
நெகிழிப் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் காலாவதி தேதி இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? தூய்மையான நீர் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. பிறகு ஏன் அதற்கு ஒரு காலாவதி காலம்? அதன் பின்னணியில் உள்ள உண்மைகள் இதோ:
குடிநீர் பாட்டில்களில் உள்ள காலாவதி தேதி என்பது முக்கியமாக அந்த நெகிழிப் பாட்டிலைப் பற்றியதே தவிர, உள்ளே இருக்கும் நீரைப் பற்றியது அல்ல. காலம் செல்லச் செல்ல, நெகிழி மெதுவாகச் சிதைவடைந்து, நுண் வேதிப்பொருட்கள் தண்ணீரில் கசியத் தொடங்கும். குறிப்பாக, பாட்டில்கள் நேரடிச் சூரிய ஒளியிலோ அல்லது அதிக வெப்பத்திலோ வைக்கப்படும்போது இந்த வேதிவினைகள் துரிதமடைகின்றன.
தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெகிழி, ஆன்டிமனி (antimony), பிஸ்பெனால்ஸ் (bisphenols), பிதாலேட்ஸ் (phthalates) போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களையும், நுண் நெகிழிகளையும் (microplastics) தண்ணீரில் வெளியிடுகின்றன. இது ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். மேலும், இது தண்ணீரின் சுவை, மணம் மற்றும் அதன் தூய்மையைப் பாதிக்கிறது.
பெரும்பாலான ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்கள் PET (Polyethylene Terephthalate) எனும் நெகிழியால் ஆனவை. இது மற்ற நெகிழி வகைகளை விட “பாதுகாப்பானது” என்று வகைப்படுத்தப்பட்டாலும், இதுவும் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய நெகிழித் துகள்களை (Micro & Nano plastics) தண்ணீரில் உதிர்த்துக்கொண்டே இருக்கிறது.
ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக 2,40,000 நெகிழித் துகள்கள் மிதப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. நெகிழிப் பாட்டில் நீரைத் தொடர்ந்து குடிப்பவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் ஆண்டுக்கு சராசரியாக 90,000 நுண் நெகிழித் துகள்களை கூடுதலாகத் தங்கள் உடலுக்குள் செலுத்துகின்றனர்.
உடலுக்குள் செல்லும் இந்த நுண் நெகிழிகள் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளில் படிகின்றன. 91 நபர்களிடம் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில், மற்ற உறுப்புகளை விட மூளையில் 20 மடங்கு அதிகமான நெகிழித் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, ‘அல்சைமர்’ (மறதி நோய்) பாதிப்பால் இறந்தவர்களின் மூளையில் நெகிழித் துகள்களின் அடர்த்தி மிக அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை குடல் சுவர்களைத் தாண்டி இரத்தத்தில் கலந்து, நாள்பட்ட அழற்சி (Inflammation) மற்றும் குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையைச் சீர்குலைப்பதோடு, நச்சுப் பொருட்களைத் தாங்கிச் செல்லும் ஊடகமாகவும் செயல்படுகின்றன. தற்காலிக வசதியை விட நிரந்தர ஆரோக்கியமே மேலானது. நெகிழிப் பாட்டில்களைத் தவிர்த்து, துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) அல்லது கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்பட்ட தண்ணீரையே பருகுங்கள். ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி ஒரு படி முன்னெடுத்து வைப்போம்!
நன்றி : Easy Eco Tips
