை தேர்வு செய்யும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
சினிமா நடிகை மூலம் நமது சமூக பிரச்சினைகளை தீர்க்க முடியாது. சமூக பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமானவர்களே இந்த சினிமா நடிகர் நடிகைகள்தான்.
இந்த நடிகைக்கே ஓராயிரம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கும் போது, நமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கமுடியுமா? தமிழகத்திலேயே பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாத சினிமா நடிகை, நமது நாட்டின் பிரச்சினைகளையா தீர்த்து வைக்க முடியும்.
அதுவும் தமிழ் நாட்டின் ஒரு பிரயோஜனமும் இல்லாத ஒரு நடிகையை கொண்டு வந்து விவாத நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன அச்சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் கேள்வி எழுப்பினார்.
நம் நாட்டின் அமைச்சின் கொள்கைகள், விதிகள், மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றை தெரியாத ஓய்வுபெற்ற ஒரு சினிமா நடிகையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
இதற்கு பின்னனிதான் என்ன என அவர் கேள்வி எழுப்பினார். நம் நாட்டிலேயே மிகவும் திறமையாக பேசக்கூடிய அல்லது விவாதங்களை வழி நடத்தக்கூடிய தேர்ச்சி பெற்ற தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் இருக்கும் போது, ஒரு சினிமா நடிகையை கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
ஆகவே வேறு ஒரு நாட்டின் நடிகையை அழைத்து நிகழ்ச்சியை நடத்துவதை விட்டு விட்டு, ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களின் பணத்தை விரயமாக்குவதை நிறுத்தி உள்நாட்டிலேயே ஒருவரை தேர்வு செய்யும்படி பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமா என்பதை பங்கேற்பார்கள் சீர் தூக்கி பார்க்கவேண்டும் என்றார் சுப்பாராவ்.
என்.வி.சுப்பாராவ்
கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

