Complaint Details Tamil

கூடுதல் விவரங்கள்

பிரச்சனை இருக்கிறதா? உதவ தயாராக இருக்கின்றோம்?

உற்பத்தி மற்றும் சேவைகள்

புகார் பற்றிய விவரங்கள்

பிரச்சனைகள்

தீர்வுகள்

உற்பத்தி மற்றும் சேவைகள்

Helpie FAQ

  • போலிப் பொருள்கள்

    பிரச்சனை 1
    நான் வாங்கிய உணவு போலியானது என்று நினைக்கிறேன். (எ.கா. போலி முட்டை, போலி அரிசி, போலி கடல்பாசி)

    தீர்வு
    எந்த உணவையும் போலி என்று முடிவு செய்வதற்கு முன்பதாக, அதனைச் சோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.  ஆகையால் நீங்கள் சந்தேகிக்கும் இந்த உணவைச் சோதனை செய்வதற்காகச் சுகாதார அமைச்சின் தரப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும். http://fsq.moh.gov.my/v6/xs/index.php அல்லது தனியார் ஆய்வுக் கூடத்திற்கும் அனுப்பலாம்.  

  • உத்தரவாத நீட்டிப்புக் காலம்

    பிரச்சனை 1
    மின்னியல் சாதனங்களை வாங்கும்பொழுது அதற்கான உத்தரவாத நீட்டிப்புக் காலத்தையும் சேர்த்து வாங்கினேன். (எ.கா. தொலைக்காட்சி, சலவை இயந்திரம், குளிர்பதனப்பெட்டி) உத்தரவாத நீட்டிப்புக் காலம் செல்லுபடியானாலும் கூட கடைக்காரர் பொருளை மாற்றிக் கொடுக்க மறுக்கிறார்.

    தீர்வு
    பொருள் உற்பத்திக்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் ஒரு கடை விதிக்கும் உத்தரவாத நீட்டிப்புக் காலத்திலிருந்து வேறுபடுகின்றன.  உத்தரவாத நீட்டிப்புக் கால ஒப்பந்தத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று முதலில் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  

  • மோட்டார் வாகன உத்தரவாதம்

    பிரச்சனை 1
    புதிய கார் ஒன்றை வாங்கினேன்.  இப்பொழுது அந்தக் கார் பழுதாகிவிட்டது. அதற்கான உத்தரவாதக் காலக்கட்டம் இன்னும் இருக்கின்றது.  ஆனால் கார் நிறுவனமோ உத்தரவாதம் செல்லாது என்கிறது.

    தீர்வு
    உங்களுடைய காருக்கான உத்தரவாதம் செல்லுபடியாகும் காலக் கட்டத்திலேயே அதனை நீங்கள் மூன்றாம் தரப்பு வாகனப் பட்டறைக்குக் கொண்டு சென்றிருந்தால், அல்லது அவர்கள் உங்களுக்குக் கொடுத்திருந்த கார் சேவைக்கான அட்டவணையைப் பின்பற்றாமல் இருந்திருந்தால், உங்கள் காருக்கான உத்தரவாதம் செல்லுபடியாகாது.  ஆகையால் இந்த விவகாரத்தில் உங்களுக்கும் வாகன நிறுவனத்திற்கும் உள்ள ஒப்பந்தத்தைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்.  வாகன நிறுவனத்தின் தலைமையகத்திற்கு ஒரு கடிதம் எழுதி மேல்முறையீடு செய்யலாம். அல்லது வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறலாம்.  அல்லது உத்தரவாதம் செல்லுபடியாகாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • வீட்டுமனை வசதி

    பிரச்சனை 1
    உங்கள் அடுக்குமாடி/ஆடம்பர அடுக்குமாடி நிர்வாகத்தின் (MC/JMB) மீது உங்களுக்கு கருத்து வேறுபாடு/அதிருப்தி.

    தீர்வு
    கட்டிட ஆணையரிடம் (COB) புகார் பதிவு செய்யவும். இது நகராண்மைக் கழகத்தில் உள்ள ஒரு பிரிவாகும்.  இவர்கள் அடுக்குமாடி சொத்து விவகாரங்களில் அதிகாரம் உள்ளவர்கள்.

    பிரச்சனை 2
    புதிய வீட்டுத் திட்டத்தின் கீழ் தரை/அடுக்குமாடி சொத்து வாங்கினேன். ஆனால் இப்பொழுது அதில் குறைகள் தென்படுகின்றன.

    தீர்வு
    மேம்பாட்டாளர் கட்டிடத்தில் உள்ள குறைகளுக்குப் பொறுப்பேற்றுச் சரி செய்யும் கால வரையறை என்று உண்டு. அதற்குள்ளாகவே கட்டிடத்தின் குறைகள் தென்படுமானால் (இதற்கு விற்பனை & வாங்குதல் ஒப்பந்தத்தைப் பார்க்கவும்) மேம்பாட்டாளர் அந்தக் கட்டிடத்தில் உள்ள குறைகளைச் சரி செய்ய வேண்டும்.  மேம்பாட்டாளர் குறைகளைச் சரி செய்ய மறுத்தால் கட்டிட உரிமையாளர், மேம்பாட்டாளர் மீது, வீடு மற்றும் அடுக்குவீடு தீர்ப்பு மன்றத்தில் (Tribunal Perumahan dan Pengurusan Strata) புகார் பதிவு செய்ய வேண்டும்.  https://www.kpkt.gov.my/index.php/pages/view/423

    பிரச்சனை 3
    நான் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் வசிக்கிறேன். என்னுடைய மேல்கூரையிலிருந்து தண்ணீர் கசிகிறது.  

    தீர்வு
    உங்கள் மேற்கூரையில் நீர் கசிகிறது என்றால் அதனைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு மேல் மாடியில் வசிப்பவருக்குத்தான் என்று அடுக்குமாடி நிர்வாக சட்டம் 2013 கூறுகிறது. நீங்கள் வசிப்பது ஆக உயரமான மாடியாக இருந்து அதற்கு மேல் எந்த மாடியும் இல்லாவிடில், அந்தப் பழுதினைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு நிர்வாகத்தினுடையது.  ஆனாலும் தண்ணீர்க் கசிவுப் பிரச்சனையைத் தீர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. உங்கள் வீட்டு மேல் மாடியில் வசிப்பவரை நேருக்கு நேர் சந்தித்து அவர்தான் பழுது பார்க்க வேண்டும் என்று முரண்டு பிடிக்காதீர்கள்.  முதலில் நீர் கசிவதைக் கட்டிட நிர்வாகத்திடம் அறிவியுங்கள்.  அவர்கள் நீர் ஒழுகுவதற்கான காரணத்தைக் கண்டறிந்த பிறகு யார் அதனைப் பழுது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்வர்.  நிர்வாகம் இந்தப் பிரச்சனையைக் கையாளும் விதத்தில் உங்களுக்குத் திருப்தி இல்லையென்றால் தெளிவான புகாரைக் கட்டிட ஆணையருக்கு (நகராண்மைக் கழகத்தில் உள்ள பிரிவு) அளியுங்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

    பிரச்சனை 4
    சொத்து உரிமையாளர் இறந்துவிட்டார்.  அவர் சொத்து வாங்கும்பொழுது அடமானக் குறைப்புக் கால உத்தரவாதம் (MRTA) வாங்கியுள்ளார். அப்படியானால் ஏன் அவர் இறந்த பிறகும் அவர் குடும்பம் வீட்டுக் கடனைச் செலுத்தி வருகிறது?

    தீர்வு
    காப்புறுதி நிறுவனம் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை அந்தக் குடும்பம் வீட்டுக் கடனைச் செலுத்தி வர வேண்டும்.  காப்புறுதி நிறுவனத்தின் ஏற்பு அறிவிப்பு வந்த பிறகு, அந்தக் குடும்பம் வீட்டுக்குச் செலுத்திய கூடுதல் தொகையை வங்கி திரும்பக் கொடுக்கும்.

    பிரச்சனை 5
    வீடு மற்றும் அடுக்குவீடு நிர்வாக தீர்ப்பு மன்றம் (Tribunal Perumahan dan Pengurusan Strata), இன்னும் குறை பொறுப்பேற்கும் காலக்கட்டத்தில் உள்ள என்னுடைய வீட்டைப் பழுது பார்க்குமாறு மேம்பாட்டாளருக்கு ஆணையிட்டது.  ஆனால் மேம்பாட்டாளரின் பழுது பார்க்கும் வேலைகள் மிகவும் மோசமாக இருந்ததால் வீட்டில் உள்ள குறைகள் தீர்ந்தபாடில்லை.  

    தீர்வு
    இந்தப் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மறுபடியும் வீடு மற்றும் அடுக்குவீடு நிர்வாக தீர்ப்பு மன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள்.

  • விலை நிர்ணயம்

    பிரச்சனை 1
    பொருள்களின்/உணவின் விலை அளவுக்கு அதிகமாக உள்ளது – “சந்தை விலையை” விட அதிகமாக உள்ளது.

    தீர்வு
    “சந்தை விலை” என்று ஒன்று கிடையாது.  கட்டுப்பாட்டுப் பொருள்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலைதான் உண்டு. அப்படிக்  கட்டுப்பாட்டுப் பொருள்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்பட்டால் அதனை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சிடம் புகார் செய்யலாம்.

    அது கட்டுப்பாட்டு விலைப் பட்டியலில் சேராத பொருள் என்றால், விற்பனையாளர் அவர் முடிவு செய்த விலையில் பொருள்களை விற்கலாம். ஆனால் பொருளுக்குத் தெளிவான விலைப்பட்டியல் இருக்க வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட கடையின் பொருள்களை வாங்கலாமா இல்லையா என்று ஒரு பயனீட்டாளர் முடிவு செய்து கொள்ள இயலும்.  பொருளில் விலைப்பட்டியல் இல்லை என்றால் அதனை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும் (eaduan.kpdnhep.gov.my.)

     

  • கோளாறான பொருள்கள்

    பிரச்சனை 1
    நிறைய கோளாறுகளைக் கொண்ட பொருள்களை வாங்கியுள்ளேன்/பொருளை நிறுவனம் பல முறை பழுது பார்த்தும் பிரச்னை தீரவில்லை.

    தீர்வு
    ஒரு பொருளில் கோளாறுகள் இருக்கும்பொழுது அந்தப் பொருளை பழுது பார்த்துத் தருவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று மலேசியாவின் பயனீட்டாளர் சட்டம் கூறுகிறது.  பொருள் விற்பனையாளர்/உற்பத்தியாளர் அதனைப் பழுது பார்த்தும் பொருளின் குறை தீரவில்லை என்றால் மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் கோரிக்கை விடுக்கலாம். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.

    பிரச்சனை 2
    என்னுடைய மோட்டார் சைக்கிளைப் பழுது பார்க்கப் பட்டறைக்கு அனுப்பினேன்.  ஆனால் பிரச்னை தீரவில்லை/இன்னும் மோசமாகிவிட்டது.  பழுது பார்ப்பவர் என்னுடைய புகாருக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்.

    தீர்வு
    உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சில் (KPDNHEP) புகார் செய்யவும். அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். eaduan.kpdnhep.gov.my.

    பிரச்சனை 3
    ஒரு நிறுவனத்திடமிருந்து புதிய கார் வாங்கினேன்.  ஆனால் அந்தக் கார் ஆரம்பத்திலிருந்தே எனக்குப் பிரச்னை கொடுத்து வருகிறது.
     
    தீர்வு
    காருக்கு இழப்பீடு கோர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், காரின் விலை மவெ. 50,000 அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்புமன்றத்தில் அவ்வாறு கோரலாம். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.  ஆனால் காரின் விலை அதைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஒரு வழக்கறிஞர் மூலமாக சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.

  • காலாவதி திகதி

    பிரச்சனை 1
    பொட்டலமிடப்பட்ட உணவை பேரங்காடியில் வாங்கினேன். அதன் தேதி பிரகாரம் அது காலாவதியாகாமல் இருந்தும் கூட உணவு கெட்டுப் போய் இருந்தது.
     
    தீர்வு
    மலேசிய பயனீட்டாளர் சட்டத்தின்படி கெட்டுப்போன இந்த உணவுக்கு உங்களுக்கு இழப்பீடு அல்லது மாற்று உணவு கொடுக்க வேண்டும்.  உணவு நிறுவனத்தின் தொடர்பு எண்ணை அதன் அடையாள முத்திரை மூலம் அல்லது இணையம் மூலம் கண்டெடுத்து நிறுவனத்திடம் புகார் செய்ய வேண்டும்.  இழப்பீடு அல்லது மாற்று உணவுப் பொருளை அவர்கள் கொடுக்க மறுத்தால்  நீங்கள் மலேசியப் பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் புகார் கொடுக்க வேண்டும். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.

  • முன்தொகை / பணத்தை திரும்பப் பெறுதல்

    பிரச்சனை 1
    ஒரு விமான நிறுவனத்திடம் பயணச் சீட்டு வாங்கினேன்.  ஆனால் விமானப் பயணத்தை நிறுவனம் ரத்து செய்துவிட்டது.

    தீர்வு
    விமான நிறுவனம் ரொக்கமாகவோ அல்லது விமானக் கணக்கு மூலமாகவோ (இதற்கு காலாவதியாகும் தேதி உண்டு) இழப்பீடு கொடுக்க வேண்டும்.  விமான நிறுவனம் இழப்பீடு கொடுக்க மறுத்தால் அதனை மலேசிய விமான ஆணையத்திடம் புகார் செய்ய வேண்டும். https://www.mavcom.my/en/consumer/make-a-complaint

    பிரச்சனை 2
    வெளிநாட்டு/உள்நாட்டு சுற்றுலாவுக்காக ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் பணம் செலுத்தியிருந்தேன். ஆனால் அந்தச் சுற்றுலாத் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது/பல முறை தள்ளிப்போடப்பட்டுவிட்டது.  நிறுவனம் பணத்தைத் திருப்பித் தர மறுக்கிறது.  

    தீர்வு
    மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் உங்கள் கோரிக்கையைப் பதிவு செய்யுங்கள். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.

    பிரச்சனை 3
    என்னுடைய தாத்தா பாட்டி/பெற்றோர் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தனர்.  இப்பொழுது அவர்கள் அங்கு தங்கி இல்லை. முதியோர் இல்லம் எங்கள் முன்பணத்தைத் திருப்பித்தர மறுக்கிறது.    
    தீர்வு
    முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தவர்களுக்கு நீங்கள் இது வரை செலுத்தாத மாதத் தொகை மற்றும் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர்கள் ஏற்படுத்திய சேதங்களைச் சரி கட்டுவதற்கான தொகையாக, இந்த முன்பணத்தை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்.  இது எதுவும் இல்லை என்றால் முதியோர் இல்லம் உங்கள் முன் பணத்தைத் திரும்பக் கொடுத்திருக்கும். அப்படிக் கொடுக்காவிடில் பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் உங்கள் கோரிக்கையைப் பதிவு செய்யுங்கள்.  https://ttpm.kpdnhep.gov.my/portal/home

    பிரச்சனை 4
    குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிகிச்சை பெற வேண்டிய முக ஒப்பனை சிகிச்சை ஒன்றுக்குப் பணம் செலுத்தியிருந்தேன்.  ஒரு தடவை சிகிச்சைக்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது அந்த சிகிச்சை எனக்குப் பொருத்தமானதல்ல என்று.  அதனால் என்னுடைய பணத்தைத் திரும்பப் பெற நினைக்கிறேன்.

    தீர்வு
    உங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக சிகிச்சை உங்களுக்குப் பொருத்தமானது அல்ல அல்லது உங்கள் முகத்தை அது சேதப்படுத்திவிட்டது என்று நீங்கள் நினைத்தால், மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் புகார் பதிவு செய்யலாம். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.  ஆனால் நீங்கள் செலுத்திய தொகையை விட அதிகமான இழப்பீட்டினைப் பெற விரும்பினால் நீங்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்து அந்த முக ஒப்பனை சிகிச்சை மையத்தின் மீது வழக்கு தொடரலாம்.

    பிரச்சனை 5
    என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள, குறிப்பிட்ட தடவை சென்று சிகிச்சை பெற வேண்டிய முக ஒப்பனை சிகிச்சை ஒன்றுக்காகப் பணம் செலுத்தியிருந்தேன்.   ஆனால் அந்த சிகிச்சை மையம் மூடப்பட்டுவிட்டது.  என்னுடைய வீட்டிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் அதன் கிளை மையத்திற்கு என்னை வரச் சொல்கிறார்கள். என்னால் அங்கு செல்ல முடியாது.  நான் இதுவரைக்கும் செல்லாத முக சிகிச்சைக்கான பணத்தைத் திரும்பப் பெற நினைக்கிறேன். ஆனால் அந்த சிகிச்சை மையம் கொடுக்க மறுக்கிறது.  

    தீர்வு
    மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் நீங்கள் புகார் பதிவு செய்யலாம். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.  

    பிரச்சனை 6
    ஒரு புதிய வீட்டுத்தளவாடத்திற்குப் பணம் செலுத்தியிருந்தேன்.  பிறகுதான் அது என்னுடைய வீட்டு அறைக்குப் பொருந்தாமல் பெரிதாக இருப்பதை உணர்ந்தேன்.  சம்பந்தப்பட்ட கடையைத் தொடர்புகொண்டு எனக்கு அந்தத் தளவாடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.  ஆனால் என்னுடைய பணத்தைத் திரும்பக் கொடுக்க மறுக்கிறார்கள்.

    தீர்வு
    மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் நீங்கள் புகார் பதிவு செய்யலாம். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.  

  • தவறான பொருள் / பொய்யான விளம்பரம்

    பிரச்சனை 1
    ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கினேன்.  ஆனால் அவர்கள் வாக்களித்தவாறு/விளம்பரப்படுத்தியவாறு எனக்கு அந்தப் பொருளைக் கொடுக்கவில்லை.

    தீர்வு
    மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்புமன்றத்தில் நீங்கள் புகார் பதிவு செய்யலாம். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.  

     

  • வாடகை (வாடகையாளர்)

    பிரச்சனை 1
    வாடகைக்குக் குடியிருப்பவர் வீட்டை விட்டு வெளியேறியும் வீட்டு உரிமையாளர் வீட்டுக்கான முன்பணத்தைக் கொடுக்கவில்லை.

    தீர்வு
    மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் புகார் பதிவு செய்ய வாடகைக்கு இருந்தவருக்கு உரிமை உண்டு. https://ttpm.kpdnhep.gov.my/portal/home.

  • வாடகை (வீட்டு உரிமையாளர்)

    பிரச்சனை 1
    வாடகைக்கு இருப்பவர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாதங்களுக்கு வாடகை செலுத்தவில்லை.  வீட்டைக் காலி செய்யவும் மறுக்கிறார்.

    தீர்வு
    வாடகைக்கு இருப்பவரை வீட்டை விட்டு வெளியேற்ற நீதிமன்ற உத்தரவினைப் பெறவும்.

    பிரச்சனை 2
    வாடகைக்கு இருப்பவர் வீட்டிலிருந்து வெளியேற மறுத்தால் வீட்டுக்கான பூட்டை மாற்றி  நீர், மின்சார விநியோகத்தைத் துண்டித்து விடலாமா?  

    தீர்வு
    வீட்டுக்கான பூட்டை மாற்றி அதற்கான நீர் மற்றும் மின்சார விநியோகத்தைத் துண்டிப்பது சட்ட விரோதமான ஒரு செயலாகும்.

    பிரச்சனை 3

    வாடகைக்கு இருப்பவர் வேண்டுமென்றே வீட்டைச் சேதப்படுத்தினார்.

    தீர்வு
    உங்கள் வீட்டை வாடகைக்கு இருப்பவர் வேண்டுமென்றே சேதப்படுத்தினார் என்பதற்குத் தக்க ஆதாரங்கள் இருக்குமானால் அவரின் மீது வழக்கு தொடரலாம்.  (கால ஓட்டத்தில் வீட்டில் ஏற்படும் தேய்மானம் மற்றும் சேதங்களுக்கு வழக்குத் தொடர முடியாது.)

  • தொலைத்தொடர்பு சேவைகள்

    பிரச்சனை 1
    என்னுடைய இணையச் சேவை மிகவும் மோசமாக உள்ளது.  அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது/அடிக்கடி சேவை கிடைக்காமல் போகிறது.

    தீர்வு
    இந்தப் பிரச்னை தொடர்பாக மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டும்.  https://aduan.skmm.gov.my

    பிரச்சனை 2
    என்னுடைய கைப்பேசியிலுள்ள, எனக்குத் தேவையில்லாத அலறலோசை (ringtones) மற்றும் ஒப்பனைத் தாளுக்கு (wallpapers) தெல்கோ கட்டணம் விதிக்கிறது.
     
    தீர்வு
    மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டும்.  https://aduan.skmm.gov.my

  • நிரந்தர செயலிழப்பு கோரிக்கை

    பிரச்சனை 1
    தனிநபர் இயலாமை கோரிக்கைக்கான மனுவை பெர்கேசோ ஏற்றுக்கொள்ளும்பொழுது, காப்புறுதி நிறுவனம் மட்டும் தனிநபர் விபத்துக் காப்புறுதியின் கீழ் செய்யப்பட்ட அந்தக் கோரிக்கையை நிராகரிப்பது ஏன்?

    தீர்வு
    ஒரு நபர் நிரந்தர செயலிழப்புக்கு உள்ளாகியுள்ளார் என்று பெர்கோசோ முத்திரை குத்துவதற்கும் தனிநபர் விபத்து காப்புறுதி ஒப்பந்தத்திற்கும் வேறுபாடு உள்ளது. இதனால்தான் சொக்சோ கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நனிநபர் விபத்து கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.  நீங்கள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பியுங்கள்.  இரண்டாவது முறையும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுமானால், நிதி சேவைகளுக்கான குறைதீர்ப்பு ஆணையத்திடம் (Ombudsman for Financial Services (OFS) நீங்கள் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.  பிரச்சனை அவர்களுடைய அதிகார வரம்பினுள் வரும் வரை அதனை அவர்கள் தீர்த்து வைக்க முயற்சி செய்வார்கள்.  

  • காப்புறுதி

    பிரச்சனை 1
    சாலை விபத்து ஏற்பட்டது.  தவறு எதிர் தரப்பின் மீதே. ஆனால் எதிர்தரப்பிற்கு வாகனக் காப்புறுதி கிடையாது. அதனால் நான் என்னுடைய சொந்த வாகனக் காப்புறுதியிலிருந்து இழப்பீடு கோர வேண்டியிருந்தது.  

    தீர்வு
    சேதத்திற்கு நீங்கள் உங்கள் சொந்த வாகனக் காப்புறுதியின் கீழ் கோரும் நிலை உருவாகுமானால், உங்களுடைய கோரப்படாத தொகைக்கான நன்மையை (NCB) இழக்க நேரிடும்.  ஆனால் விபத்துக்குக் காரணம் எதிர்தரப்புதான் என்பதை நீங்கள் காவல்துறை புகாருடன் நிரூபித்தால் உங்களுடைய கோரப்படாத தொகை சலுகை மீளமர்த்தப்படலாம்.

  • சட்ட விரோத வாணிபம்/கடை

    பிரச்சனை 1
    எங்களுடைய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோத வாணிபம்/கடை இயங்குகிறது.

    தீர்வு
    உங்கள் குடியிருப்பில் சட்டவிரோத வாணிபம்/கடை இயங்குகிறது என்றால் நீங்கள் நகராண்மைக் கழகத்தில் புகார் அளிக்க வேண்டும்.

  • அரசாங்க சேவைகள்

    பிரச்சனை 1
    ஒரு பிரச்னை தொடர்பாக அரசாங்கத் தொண்டு நிறுவனத்திடம் புகார் கொடுத்திருந்தேன்.  ஆனால் அரசாங்கத் தொண்டு நிறுவனம்/அரசாங்க அதிகாரி அந்தப் புகார்/பிரச்சனையைக் கையாண்ட விதத்தில் எனக்கு மகிழ்ச்சி/திருப்தி இல்லை.
       
    தீர்வு
    பொதுப் புகார் பிரிவில் புகார் பதிவு செய்யுங்கள்.  உங்கள் புகாரை இணையத்தளம் மூலமாகவும் பதிவு செய்யலாம். http://www.pcb.gov.my/en. மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கிளைகள் உள்ளன.

  • விரைவுத் தபால் சேவை

    பிரச்சனை 1
    விரைவுத் தபால் சேவை/இடப்பெயர்வு நிறுவனம் என்னுடைய பொட்டலம்/உருப்படியைக் காணடித்துவிட்டது.

    தீர்வு
    விரைவுத் தபால் சேவை/இடப்பெயர்வு நிறுவனம் காணாமல் போன பொருளுக்கு உங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  கொடுக்கப்பட்ட இழப்பீட்டில் உங்களுக்குத் திருப்தி இல்லையென்றால்/நிறுவனம் உங்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை என்றால் நீங்கள் மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தில் புகார் அளிக்கலாம். https://aduan.skmm.gov.my/
    நீங்கள் இழப்பீடு பெற நினைத்தால், மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் வழக்குத் தொடரலாம்.  https://ttpm.kpdnhep.gov.my/portal/home.

    பிரச்சனை 2
    விரைவுத் தபால் சேவை/இடப்பெயர்வு நிறுவனம் என்னுடைய பொட்டலம்/உருப்படியை பாதுகாப்பாகக் கையாளவில்லை. அதனால் அது சேதமடைந்துள்ளது.  

    தீர்வு
    மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தில் இது தொடர்பாகப் புகார் அளியுங்கள்.  https://aduan.skmm.gov.my ஏனெனில் இந்த விஷயத்தில் அதிகாரம் பெற்றவர்கள் இவர்கள்தாம்.  இழப்பீடு கோர விரும்பினால் மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாம். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.

  • வாடிக்கையாளர் சேவை

    பிரச்சனை 1
    கடைக்காரர்/கடை பணியாள் மரியாதையற்ற முறையில் நடந்துகொண்டார்.  

    தீர்வு
    துரதிருஷ்டவசமாக, வாடிக்கையாளர் சேவை மலேசிய பயனீட்டாளர் சட்டத்தில் இடம் பெறவில்லை. கடைக்காரர் நடந்துகொள்ளும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தக் கடைக்கு மறுபடியும் போக வேண்டாம்.

  • மோசடி

    பிரச்சனை 1
    சமூக ஊடகங்களில் (எ.கா. முகநூல்) விளம்பரம் செய்யப்பட்டிருந்த குறிப்பிட்ட கடன் தொகைக்கு விண்ணப்பித்திருந்தேன். இதுவரைக்கும் அவர்களிடமிருந்து எந்த வித கடன் தொகையும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனம் கடன் தருவதாக வாக்களித்து விட்டு என்னிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்துவிட்டது.

    தீர்வு
    இது பெரும்பாலும் ஒரு மோசடியே.  மறுபடியும் அந்த நிறுவனத்திற்குப் பணம் தந்துவிடாதீர்கள்.  உடனே காவல்துறைக்குப் புகார் அளிக்கவும்.  அவர்கள் சோதனை நடவடிக்கையில் இறங்குவர்.  உங்கள் புகாரில் படங்கள், பத்திரங்கள், தகவல்கள் போன்ற ஆதாரங்களை இணைக்கவும்.  

    பிரச்சனை 2
    என்னுடைய காரை விற்க நினைத்தேன். ஒரு கார் விற்பனையாளரை அணுகி எல்லாவற்றையும் அவரிடம் கொடுத்தேன்.  சில காலத்திற்குப் பிறகு திடீரென கார் கட்டண நிலுவைக்காக வங்கி என்னைத் தேடி வந்தது.
     
    தீர்வு
    தவணை முறை ஒப்பந்தத்தில் ஒரு கார் வாங்கப்படும்பொழுது, அந்தக் காரை விற்பனை செய்வதற்கு முறையான விதிகள் உண்டு.  முதலில் காரை விற்க முடிவு செய்துள்ளதை வங்கிக்கு அறிவிக்க வேண்டும். பிறகு காரை, சாலை போக்குவரத்து இலாகாவில் (JPJ) கார் விற்பனையாளர் பெயருக்கு மாற்ற வேண்டும்.  நீங்கள் இவ்வாறு செய்யாத பட்சத்தில் காரும் அதற்கான கடனும் உங்கள் பெயரிலேயே இருக்கும்.  கார் விற்பனையாளர் கடனைச் செலுத்தாமல் விட்டிருந்தால் வங்கி உங்களைத்தான் தேடி வரும். இந்தப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் கார் விற்பனையாளரைத்தான் தேடிப் போக வேண்டும்.

  • விலை தகராறு

    பிரச்சனை 1
    தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டேன்.  சிகிச்சை முடிந்து வெளியேறும்பொழுது அளவுக்கு அதிகமான கட்டணம் விதித்துவிட்டார்கள் என்று தெரிந்தது.

    தீர்வு
    தனியார் நிறுவனக் கட்டணங்கள், தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவை விதிமுறைகளின் அட்டவணை 13-ன் கீழ் வருகிறது. இதில் ஆலோசனை/ செயல்முறை/சிகிச்சை ஆகியவற்றுக்கான அதிகபட்ச கட்டணத்தைக் குறிப்பிட்டிருப்பர்.  ஆகையால் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள் என்று நினைத்தால் சுகாதார அமைச்சிடம் புகார் பதிவு செய்யலாம். https://moh.spab.gov.my/eApps/system/index.do.

    பிரச்சனை 2
    எனக்கு அளவுக்கு அதிகமான தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

    தீர்வு
    சம்பந்தப்பட்ட சேவையை வழங்கும் நிறுவனத்திற்கு புகார் அளித்தால் அவர்கள் ஆராய்ந்து என்ன பிரச்னை என்று கண்டறிவார்கள். (உதா: மீட்டர் சரியாக வேலை செய்கிறதா, எங்கேயாவது கசிவு உள்ளதா, இன்னும் பல)

  • பணிப்பெண் சேவை நிறுவனம்

    • பிரச்சனை 1
      பணிப்பெண் சேவை நிறுவனத்தின் மூலமாக ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தினேன். பணிப்பெண் வேலையை சரியாகச் செய்யவில்லை/ ஓடிவிட்டாள்.

      தீர்வு
      பணிப்பெண் நிறுவனத்திற்கு எதிராக நீங்கள் மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் கோரிக்கை பதிவு செய்யலாம். https://ttpm.kpdnhep.gov.my/portal/home

  •  இணையம் மூலம் பொருள் வாங்குதல்

    பிரச்சனை 1
    சமூகப் பல்லூடகத்தின் மூலம் (முகநூல், புலனம்) ஒரு பொருள் வாங்கினேன்.  ஆனால் பொருள் எனக்கு வந்து சேரவே இல்லை. விற்பனையாளரும் காணாமல் போய்விட்டார்.

    தீர்வு
    விற்பனையாளர் மாயமாகியிருந்தால் அது பெரும்பாலும் ஒரு மோசடியாகத்தான் இருக்கும்.  இதனைச் சமூக பல்லூடகம் (எ.கா. முகநூல், புலனம்); மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் https://aduan.skmm.gov.my; மற்றும் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு eaduan.kpdnhep.gov.my. ஆகியவற்றிடம் புகார் செய்யுங்கள்.

    பிரச்சனை 2
    இணையத்தளத்தின் மூலம் (எ.கா. லசாடா, ஷோப்பி) ஒரு பொருள் வாங்கினேன்.  வந்து சேர வேண்டிய நாள் பல கடந்தும் பொருள் என் கைக்கு எட்டவில்லை.  

    தீர்வு
    பொருள் விற்பனையாளரைத் தொடர்பு கொண்டு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளுங்கள்.  அப்படி பொருள் விற்பனையாளரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் நம்பரகமான ஆட்கள் இல்லையென்று என்று உங்களுக்குத் தோன்றினால் இணையப் பொருள் வாங்கும் தளத்தில் புகார் செய்து இழப்பீடு கோருங்கள்.  அந்த இணையத்தளம் உங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் நீங்கள் அந்த விற்பனையாளருக்கு எதிராக மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் கோரிக்கை பதிவு செய்யலாம்.  https://ttpm.kpdnhep.gov.my/portal/home

  • சேவை கிடைக்கப் பெறாமல் இருத்தல்

    பிரச்சனை 1
    என்னுடைய வீட்டின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஒரு குத்தகையாளரை நியமித்தேன்.   நான் குத்தகையாளருக்கு முழுத் தொகையையும்/பெரும்பாலான தொகையைச் செலுத்தி விட்டேன்.  ஆனால் குத்தகையாளரின் வேலை மிகவும் மோசமாக உள்ளது/வேலையை முடிக்க மறுக்கிறார்.  

    தீர்வு
    சீரமைப்பு வேலைகளுக்கான செலவு மவெ. 50,000-க்குக் கீழ் இருக்கும் பட்சத்தல் நீங்கள் இழப்பீடு கோர நினைக்கும் தொகையும் மவெ. 50,000-க்குக் கீழ்தான் இருக்கும்.  ஆகவே மலேசிய பயனீட்டாளர் கோரிக்கை தீர்ப்பு மன்றத்தில் கோரிக்கை பதிவு செய்யலாம். https://ttpm.kpdnhep.gov.my/portal/home.  ஆனால் நீங்கள் கோர விரும்பும் தொகை மவெ. 50,000-க்கு மேல் இருக்குமானால் நீங்கள் ஒரு வழக்கறிஞர் மூலமாகக் குத்தகையாளர் மீது வழக்கு தொடுக்கலாம்.

  • எங்களை தொடர்பு கொள்ள

    பதில் கிடைக்கும் நேரம் - காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
    வேலை நாட்கள் - திங்கள் முதல் வெள்ளி வரை
    பொது விடுமுறை நாட்களை விலக்கு