பாம்புகளை மதிப்போம்-பாதுகாப்போம்: இயற்கையின் அமைதியான காவலர்கள்!

பத்திரிகைச் செய்தி: 16-07-2026

உலக பாம்பு தினமான ஜூலை 16-ஐ முன்னிட்டு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP), பாம்புகளைப் பற்றிய தவறான நம்பிக்கைகளை மாற்றி, இயற்கையில் அவை வகிக்கும் முக்கியமான பங்கை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென மலேசியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள் “அச்சப்படாதீர்கள் – மதியுங்கள்: இயற்கையின் அமைதியான காவலர்களைப் பாதுகாப்போம்” என்பதாகும். இந்தக் கருப்பொருள், பாம்புகளைப் பார்த்தவுடன் பயந்து கொல்லாமல், அவற்றைப் பற்றி சரியாக அறிந்து, இயற்கையின் ஒரு முக்கிய உயிரினமாக மதிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

பலருக்கு பாம்புகளைப் பார்த்தாலே பயம் ஏற்படுகிறது. ஆனால் அந்தப் பயம் பெரும்பாலும் தவறான தகவல்களாலும், பழைய நம்பிக்கைகளாலும் உருவாகியுள்ளது. உண்மையில், பெரும்பாலான பாம்புகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல. அவை மனிதர்களைத் தேடி வந்து தாக்குவதில்லை. மனிதர்களைத் தவிர்த்தே வாழ விரும்புகின்றன. பாம்புகள் அச்சுறுத்தப்படும்போது, பிடிக்க முயற்சிக்கும்போது அல்லது தவறுதலாக மிதிக்கப்படும்போதுதான் பெரும்பாலும் கடிக்கின்றன.

உலகில் உள்ள பாம்பு இனங்களில் மிகச் சில மட்டுமே விஷப்பாம்புகள். அவற்றில் இன்னும் குறைவான இனங்களே மனிதர்களுக்கு உயிருக்கு ஆபத்தானவை.

பாம்புகள் இயற்கைக்கு மிகவும் பயனுள்ள உயிரினங்கள். அவை எலிகள் மற்றும் சிறிய விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. எலிகள் விவசாயப் பயிர்களை அழிக்கின்றன, உணவுப் பொருட்களை மாசுபடுத்துகின்றன, மேலும் பல நோய்களையும் பரப்புகின்றன. பாம்புகள் எலிகளை வேட்டையாடுவதன் மூலம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய உதவியாக இருக்கின்றன.

இதனால் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடும் குறைகிறது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

நிலத்தடியில் வாழும் சில பாம்புகள், மண்ணுக்குள் வாழும் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாசனக் கால்வாய்கள் மற்றும் மண்ணின் அமைப்பைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

பாம்புகள் மனித ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றன. அவற்றின் நஞ்சுலிருந்து தயாரிக்கப்படும் நஞ்சு முறிவு எதிர்ப்பு மருந்துகள் (Antivenom), பாம்புக்கடி ஏற்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுகின்றன. மேலும், பாம்பின் நஞ்சில் உள்ள சில வேதிப்பொருட்கள் இதய நோய்கள், பக்கவாதம் போன்றவற்றுக்கான மருந்துகளை உருவாக்கவும் உதவியுள்ளன. புற்றுநோய்க்கான புதிய மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இன்று பாம்புகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. காடுகள் அழிக்கப்படுவது, நகரமயமாக்கல், சாலை அமைப்புகள், சட்டவிரோத வனவிலங்கு விற்பனை மற்றும் மனிதர்களின் பயம் ஆகியவை அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. சாலைகளைக் கடக்கும் போது பல பாம்புகள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. காலநிலை மாற்றமும் அவற்றின் வாழ்வை பாதிக்கிறது.

பாம்புகளின் எண்ணிக்கை குறைந்தால், எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் விவசாயப் பயிர்களுக்கு அதிக சேதம் ஏற்படும். நோய்கள் பரவும் அபாயமும் உயரும். இது முழு இயற்கைச் சமநிலையையும் பாதிக்கும்.

எனவே, பாம்புகளைப் பாதுகாப்பது என்பது ஒரு உயிரினத்தை மட்டுமே காப்பதல்ல. அது நமது சுற்றுச்சூழல், விவசாயம், மனித ஆரோக்கியம் மற்றும் உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதாகும்.

இந்த உலக பாம்பு தினத்தில், பயத்திற்கு பதிலாக அறிவை வளர்ப்போம். வெறுப்பிற்கு பதிலாக மரியாதையைக் காட்டுவோம். பாம்புகளைப் பார்த்தால் அவற்றைக் கொல்வதைத் தவிர்ப்போம். அவை இயற்கையில் தங்களுக்கான பணியை அமைதியாகச் செய்து வருகின்றன. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, அவற்றையும் வாழ விடுவோம்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்