அரசு நிக்கோட்டினை மீண்டும் விஷச்சட்டம் 1952-இன் கீழ் சேர்க்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது!

2023ஆம் ஆண்டு திரவ மற்றும் ஜெல் வடிவ நிக்கோட்டினை விஷப்பட்டியலிலிருந்து நீக்கிய அரசின் முடிவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, நிக்கோட்டினை மீண்டும் விஷச்சட்டம் 1952-இன் கீழ் உடனடியாக சேர்க்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) வலியுறுத்தியுள்ளது.

“உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பொது சுகாதாரத்திற்கான ஒரு முக்கிய வெற்றியாகும்,” என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் புகைபிடித்தல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

Photo: Thank You NST

“நிக்கோட்டினை விஷப்பட்டியலிலிருந்து நீக்கியது மிகவும் பொறுப்பற்ற நடவடிக்கையாகும். இது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அப்போது சுகாதார அமைச்சராக இருந்தவர் இந்த நடவடிக்கைக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

விஷ வாரியத்துடன் முறையான ஆலோசனை நடத்தாமல், நியாயமற்ற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிக்கோட்டினை விஷப்பட்டியலிலிருந்து நீக்கிய முடிவு பொது சுகாதார பாதுகாப்பை பலவீனப்படுத்தியுள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஏற்ப அதை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

“நிக்கோட்டின் பொருட்களை கட்டுப்படுத்த அரசாங்கம் மீண்டும் வலுவான பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். “சுகாதார அமைச்சு இனியும் தாமதிக்கக்கூடாது. நிக்கோட்டினை மீண்டும் விஷச்சட்டத்தின் கீழ் சேர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று சுப்பாராவ் கூறினார்.

– NST (15 மே 2026) செய்தியிலிருந்து தொகுத்து மொழிபெயர்க்கப்பட்டது.